Thursday, June 4, 2009

குடகு மலைப்பயணம் - 2ஈ

மூன்றாம் நாள் காலை வீராச்பெட்டில் நல்லவிதமாக விடிந்தது. சாலையின் இருபக்கங்களிலும் காப்பித்தோட்டங்கள் வேலியாய் அமைந்துவர, நாங்கள் முதலில் சென்ற இடம் துபாரே யானைகள் முகாம். அந்த இடத்தில் வனத்துறை மூலம் யானைகள் பராமரிக்கப்படுகின்றன. பிரசித்தி பெற்ற மைசூர் தசராவிற்கும் அங்குதான் யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றன; விழாவில் இராசநடை போட்டு அவைகளும் வலம்வருகின்றன. காலை நேரத்தில் யானைகள் நதிக்கரைக்கு அழைத்து வரப்பட்டு யானைபாகர்களால் குளிப்பாட்டப்படும். ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தினால் பொது மக்களாகிய நாமும் அவற்றை குளிப்பாட்டலாம். இந்த வாய்ப்பெல்லாம் எப்போதாவதுதான் கிடைக்கும்; ஆதலால் நாங்கள் அவற்றை குளிப்பாட்ட பணம் செலுத்தி யானைகளின் வரவிற்காக காத்துக்கொண்டிருந்தோம்.


மாமிச மலைகளும் வந்தன. அவ்வளவு அருகில் பார்க்கவே பிரமிப்பாக இருந்தது. யானை பாகர்கள் மற்றும் வனத்துறை அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் சரியான இடத்தில் நின்றுகொண்டு அவற்றை குளிப்பாட்டி மகிழ்ந்தோம். குட்டி யானைகளை கண்டபோது அதிக மகிழ்ச்சியாக இருந்தது. குட்டிகள் தங்கள் தாய்களோடு முட்டிமுட்டி விளையாடுவது பார்க்க விருந்தாக இருந்தது. அவை நம்மை நோக்கி ஒடிவராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், அவை மெதுவாக முட்டினாலும் நம்மால் வலி தாங்கமுடியாது. குளியலிற்கு பின்னர் உணவு அளிக்கும் நேரம். அவற்றை யானைபாகர்கள் மட்டும்தான் அளிக்க முடியும்.



களி உருண்டைகளை அவைகள் ஆனந்தமாக முழுங்கிக்கொண்டிருந்தன. சுதந்திரத்தை பறிகொடுத்ததால் மனிதன் அளிக்கும் உணவைதான் அவை உண்ணவேண்டும். தங்கள் விருப்பம்போல எங்கும் சென்று வேண்டியதை செய்ய முடியாது.

துபாரே முடித்து நாங்கள் சென்றது காவேரி நிசர்கதாமா என்னும் இடம். இந்த இடத்தில் மான்களும், முயல்களும் இன்னும் பிற உயிரினங்களும் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. ஏனோ இந்த இடம் மனதில் நிறைவாக நிற்கவில்லை. மதிய உணவை மட்டும் அங்கே முடித்துக்கொண்டு இறுதி இடமாகிய திபெத்திய மடமுள்ள பயிலக்குப்பே நோக்கி சென்றோம்.


இந்த இடத்தை பற்றி முதல்முறை சென்றபோதே குறிப்பிட்டுள்ளேன். இம்முறை மக்கள் நெரிசல் மிகவும் குறைவாக இருந்தது. சில மணிநேரங்கள் அங்கே கழித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

மூன்று நாட்கள் நிறைவுபெறும் நிலையில் இருந்தது. பல முக்கிய இடங்களை மூன்று நாட்களில் காணமுடிந்தது. ஒரு சில இடங்கள் விடுபட்டுவிட்டன. அவைகளை மற்றொரு சந்தர்ப்பத்தில் பார்க்க முடியும் என்கின்ற நம்பிக்கை இருந்தது. எத்துனை முறை வேண்டுமானாலும் சலிக்காமல் குடகிற்கு நான் செல்வேன் என்பதையும் உறுதியாக நம்புகின்றேன். சுகமான பல நல்ல அனுபவங்களை அளித்த குடகிற்கு மானசீகமாக நன்றிகூறிக்கொண்டு பெங்களூரு நோக்கி பயணத்தை துவங்கினோம். இரண்டாம் குடகு பயணமும் நிறைவாக அமைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.


Wednesday, June 3, 2009

குடகு மலைப்பயணம் - 2இ

தடியண்டமோல் – குடகு மலையிலுள்ள உயர்ந்த மலைஉச்சி ஆகும். மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு இடம். நடந்துதான் செல்ல முடியும். உச்சிக்கு சென்றுவர சாதாரணமாக ஆறு மணிநேரமாவது ஆகும். மழைகாலமாக இருந்தால் வழியெங்கும் இரத்தம் சுவைக்கும் அட்டை பூச்சிகள் நிறைந்திருக்கும். அவற்றை நினைத்தாலே மனதினுள் பயம் எப்போதுமே உண்டு. நல்லவேளையாக நாங்கள் சென்ற காலத்தில் அவை எதுவும் இல்லை என்று கேள்விபட்டதால், நிம்மதியாகவும், ஆசையாகவும் உச்சி நோக்கி நண்பர்களுடன் செல்ல ஆரம்பித்தேன். இதற்கு முன்னர் எங்கள் நண்பர் ஒருவருக்கு உடல் நலமில்லாமல் சென்றுவிட்டது. ஆகையால் செல்லும் வழியில் சிறிய மருத்துவமனையில் ஓய்வும், மருந்துகளும் கொடுத்து உடல் நிலையை தேற்றி தடியண்டமோல் நோக்கிய பயணத்தை தொடர்ந்தோம்.

மலை அடிவாரத்தில் உள்ள பேலேஸ் எஸ்டேட் என்னும் இடத்தில் எங்கள் விசையுந்துகளை நிறுத்திவிட்டு, அவர்களிடம் செல்லும் வழிகேட்டு அறிந்துகொண்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். அப்போதே மதியம் மணி மூன்றாகிவிட்டது. உச்சி சென்றுவர ஆறு மணி நேரமாவது ஆகும் என கேள்விபட்டுள்ளோம். இருளில் சென்றுவருவது என்பது மிகவும் சிரமமான விடயமாகும். ஆகையால் எவ்வளவு விரைவாக சென்றுவர முடியுமோ அவ்வளவு விரைவாக சென்றுவர முடிவு செய்து வேகவேகமாக மலையேர துவங்கினோம்.



அழகான காட்சிகள் கண்முன் விரிந்த வண்ணம் இருந்தன. ரசித்து கொண்டே ஏறிக்கொண்டிருந்தோம். எங்கள் மலையேறும் ஆசையில் சுமார் 60 சதவிகிதம்தான் முடித்திருப்போம். நேரம் பார்க்கையில் இருள்வர ஒரு மணிநேரம்தான் இருந்தது. இதற்கு மேலும் மலையில் ஏறிக்கொண்டிருந்தால் கீழிறிங்க முடியாது என்று தோன்றியதால், சிறிது நேரம் அந்த உயரத்திலேயே அமர்ந்து அழகினை ரசித்து கொண்டிருந்தோம்.



அனைவருக்கும் அந்த அழகினை காண்பிக்க பல புகைப்படங்களும் எடுத்துக்கொண்டோம். சில மணித்துளிகள் மகிழ்வாக அங்கே கழித்துவிட்டு கீழிறங்க ஆரம்பித்தோம். எஸ்டேட் வந்துசேரும்போது இருட்டியேவிட்டது. இன்னும் இரண்டு மணிநேரங்கள் கிடைத்திருந்தால் உச்சிக்கு சென்று வந்திருக்கலாம். சில காரணங்களால் சில மணித்துளிகள் எங்களுக்கு விரயமானது.மற்றொரு முறை அந்த வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை என்னுள் இருந்தது. அந்த எஸ்டேட்டில் இரண்டு நாட்கள் தங்கிச்செல்ல மும்பையிலிருந்து வந்திருந்த ஒரு வயதான தம்பதியோடு அளவளாவிக்கொண்டிருந்தோம். அங்கு வந்ததில் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறினர். அந்த சூழலும், அமைதியும் ஒரு புத்துணர்ச்சி அளிப்பது போல இருப்பதாக கூறினார்கள். அதுவும் உண்மைதான். அங்கு நிலவும் நிசப்தமும் நமது வாழ்க்கைக்கு ஒரு புதுவித அர்த்தத்தை அளிக்கின்றது. இயந்திர வாழ்விலிருந்து விடுபட அந்த மாதிரியான சூழல் மிகவும் சிறந்ததாகும். பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் சென்றதே தெரியவில்லை. அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு வீராச்பெட் நோக்கி பயணமானோம்.