Friday, May 29, 2009

குடகு மலைப்பயணம் - 2ஆ

கிழக்கே கடற்கரையில் காலை சூரிய உதயத்தை பார்ப்பது வெகு அழகு. சென்னையில் இருந்தாலும் வெகு குறைவான எண்ணிக்கையிலேயே அவ்வாறான உதயத்தை காணும் வாய்ப்பு பெற்றுள்ளேன். அதற்கு பதிலாக, இம்முறை மேற்கே மலைத்தொடர்களின் நடுவினில் வித்தியாசமான அழகுடன் கூடிய சூரியோதயம் காணும் வாய்ப்பு கிடைத்தது. முகத்தில் அறைந்தார்போல வீசிய சில்லென்ற காற்றும், அதிகாலை சூரியனும் அந்த உயரத்தில் ஓர் இனம்புரியாத மகிழ்ச்சியை மனதினுள் அளித்தது என்றால் அது மிகையாகாது.


மெல்ல மெல்ல பசுமை காட்சிகள் கண்முன் விரிந்துகொண்டிருந்தது. இருளில் ஒரு மலைத்தொடராக தெரிந்தவை, வெளிச்சம் வரவர பல அடுக்கு தொடர்களாக தங்கள் உண்மை நிலையினை எங்கள் சிறு கண்களுக்கு காட்டத்தொடங்கின. இயற்கையின் படைப்பில் மனிதர்கள் நாமெல்லாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை அந்த அதிகாலை காட்சிகள் உணர்த்தியது.



அந்த அழகினை ரசித்து கொண்டிருக்கவே தோன்றியது; நேரம் பார்க்க தோன்றவேயில்லை. ஆசைதீர அந்த இடத்தில் காலைப்பொழுதினை கழித்தோம். அந்த ஆனந்தமெல்லாம் அனுபவிக்க வேண்டும்; எந்தவிதமான வார்த்தைகளும் அதனை வெளிப்படுத்த இயலாது. வெகு நேரம் அங்கிருந்துவிட்டு, தடியண்டமோல் நோக்கி பயணமானோம்.

Thursday, May 28, 2009

குடகு மலைப்பயணம் - 2அ

எங்களின் ஆராய்ச்சிகூடத்து நாட்கள் எண்ணப்பட்டு கொண்டிருந்தன. ஒருசில மாதங்களில் நாங்கள் ஒவ்வொருவராக அங்கிருந்து வெளியேரும் தருணம் வந்துவிடும் என தெரியும். அதற்குள் எங்காவது விசையுந்து பயணம் சென்று வரவேண்டும் என எங்களுக்குள் ஒரு அவா. அதற்கு பல மாதங்களுக்கு முன்னர் சென்றுவந்த பயண அனுபவமும் அது அளித்த மகிழ்ச்சியும் மனதில் பசுமையாக இருந்தன. இம்முறையும் மூன்று நாட்கள் விடுமுறை வந்ததால் பயணம் சென்றுவர முடிவு செய்தோம். எங்கு செல்லலாம் என யோசிக்கும் போது குடகு செல்லலாம் என நண்பர்கள் கூற, எனது மகிழ்ச்சிக்கு அளவா கேட்க வேண்டும். எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இம்முறை தங்குவதற்கு எந்த முன்பதிவும் செய்யவில்லை. அங்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று நண்பர்கள் கூறிவிட்டனர்.

திட்டமிட்டபடி ஐந்துபேர் மூன்று விசையுந்துவில் காலை ஆறு மணிக்கு முன்னர் பெங்களூரைவிட்டு புறப்பட்டோம். காலையில் விசையுந்துவில் செல்வதே ஒரு தனிசுகம்தான். அதுவும் வாகனம் ஓட்டிச்சென்றால் மிகவும் சுகமாக இருக்கும். எனக்கு பின்னிருக்கைதான் கொடுக்கப்பட்டது. ஓட்டுனரின் மகிழ்ச்சியை இழந்த நிலையில் வேறுவழியின்றி பின்னால் அமர்ந்து இயற்கை அழகை ரசித்துக்கொண்டு செல்ல ஆரம்பித்தேன். இதற்கு முன்னர் சென்றது இரவு நேரமாதலால் மலைப்பிரதேச பயணத்தை அவ்வளவாக அனுபவிக்க முடியவில்லை. இம்முறை பகல்நேர பயணம். மலையில் செல்ல செல்ல கண்முன் விரிந்த காட்சிகள் கண்ணிற்கு விருந்தாக அமைந்தன என்று சொன்னால் மிகையாகாது. சில இடங்களில் நிறுத்தி பசுமை படர்ந்த பள்ளத்தாக்கை ரசித்தோம். புகைப்படங்களும் எடுத்துக்கொண்டிருந்தோம்.

எங்களின் முதல் செல்லிடம் அப்பே நீர்வீழ்ச்சி. நாங்கள் முதன்முறை சென்றபோது பாலத்திலிருந்தே பார்த்து வந்தோம். இம்முறையும் அருவிக்கு அருகில் செல்லும் வழி இரும்பு கதவினால் மூடப்பட்டிருந்தது. எனினும், எங்களுக்கு முன்பே பலர் வேறுவிதமாக கீழிறங்கி அருவியில் கால் நனைத்தவாறு இருந்ததால், நாங்களும் கதவேறி குதித்துவிட்டோம்.




இதற்கெல்லாம் பயப்படும் நானும், இம்முறை ஏறிகுதித்து அருவியின் அருகில் சென்றேன். அதன் சுகமே தனிதான். என் நண்பன் புகைப்படங்கள் எடுப்பதில் மும்முரமாகிவிட்டான். அருகில் சென்றதால் பல நல்ல படங்கள் எங்களுக்கு கிடைத்தது. அருவியில் தண்ணீர் அதிகமாக இல்லை. சில மணி நேரம் அங்கே இருந்துவிட்டு, பாகமண்டலா நோக்கி பயணமானோம்.

மாலைநேர ஆதவன் பூமியின் மறுபகுதிக்கு பயணமாகி கொண்டிருந்தான். அவனது செங்கதிர்கள் காணும் இடமெங்கும் ஒருவித மயக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தன. அந்த அழகினை நண்பனின் புகைப்படக்கருவி உள்வாங்கிக்கொண்டது.



காட்சிகளை ரசித்துக்கொண்டே பாகமண்டலா சென்றடைந்தோம். எங்களின் நல்லநேரம், கர்நாடக அரசு நடத்தும் உணவகம் கூடிய தங்கும் விடுதியில் அறை காலியாக இருந்ததால், அங்கேயே தங்கி ஓய்வெடுத்தோம்; எங்களின் திட்டப்படி மறுநாள் காலை ஆதவன் உதயமாகும் நாழிகையில் தலைக்காவேரியில் இருப்பதே. அதன்படியே அதிகாலை மலையழகை காண தலைக்காவேரியுடன் நாங்கள் ஐக்கியமானோம்.

Thursday, May 7, 2009

இல்லங்களில் ஏனிந்த சண்டைகளோ???

“எங்க அப்பவுக்கும் எனக்கும் பயங்கர சண்டை”; “எங்க அம்மா என்ன சொன்னாலும் புரிஞ்சிகவே மாட்டேன் என்கிறார்கள். நல்லா கத்திட்டு வந்துவிட்டேன்.” இந்த மாதிரியான விசயங்களை நாம் ஒருமுறையாவது கேட்டிருப்போம்; இது போன்ற சூழ்நிலையையும் தாண்டி வந்திருப்போம். இது வளர்ந்த பிள்ளைகள் உள்ள வீடுகளில் பெரும்பாலும் நடக்கும் ஒன்று. ஏன் இப்படி? என் முன்னே பலமுறை வந்துசெல்லும் ஒரு கேள்வி இது.

பிள்ளைகள் பதின்ம வயது அடையும்போது அவர்களுக்கும் அவர்தம் பெற்றோர்க்கும் இடையே இவ்வாறான கருத்துவேறுபாடுகள் ஆரம்பிக்கும். அப்போது தொடங்குவது ஒருவித வயதுகோளாறினால் என்று சொல்லலாம். ஆனால் அதற்கு பின்பும் இந்தவித பிரச்சனைகள் வராமல் இல்லை. தலைமுறை இடைவெளியின் காரணமாக கருத்து வேறுபாடுகள் கண்டிப்பாக வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆனால் அதனை சம்பந்தப்பட்டோர் நேருக்கு நேர் பேசிக்கொண்டால் எப்படியும் தீர்த்துக்கொள்ளலாம். அதனை விடுத்து அவரவர்களும் தங்கள் கருத்திலேயே விடாப்பிடியாக நின்றுகொண்டிருந்தால் பிரச்சனை தீராமல் சண்டையில்தான் முடியும். பல இல்லங்களில் இதுமாதிரியான சூழல் நீடிக்கிறது. இதன் காரணமாக உறவுமுறைகளில் ஒருவித இடைவெளி ஏற்பட்டுவிடும். ஒரு சில நேரங்களில் “நான் சொன்னால் உன் பிள்ளை கேட்கமாட்டான்(ள்), நீயே கூறிவிடு” என பெற்றோரும், “நான் என் அம்மாவிடம்தான்/ அப்பாவிடம்தான் எதையுமே கூறுவேன், மற்றவரிடம் கூறினால் சண்டைதான் வரும்” என பிள்ளைகளும் ஒரு வட்டத்திற்குள் சிக்கிவிடுகிறார்கள். இப்போது இருக்கும் தனிக்குடித்தின முறையில் வீட்டில் இருப்பதே அதிகபட்சமாக நான்கு பேர்தான்; அதனில்லும் குழுக்களாகி போய்கொண்டேயிருந்தால் எங்கே செல்கிறோம் என்றே புரியவில்லை. இருக்கும் சிறு வட்டத்திற்க்குள் இன்னுமொரு குறுகிய வட்டம். விசாலமாகவேண்டிய மனம் ஏனோ குறுகிகொண்டே போகின்றது. இதன் விளைவு மிகவும் அபாயகரமானதாக இருக்கும்.

அனைவருக்குமே மற்றவரை குறைகூறுதல் மிகவும் எளிது. ஆனால் இன்று குறைகூறும் பிள்ளைகள் தங்களுக்கு ஒரு பிள்ளை பிறந்து அவர்கள் அந்த பெற்றோருடன் சண்டையிடும் போதுதான் பெற்றோரின் வலி தெரியும். பிள்ளைகளாய் பெற்றோர் மீது பழி சுமத்தலாம்; சண்டையிடலாம்; பேச்சினையும், உறவினையுமே முறித்துக்கொள்ளலாம். இளமை செருக்கினால் இதனை செய்கிறார்கள். வாழ்க்கை ஒரு சக்கரம் என்பதை அவர்கள் அப்போது புரிந்துகொள்வதில்லை. அந்த பிள்ளைகளும் பெற்றோராகி அவர்தம் பிள்ளைகள் அவ்வாறு நடக்கும் சமயத்தில், தாங்கள் செய்த பிழையை எண்ணி வருத்தப்படலாம். ஆனால் அதனை சரிசெய்து அன்பு பாராட்ட அவர்தம் பெற்றோர் இருப்பார்களா என்பது சந்தேகமே. காலம் வெகுவேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சுயநலத்தாலும் வரட்டு பிடிவாதத்தினாலும் உறவுகளை இழப்பது வாழ்க்கையின் அர்த்தத்தை இழப்பது போன்றது. ஆறரிவு பெற்ற மனிதராக பிறந்துவிட்டு இவ்வாறான தவறை செய்வது முறையே இல்லை.

நாம் யாருமே மரணமின்றி நிலையாக இவ்வுலகில் வாழ்ந்துவிட போவதில்லை. அனைவருமே சில காலங்கள்தான் வாழப்போகிறோம். இருக்கும்போது அன்பு பாராட்டாமல் மறைந்தபின் சொல்லி அழுது என்ன பயன்? உயிரற்ற உடலோடு பேசி என்ன பயன்? போனவர் திரும்பி வரப்போவதில்லை. வாழ்நாள் முழுவதும் அந்த வடு மனதில் இருந்து கொண்டேயிருக்கும். அதுவும் பெற்றோர் – பிள்ளைகள் எனில் அதன் தாக்கம் சொல்லி புரிந்து கொள்ளமுடியாது. சரியாக யோசிக்காமல் தவறான முடிவு எடுத்துவிட்டு வாழ்க்கை முழுதும் வருந்தி என்ன பயன்? நம்மோடு இருப்பவர்களோடு மனம்விட்டு பேசுவோம். எதையுமே ஒருவித நடுநிலையோடு யோசிப்போம். நம் கருத்தில் நியாயம் இருப்பின் அதனை சரியான முறையில் மற்றவர்களுக்கு புரிய வைப்போம். புரிய வைப்பதிலும், புரிந்து கொள்ளுதலிலும்தான் வாழ்க்கையின் நிலையான மகிழ்ச்சி உள்ளது. விரோதம் தவிர்த்து அன்பு பாராட்டுவதில்தான் வாழ்வின் அர்த்தம் அடங்கியுள்ளது. வாழ்க்கை வாழ்வதற்கே. இந்த தரணியில் இருக்கும்வரை நம் வாழ்வை நல்லவிதமாக வாழ்வோம்.

Monday, May 4, 2009

கிறுக்கல்கள்

சதையில்லா எலும்பினைபோல
சிறகொடிந்த பறவையைபோல
காய்ந்த சருகுகளும் விட்டகல
தன் நிர்வாணத்தை மறைத்துக்கொள்ள
வெள்ளாடையை சிலநாட்கள் உடுத்தி
காலம்மாறும் என்ற நம்பிக்கையில்
உயிரை உடலில் தாங்கிநின்று
குளிர்காலம் முடிந்த பொழுதில்
இயற்கை விதிப்படி காலம்மாற
ஞாயிறும் நீர்த்துளிகளும் உதவ
மறுசென்மம் எடுத்த நோயாளிபோல
புத்துயிர் பெற்று பொலிவுடன்
பல வண்ணங்களில் உடையுடுத்தி
மகிழ்ந்தும் பிறர்க்கு மகிழ்ச்சியளிக்கவும்
தலையாட்டி சீட்டியடித்து அழைத்தன
எனது மாளிகை வாசலில்
வரிசையில் நின்றிருந்த மரங்கள்.