Friday, December 11, 2009

புறப்பட்டுவிட்டேன்

நினைக்கையில் எனக்கே ஆச்சிரியமாக உள்ளது. இப்போதுதான் இந்த நாட்டிற்கு வந்ததுபோல உள்ளது; அதற்குள் ஓராண்டு முடிந்து கிளம்பிவிட்டேன். மனம் மகிழ்ச்சியாய் இருந்தால் நாட்கள் செல்லும் வேகமே தெரியாது என்பர். அதனை இப்போது நான் உணர்ந்தேன். இதற்கு எதிர்மறையாக இதற்கு முந்தைய ஆண்டு சென்றது. அப்போது தென்கொரியா வாசம். அந்த நாட்களில் எப்போது ஒவ்வோரு மாதமும் முடியும், எப்போது அந்த இடத்தை விட்டு வீட்டிற்கு திரும்புவேன் என்று எண்ணாத நாட்களே இல்லை எனலாம். எந்த அளவிற்கு புலம்பியுள்ளேன் என எனது நண்பர்கள் கூறுவார்கள். ஏனோ எந்த விதத்திலும் அந்த நாட்டில் இருந்தபோது மனம் மகிழ்வாகவோ, அமைதியாவோ இல்லை. அதற்கு எனது வேலையில் ஏற்பட்ட தொடர் தோல்விகள் ஒரு முக்கிய காரணம் எனலாம். மனதில் எந்நேரமும் ஒருவித பயத்துடன் பழகிய நாட்கள் அவை. எனது நெருங்கிய நட்பு வட்டாரமும், அங்கு கிடைத்த சில அருமையான நண்பர்களாளும் எப்படியோ அந்த ஆண்டை முடித்துக்கொண்டு அதற்கடுத்து பிரான்ஸ் வருவதை உறுதிபடுத்திக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

பிரான்ஸ் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என என் நண்பர்கள் கூறியிருந்ததால் மனதில் ஒருவித நம்பிக்கையுடனே வானூர்தி ஏறினேன். எனினும், மனதில் எந்தவித எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. பழைய அனுபவம்; எதிர்பார்ப்புடன் வந்து ஏமாற்றமடைய மனதில் தைரியம் இல்லை. ஆனால், இந்த வாழ்க்கை மிகவும் அமைதியாக இருந்தது. இங்கும் எடுத்த பணியில் சிக்கல்கள் இருந்தது. எனினும் அதனை எதிர்நோக்கவும், தவறு செய்யும்போதோ, குழம்பி தவிக்கும்போதோ நல்லவிதமாக ஆலோசனை கூறவும் சுற்றிலும் மக்கள் இருந்தனர். சிக்கல்களை புரிந்து கொண்டனர். அதுவே மிகவும் உற்சாகமூட்டுவதாகவும், தைரியமளிப்பதாகவும் இருந்தது.

கிடைத்த மகிழ்ச்சியில் நாட்கள் சென்றதே தெரியவில்லை.ஓராண்டு முடிந்துவிட்டது. இங்கிருந்து கிளம்ப வேண்டிய நேரமும் வந்து கதவை தட்டிக்கொண்டிருக்கிறது. நல்லவேளையாக அடுத்து எங்கு, என்ன என்பதற்கு விடை கிடைத்துள்ளது. சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர்கூட தோன்றாத எண்ணம் இப்போது அதிகமாகியுள்ளது. எப்போது வீடு வருவேன் என்ற எண்ணம். இதோ கிளம்பிவிட்டேன். அம்மாவின் சமையலை சுவைக்க, அப்பாவை பல இடங்களுக்கும் அழைத்துச்செல்ல, சொந்தங்களையும், நட்புக்களையும் காண புறப்பட்டு விட்டேன். இந்த தனிமையிலிருந்து சில நாட்களுக்கு விடுதலை. திங்கள் காலை சென்னையில். நினைக்கையில் மகிழ்வாக உள்ளது.

வீட்டினை ‘மிஸ்’ பண்ணவில்லையா என்றனர் சிலர். மூன்று வாரங்களுக்கு முன்புவரை ‘மிஸ்’ பண்ணவில்லை. இணையத்தின் வழியாக தினமும் பெற்றோருடன் பேசிக்கொண்டிருந்ததால் அதிகமாக ‘மிஸ்’ பண்ணவில்லை. ஆனால், இப்போது மனதிலே எப்போது வீடுவருவேன் என்ற எண்ணம் பரவியுள்ளது. ஐரோப்பாவை ‘மிஸ்’ செய்வேனா என்றனர் நண்பர்கள். ஆம் கண்டிப்பாக ‘மிஸ்’ பண்ணுவேன். பல விடயங்கள் பிடித்திருந்தது; அதற்காக உறவுகளை எல்லாம் விட்டுவிட்டு இங்கேயேவெல்லாம் இருக்க முடியாது. இன்னும் சில இடங்களை கண்டுவிட்டு செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். முக்கியமாக சுவிட்சர்லாந்து, ரோம் நகரம். அது மட்டும் முடியவில்லை. நேரமும் வாய்ப்பும் அமையவில்லை. அந்த வருத்தத்தை மனதில் சுமந்துக்கொண்டு வேறுவிதமான மகிழ்ச்சியை தேடி சென்னையை நோக்கி செல்கின்றேன்.

- எழுதியது 29-11-09


இதோ வந்துசேர்ந்து பத்து நாட்களாகிவிட்டது. சென்னை மழையும் தனது தனித்தன்மையை காட்டிக்கொண்டிருக்கிறது. பலவிதமான பயண அனுபவங்களும் ஆரம்பமாகிவிட்டது. செல்லவேண்டிய இடங்களும், செய்துமுடிக்க வேண்டிய காரியங்களும் இம்முறை சற்று அதிகமாக உள்ளது. எப்போதும்போல மகிழ்வுடன் அவற்றை துவங்கிவிட்டேன். வேறு சில ஆசைகளும் உள்ளது- இணையத்தில் எழுத்துகளாய் மட்டுமே பார்த்த சிலரை கண்டு கலந்துரையாடவேண்டும், தொடர்ந்து வாசிக்கும் chennaitrekkers.org குழுவினருடன் சில இடங்களுக்கு செல்ல வேண்டும், இன்னும் சில. எனினும், முடியுமா என்று தெரியவில்லை. எவையெல்லாம் சாத்தியப்படுகின்றது என்று பார்க்கவேண்டும். வாய்ப்புகள் இருந்தாலும் இணையத்தில் செலவழிக்கும் நேரத்தை குறைத்துவிடுவேன் என்பது மட்டும் எனக்கு சாத்தியமான ஒன்று. இருக்கும் இந்த சில நாட்களை தனிமையை தவிர்த்து அதிகமாக மக்களோடு செலவழிக்க விரும்புகிறேன். ஏனெனில் இந்த விடுமுறை நாட்களும் எப்போதும் போல வேகமாக சென்றுவிடும்.

இப்போதும் ஓராண்டு முடிந்துவிட்டதென்று நம்பமுடியவில்லை...

- எழுதியது 09-12-09

Wednesday, November 25, 2009

அடப்போங்க மக்கா....


காட்சி - 1

என்ன அவனுக்கு ஏதாவது வரன் வந்ததா?

எங்க...ஒன்னும் சரியா அமையமாட்டைங்குது.

அவன் ரொம்ப எதிர்பார்க்கிறான். இந்த காலத்தில பெண் கிடைப்பதே ரொம்ப சிரமமாயிருக்கு; அவன் என்னன்னா இப்படி வேண்டாம், இந்த படிப்பு வேண்டாம்னு சொல்லிக்கிட்டு இருக்கான். அவன் கேட்கிற மாதிரியெல்லாம் பெண் கிடைக்காது. எல்லா விடயங்களும் ஒத்துப்போகாது. ஏதோ ஓரளவு ஒத்துப்போச்சுன்னா அதை முடிச்சிடனும். அதை விட்டுட்டு இப்படித்தான் பெண் வேண்டும்னா இப்படியே இருக்க வேண்டியதுதான் கடைசிவரைக்கும். கல்யாணமே நடக்காது. அவனுக்கு நீங்கதான் எடுத்துச்சொல்லனும்.

எனக்கும் அதுதான் கவலையா இருக்கு.


காட்சி - 2

தம்பி. இன்னைக்கு அவங்க பேசிக்கிட்டிருந்தாங்க.

ஓ...எப்படி இருக்காங்க? என்ன சொல்றாங்க?

அவங்க நல்ல இருக்காங்க. உன் திருமணத்தை பற்றித்தான் விசாரிச்சாங்க.

ஓ...

உன்னோட எதிர்பார்ப்புகள் அதிகமா இருக்காம். அப்படியெல்லாம் எதிர்பார்க்கிற மாதிரி கிடைக்காதாம். வருகின்ற வரன்ல ஏதாவது ஒன்றை முடிக்க சொல்றாங்க.

ம்..இது என்ன கடைக்கு போய் துணி வாங்கவருவது மாதிரி நினைத்து கொண்டு சொல்கிறார்களா? கிடைத்ததை முடிங்கறதிற்கு. துணிகூட பிடித்தால்தான் வாங்கறோம். அப்படி இருக்கும்போது இது வாழ்க்கைத்துணை. அவங்க பிள்ளைகளுக்கெல்லாம் எப்படி பார்த்தாங்கனு நமக்கு தெரியும்ல. அவங்களும் பயங்கர செலக்டிவ்வாதானே இருந்தாங்க/இருக்காங்க. ஒவ்வொரு விடயத்தையும் தேடித்தேடிதானே பார்த்தாங்க/பார்த்துகிட்டிருக்காங்க. எந்த அளவுக்கு சமரசம் செய்துகொண்டாங்க. அவங்க பிள்ளைகளுக்குனா அப்படியெல்லாம் தேடி வரன் பார்க்கலாம். ஆனால், நான் கொஞ்சம் படிப்பிலே செலக்டிவ்வா இருக்கறது தப்பா?

என்ன செய்வது? நீ கேட்கிறது போல கிடைக்க மாட்டைங்குதே. அதான் சொல்றாங்க.

கிடைக்கும், கவலைப்படாதீங்க. வாழ்க்கையில் சமரசம் செய்து கொள்ளலாம்; அதற்கு நான் எப்பவும் தயார். ஆனால் மற்றவர்களுக்காக வாழ்க்கையையே சமரசமா ஆக்கிக்க முடியாது. இந்த விடயத்திலும் நிறைய சமரசம் செய்துவிட்டேனென்று உங்களுக்கே தெரியும். நான் அவர்களின் கல்வித்துறை சார்ந்த விடயத்தில் மட்டும்தான் எதிர்பார்ப்போடு இருந்தேன்/இருக்கேன். அந்த எதிர்பார்ப்பு கூட இருக்கக்கூடாதுனா எப்படி? என்ன, இதனால் வரன் கிடைக்க எனக்கு கொஞ்சம் தாமதமாகுது. காத்திருக்கும் நாட்கள் அதிகமாகுது. அவ்வளவுதான்.

சரி..எப்ப நேரம் வருகின்றதென்று பார்ப்போம்.

கண்டிப்பா வரும். நீங்க தைரியமா நம்பிக்கையோட இருங்க.

(ஏன் இப்படி தம் பிள்ளைகளின் (மகன்/மகள்) எதிர்பார்ப்பு எப்போதும் சரியென்பது போலவும் மற்ற பிள்ளைகளின் எதிர்பார்ப்பு எல்லை மீறியது என்பது போலவும் சிலர் மனதில் எண்ணம் ஏற்படுகின்றது என்று எனக்கு புரியவில்லை. தனக்கொரு நியாயம் பிறர்க்கொரு நியாயமா? அடப்போங்க மக்கா...)

Monday, November 9, 2009

ஐரோப்பாவில் கோடை விடுமுறை - ஈ

பெல்சியம் நாட்டிலுள்ள தோழியை காண இதற்கு அடுத்த வாரயிறுதியில் பயணித்தேன். நான் சென்ற அடுத்த நாள் பெல்சியம் நாட்டின் தலைநகரான புரூசல்ஸ் சுற்றிப்பார்க்க சென்றோம். தோழியின் தாயாரும் வந்திருந்ததால் மூவரும் சென்றோம். இங்கும் சுற்றுலா துறையின் ஹாப் ஆன் – ஹாப் ஆப் பேருந்தில் ஒரு நகர சுற்றுலாவினை முதலில் முடித்தோம். இந்த சுற்றின் கடைசி நிறுத்தமான ராயல் அரச மாளிகை எங்களின் முதல் நிறுத்தமானது. மாளிகையின் உள்ளே சென்று பார்த்தோம். நன்றாக பராமரிக்கின்றனர். உள்ளே புகைப்படங்கள் எடுக்கமுடியாது; ஆகையால் அவற்றை ரசித்து மனதினில் உள்வாங்கிக்கொண்டு வருவதுதான் ஒரே வழி. பல விடயங்கள் பிரம்மாண்டத்தை அளித்தது. அங்கே தொங்கவிடப்பட்டிருந்த சாண்டிலியர் விளக்குகள்கூட பிரம்மாண்டததை அளித்தது என்பது உண்மை. உள்ளேயே அறிவியல் அருங்காட்சியகத்தையும் அமைத்துள்ளனர். குழந்தைகள் செய்து பார்க்கவென தனியாக சில விடயங்களையும் வைத்துள்ளனர். நன்றாக இருந்தது.





அங்கிருந்து கிளம்பி கிராண்ட் பிலேஸ் எனும் இடத்திற்கு சென்றோம். நடுவினில் பெரிய வெற்றிடம் விடப்பட்டு அதன் நான்கு பக்கங்களிலும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கட்டிடங்களான அவை பார்ப்பதற்கு புதியது போல பராமரிக்கப்பட்டு வரப்படுவது அதன் சிறப்பு. அவ்வளவு பழமையானவை என்பதை தோழியின் தாயார் முதலில் நம்பவில்லை. எனினும் அதற்கு சான்றுகளாக அங்கிருந்த ஒரு கட்டிடத்தில் கட்டப்பட்ட ஆண்டு பொறிக்கப்பட்டிருந்தது. அந்த இடத்திலுள்ள ஒரு கட்டிடம்தான் நகர மன்றமாக செயல்பட்டு வருகின்றது.



அந்த நகரின் மற்றொரு பார்க்க வேண்டிய இடமாக கூறப்பட்டிருந்த மேனக்கன் பிஸ் என்னும் சிறுவனின் சிலையை கண்டுவிட்டு அங்கிருந்து பார்க் சின்குவாண்டினயர் என்னும் பூங்காவிற்கு சென்றோம். அங்கே கட்டப்பட்டிருந்த நினைவு வளைவு முதல் சுற்றில் பார்த்தபோதே மனதில் இடம் பிடித்துக்கொண்டது. ஆகையால் அங்கே சில நேரம் செலவிட முடிவு செய்தோம். இளைப்பாற நல்லதொரு இடமாக அது அமைந்தது.




அடோமியம் என்னும் இடத்தினை பேருந்திலிருந்தே கண்டோம். அங்கே இறங்கி பார்த்து நேரம் செலவழிக்கவில்லை. அதற்கு பதில் பூங்காவில் சில மணி நேரங்கள் இளைப்பாறினோம். அங்கிருந்து கிளம்பிய பேருந்துதான் அந்த நாளின் கடைசி சுற்றுப்பேருந்தாக இருந்தபடியால் வேறெங்கும் செல்லாமல் அந்த நாளினை முடித்துக்கொண்டு வீட்டினை அடைந்தோம். மறுநாள் தங்கியிருந்த லியுவன் நகரினை சுற்றிக்காண்பித்தார். நகர மன்றங்கள் பல ஊர்களிலும் ஒரே மாதிரியான கட்டிட அமைப்புகளாய் இருந்ததை அங்கே காணமுடிந்தது.



மறுபடியும் சூளிச் சென்று ஒரு வார காலம் தங்கிவிட்டு அந்த வார இறுதியில் எனது இல்லம் வந்தடைந்தேன். பலவகையான இடங்கள், பல்வேறுப்பட்ட மனிதர்கள் என்று நல்ல அனுபவமாக இருந்தது. சில இடங்களை பார்த்தபோதே ஒருவித அமைதியும், மகிழ்ச்சியும் மனதினுள் குடிகொண்டது. அதனோடு நம்மால் ஏன் நமது இயற்கை செல்வங்களை பாதுகாக்க முடியவில்லை, எதனால் தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடிக்க முடியவில்லை, சக மனிதர்களை அவர்கள் செய்யும் வேலையை பார்க்காமல் மனிதர்களாய் மட்டும் பார்க்கும் மனநிலை வரவில்லை போன்ற பல கேள்விகள் எழுந்ததை மறுக்கமுடியவில்லை.

Thursday, November 5, 2009

ஐரோப்பாவில் கோடை விடுமுறை - இ

சூளிச்சிலிருந்து ஒரு நாள் பயணமாக லக்ஸம்பர்க் நகரத்திற்கு/நாட்டிற்கு சென்று வந்தோம். சூமேக்கர் என்னும் ஒரு பயண ஏற்பாட்டாளர் மூலம் இந்த பயணத்தை ஏற்பாடு செய்திருந்தனர் நண்பர்கள். எனவே பயணம் சிறிதளவு எளிதாக இருந்தது. சுமார் மூன்று மணி நேர பேருந்து பயணம். நாங்கள் சென்றது செவ்வாய்கிழமையாதலால் அதிகம் முதியோர்களை எங்கள் பேருந்தில் பார்க்க முடிந்தது. பயணம் துவங்கிய சிறிது நேரத்திலேயே விருந்தாக பல காட்சிகள் கிடைக்கப்போவது உறுதி என்று மனதில் தோன்றியது. இந்த விடயத்தில் தோன்றியது உண்மையாகவே அமைந்தது. வழியின் இரண்டு பக்கங்களிலும் செழிப்பான பசுமை. கூட்டம் கூட்டமாய் சிறு சிறு காடுகள் போல மரங்களும், புல்வெளி மைதானங்களும், விளை நிலங்களும் என்று மாறி மாறி வழியெங்கும் வியாபித்திருந்தது.


சுமார் பன்னிரெண்டரை மணியளவில் அந்த நகரின் மையப்பகுதியில் இறக்கிவிடப்பட்டோம். அந்த இடத்தில்தான் எவ்வளவு சுற்றுலா பயணிகள். பல இடங்களிலிருந்தும் பேருந்துகள் வந்து பயணிகளை இறக்கிவிட்ட வண்ணம் இருந்தன. சுற்றுலா துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நகரசுற்றுலா பேருந்தில் சுற்றிப்பார்க்க சென்றோம்.





ஹாப் ஆன்-ஹாப் ஆப் என்னும் வசதி கொண்ட பேருந்துகள் இவை. அதாவது எங்கு வேண்டுமானாலும் ஏறி-இறங்கிக்கொள்ளலாம். ஆகையால் நமக்கு விருப்பமான இடங்களை இறங்கி பார்த்துவிட்டு அடுத்த பேருந்தில் வந்து கொள்ளலாம். முதலில் சுமார் ஒரு மணி நேரம் முழுநகரையும் சுற்றி வந்தோம். அப்போதே எங்கெல்லாம் திரும்ப வரவேண்டுமென முடிவு செய்துகொண்டோம். நான்கிலிருந்து ஐந்து மணி நேரங்கள் மட்டுமே இருந்ததால் அரச மாளிகை, பூங்கா, கோட்டை என்று முக்கியமான சிலவற்றை மட்டுமே காண முடிந்தது. மாளிகையின் உள்ளே செல்லவும் அந்த நேரம் உகந்தபடியில்லாததால் வெளியிலிருந்து சுற்றிப்பார்த்தோம்.





வார்த்தைகளால் விவரிக்க முடியாத விடயங்களையும் படங்கள் விவரித்துவிடும். எனவே புகைப்படங்களில் அங்கே கண்ட அழகை கையகப்படுத்திக்கொண்டோம். அங்கே கண்ட அழகினைவிடவும் மிகவும் கவர்ந்தது அங்கு சென்ற வழியில் கண்ட பசுமைதான் என்றால் மிகையாகாது. திரும்பி வரும்போது நகரின் வெளியே பேருந்தினை சில நிமிடங்கள் நிறுத்த இயற்கையை ஆற-அமர்ந்து இரசிக்க ஒரு அருமையான வாய்ப்பாக அமைந்தது. கண்டவற்றை அசைபோட்டுக்கொண்டே அந்த நாள் இனிதே நிறைவுற்றது.


ஹான்னோவரிலுள்ள இரண்டு நண்பர்களை காண ஒரு வார இறுதியில் நாங்கள் மூவரும் சென்று வந்தோம். பயணத்தில் அதிக நேரம் செலவானது. அங்கு இருந்ததோ சுமார் 27 மணி நேரங்கள்தான். எனினும் மிகவும் மகிழ்வாக இருந்தது. நாங்கள் ஐவரும் சில வருடங்களுக்கு பின்னர் ஓரிடத்தில் சந்திக்கின்றோம். ஆகையால் பல விடயங்களை அசைபோட்டு, பேசி என்று மகிழ்வாக சென்றது. நினைவில் என்றும் நிலைத்திருக்கும் தருணங்களில் இவையும் ஒன்றாக அமையும்.

Thursday, October 29, 2009

ஐரோப்பாவில் கோடை விடுமுறை - ஆ

கொலோன் நகரிலிருந்து போன் நகரையடுத்த பேட்ஹானாப் என்னும் இடத்திலுள்ள நண்பனை காண சென்றேன். அந்த நகரை சுற்றிப்பார்க்க அடுத்த நாள் கிளம்பிப்போனோம். அந்த ஊரின் வழியே ரைன் நதி ஓடிக்கொண்டிருக்கின்றது. நதியின் இக்கரைக்கும் அக்கரைக்கும் நடுவே பாலம் எதுவும் கண்ணில்படவில்லை. மாறாக படகுகளையே மக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்றனர். மக்கள் பெரும்பாலும் மகிழுந்து வைத்துள்ளனர். கரை தாண்டி செல்ல விரும்புவோர் தங்கள் மகிழுந்துகளை எப்படி எடுத்து செல்வார்கள் என்று யோசிக்கும்போதுதான் அந்த படகின் தன்மை புரிந்தது. வாகனங்கள் வைத்திருப்போர் தங்கள் வாகனத்தினூடேயே படகுகளில் சவாரி செய்கின்றனர். படகு ரொம்ப பெரிசுதான். பாலம் கட்டி பணத்தை செலவுசெய்யாமல் ஒருவித வருமானமாக இதனை பார்க்கிறார்களோ என்று தோன்றியது.



கரையையொட்டியே நடந்துகொண்டிருந்தோம். மறுகரையிலிருந்தே ஒரு பாழடைந்த கோட்டைசுவற்றை கண்டிருந்ததால் அதனை நோக்கி நடந்து கொண்டிருந்தோம். அதற்கு செல்லும் வழியை கண்டுபிடிக்க சிறிது சிரமப்படவேண்டியிருந்தது.ஒருவழியாக அது அமைந்திருந்த சிறுகுன்றின் அடிவாரத்தை கண்டுபிடித்துவிட்டோம்.


அங்கிருந்து பார்த்தபோது அது ஏதோ ஒரு தோட்டத்திற்குள் செல்வதுபோல இருந்தது. எனினும் வேலிகள் எதுவும் இல்லை.அந்த இடத்தில் எந்தவொரு சரியான அறிவிப்பு பலகையோ அல்லது கேட்டுச்செல்ல மனிதர்களோ இல்லை. தொடர்ந்து செல்வதா வேண்டாமா என்ற குழப்பம் சிறிது நேரம். பின்னர் போய்தான் பார்ப்போமே என்று அந்த பாதைவழி ஏற ஆரம்பித்தோம். அருகில் சென்றபோதுதான் அங்கே இருபுறமும் திராட்சை பயிரிடப்பட்டுள்ளது என்பதை கண்டோம்; அது ஒரு வைன்யார்ட் என்று புரிந்தது.





ஓரளவு தூரம் சென்றதும் ஒரு பாதை காட்டுக்குள் செல்வதாக விளம்பரப்பலகை வைக்கப்பட்டிருந்தது. ஆகையால் அந்த பாதையை தவிர்த்து மற்ற பாதையில் சிறிதுதூரம் சென்றோம். கோட்டைக்கு செல்லும் வழி சரியாக புலப்படவில்லை. ஆகையால் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குமேல் செல்லாமல் நின்றுவிட்டோம். அங்கிருந்து கண்ட காட்சிகள் கண்களுக்கு விருந்தாக இருந்தன. சிறிது நேரம் அங்கிருந்து அந்த காட்சிகளை கண்டுரசித்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அடிவாரம் நோக்கி திரும்பிவிட்டோம்.



அடுத்த நாள் போன் நகரை சுற்றிப்பார்க்க சென்றோம். முதலில் சென்றது இசைமேதை பீத்தோவனின் இல்லம். அவர் பிறந்து வளர்ந்த வீட்டை அருங்காட்சியகமாக பராமரித்து வருகின்றனர். அவர் வாழ்க்கை வரலாற்றை அங்கே பார்த்தபோது மிகவும் மகிழ்வாகவும் பிரமிப்பாகவும் இருந்தது. இசைக்கு மயங்காதவர் எவரும் உண்டோ?அவரது இசையை அங்கே கேட்கும் வாய்ப்பும் அமைந்தது. ஒலி ஒளி காட்சிகளாக குறிப்பிட்ட நேரங்களில் அங்கேயே உள்ள ஒரு காட்சியரங்கில் திரையிடுகிறார்கள். முதல்முறையாக அவரது இசையை கேட்டேன். எனினும் என்னை அதனுள் இழுத்துக்கொண்டது என்றால் மிகையாகாது.அவர் இயற்றியிருந்த இசைதொகுதியொன்றிற்கு லேசர் மூலம் ஒளி வடிவம் கொடுத்து நன்றாக செய்திருந்தனர். நான் ரசித்து அமர்ந்திருந்த அந்த இருபது நிமிடங்கள் என்னை எங்கோ இழுத்துச்சென்றது எனலாம்.இசை செய்யும் மாயங்களே கணக்கிட முடியாதது.



உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதியில்லாததால் அங்கே சென்றுவந்ததை பறைசாற்றும் வகையில் அந்த இல்லத்தின் வெளியே புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.




அதன் பின்னர் அந்த நகரில் ஒரு பூங்காவை மட்டும் சுற்றிவிட்டு பல மலர்களை ரசித்துவிட்டு மனை வந்து சேர்ந்தோம். மறுநாள் மறுபடி சூளிச் பயணம்.

Friday, October 23, 2009

ஐரோப்பாவில் கோடை விடுமுறை - அ

மூன்று வார விடுமுறையில் மூயிரண்டு நட்புக்களை காண முடிவெடுத்து மேற்கொண்ட மூன்று நாடுகள் பயணம் முத்தாய்ப்பாய் அமைந்தது. ஐரோப்பாவில் இருப்பதில் ஒரு முக்கிய வசதி ஒரு நுழைவிசைவு (Visa) வைத்துக்கொண்டு மனிதனால் வரைப்படங்களில் வரையப்பட்ட பல கோடுகளை தாண்டிச்செல்ல முடியும். செர்மனியில் மேற்கு பகுதியிலுள்ள சூளிச் (Juelich) என்னும் இடத்தில் உள்ள நண்பன் வீட்டினை அடித்தளமாக முடிவு செய்து அங்கு செல்வதற்காக ஏற்பாடுகளை செய்து முடித்தேன்.

திசான் – பாரி – ஆகன் – தியூரன் - சூளிச் (Dijon-Paris-Aachen-Duren-Juelich) என்பது இரயில் பயண பாதையானது. பயணங்களில்தான் எத்தனை விதமான அனுபவங்கள் நமக்கு கிடைக்கின்றன. இங்கே காணும் சில விடயங்கள் நமக்கு ஆச்சிரியத்தையும், ஆனந்தத்தையும் அளிக்கும். பயணச்சீட்டு பரிசோதகர்கள் ஒவ்வொரு பயணியிடமும் பயணச்சீட்டு வாங்கிப்பார்ப்பதற்கு முன்னர் ஒரு வணக்கத்தையும் பின்னர் நன்றியையும் கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். நான் இதுவரை பார்த்த அனைத்து பரிசோதகர்களும் அனைத்து பயணிகளிடமும் இந்த பழக்கத்தை கடைப்பிடிப்பது ஆச்சிரியம்தான். நமது ஊரிலும் பலமுறை பயணித்துள்ளேன். இவ்வாறான நடவடிக்கைகளை பார்ப்பது மிக மிக அரிது. இங்கே இதனை ஒப்பிட்டு பார்த்தலில் உள்ள ஒரே நோக்கம், நாம் இவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வதாக கூறுவது இவ்வாறான நல்ல பண்புகளை விடுத்து மற்றவற்றை கற்றுக்கொள்வதால் ஏற்படும் கோபமும், வருத்தமுமே. முதல் வகுப்பில் சென்றதால் உணவும் பரிமாறப்பட்டது. அதனை செய்த அந்த நபரின் கவனிப்பும் கவர்ந்தது. என்னதான் அது அவர் வேலையென்றாலும் அந்த வேலை மீது அவர் காட்டிய ஒரு ஈடுபாடு இன்றும் அவரை மறவாமல் இருக்கச்செய்கிறது. அவரது பெயர் அந்தோனி என்று அவரது முத்திரையில் பார்த்த நியாபகம்.

பயணம் நல்லவிதமாக அமைந்தது. என்னை அழைத்துச்செல்ல இரண்டு நட்புக்கள் ஆகன் வந்து காத்துக்கொண்டிருந்தனர். சிறிதுநேரம் ஆகன் நகரை சுற்றிவிட்டு சூளிச் நோக்கி புறப்பட்டோம். சூளிச் ஒரு கிராமம் என்று முன்னரே நண்பன் கூறியிருந்தான். தியூரன் – சூளிச் இரயில் பயணம் சுமார் 25 நிமிடங்கள்.





அந்த வழி நெடுகவும் விளை நிலங்கள்தான் காட்சியளித்தன. வரப்புகளை எளிதில் பார்க்க முடியவில்லை. ஒவ்வொருவரும் பெருவாரியான நிலங்களை வைத்துள்ளனர். பலவற்றில் கோதுமை சாகுபடி முடியும் தருவாயில் இருந்தது. சிலவற்றில் கிழங்குகள் சாகுபடியும் நடந்து கொண்டிருந்தது. இவ்வாறான காட்சிகள் நம் ஊரில் திருச்சி-தஞ்சை-குடந்தை வழியிலும், திருச்சி-கோவை வழியிலும் கண்ட நியாபகம். அங்குகூட இப்போதெல்லாம் அவ்வளவு தெடர்ச்சியாக விளை நிலங்களை காண முடிவதில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கும் விடயம்.

அடுத்த நாள் கலோன் நகர் சென்றோம். இரயில் நிலையத்திலிலிருந்து வெளியில் வந்ததும் கண்டது ஒரு தேவாலயம். UNESCO அமைப்பினால் பாரம்பரிய சின்னமாக மதிப்பிடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது அந்த தேவாலயம். உள்ளே சென்று பார்க்க அப்போது தருணம் அமையவில்லை. எனினும், செர்மனியிலிருந்து பிரான்சு திரும்பும்போது உள்ளே சென்று பார்க்க வாய்ப்பு கிடைத்தது.




அன்று பின்னர் சென்று பார்த்த இடம் உயிரியல் பூங்கா. நன்றாக அமைத்திருந்தனர். சில மணி நேரங்கள் அங்கே செலவழித்தோம்.



(உயிரியல் பூங்காவில் யானைகள் கூடாரத்தில் நேபாள நாட்டு அரசு சார்பில் அளிக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது)

எப்போதுமே நமக்கு அருகில் இருப்பதை பார்க்க நேரம் ஒதுக்குவது கிடையாது. சென்னையில் தாம்பரத்தை சுற்றியே வாழ்ந்து வந்திருந்தாலும் இதுவரை வண்டலூர் பூங்கா சென்றதில்லை. பலமுறை அதன் வழியே சென்றதுண்டு; எனினும் உள்ளே சென்றதில்லை. எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் சிறு வயதில் இருந்ததால் இதுவரையிலும் அங்கே செல்லாமலேயே காலம் சென்றுவிட்டது. இன்றோ அயல்நாட்டிற்கு வந்து சென்றது உயிரியல் பூங்கா. நினைக்கையில் சிரிப்பாகதான் வருகிறது.

அங்கிருந்து வெளியே வரவே மதியம் இரண்டு மணியாகிவிட்டது. எங்களின் திட்டம் ரைன் நதியில் படகு சவாரி செல்வதாகும். சவாரி 3.30 மணியளவில் இருந்ததால் பூங்காவிலிருந்து நேரே படகுத்துறைக்கு வந்துவிட்டோம். ஒரு மணிநேரம் செல்லவும் அதே நேரம் திரும்பி வரவும் என மொத்தம் இரண்டு மணி நேரங்கள் அழகான அனுபவமாக இருந்தது. சிறிது தூரம் சென்றவுடனேயே இரண்டு கரைகளிலும் பசுமையான மரங்களை காண முடிந்தது. ஆங்காங்கே வயது வரம்பின்றி மக்களையும் கூட்டம் கூட்டமாக அமர்ந்து, படுத்து, சாய்ந்து என தங்களுக்கு விருப்பமான முறைகளில் கரைகளில் பொழுதினை அனுபவிப்பதை காணமுடிந்தது. நீர் விளையாட்டுகளிலும் சிலர் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.





சாந்தமாக ஓடிக்கொண்டிருக்கும் நதியால் அந்த பூமி செழிப்புடன் இருப்பதை காணமுடிகின்றது. ஏனோ நம் நாட்டில் அனைத்தையும் இழந்து கொண்டிருக்கின்றோம் என்ற எண்ணம் சங்கடத்தை அளிக்காமல் இல்லை. அயல்நாட்டினர் தங்களின் வளங்களை பாதுகாத்து வருகின்றனர். ஆனால் அவர்களை பார்த்து ஆச்சிரியப்படும் நாமோ இருப்பதை அழித்துக்கொண்டிருக்கின்றோம். அது என்னமோ தெரியவில்லை, நம் மக்களில் பலருக்கு மேலை நாட்டு மோகமும், அவர்களின் வாழ்வியல் முறை மீதும் ஒரு இனம் புரியாத ஈடுபாடு உள்ளது. ஆனால் அவர்களிடம் உள்ள நல்ல விடயங்களை எடுத்துக்கொள்வதில் மட்டும் ஒருவித தடுமாற்றம், பிற்போக்குத்தனம் உள்ளது என்பதை மறுக்க முடியாது. அந்த நாள் அங்கிருந்த இயற்கை அழகை ரசிப்பதில் சென்றது.

Wednesday, October 7, 2009

அடப்போங்க மக்கா....

காட்சி 1

எங்காளு ஐம்பத்தைந்து சதவிகிதம்தான் எடுத்திருக்கான், என்றேன்.

இரண்டாம் ஆண்டு மதிப்பெண்களா? என்றார் அவர்.

ஆமாம்.

அடப்போடா! கல்லூரி வந்தாச்சு. சும்மா மதிப்பெண் வாங்கலைனு இன்னமும் அவனை போட்டு இம்சை பண்ணாதீங்கடா. இப்ப இது ஓக்கே. எல்லாம் வாங்கிடுவான். அவனை நிம்மதியா விடுங்கடா.

எனக்கு அறிவுரை கூறிவிட்டு சென்றார்.


காட்சி 2

என்ன தம்பி, பரிட்சை மதிப்பெண்கள் வந்துடுச்சா? என்றார் தன் பிள்ளையிடம்.

இன்னைக்குதான் கொடுத்தார்கள்; இந்தாங்க விடைத்தாள்கள்.

பார்த்த நொடியில் அவருக்குள் கோபம்பொங்கி அவனை கரித்துக்கொட்டிக்கொண்டிருந்தார். எனக்கோ அதிர்ச்சி. அந்த பிள்ளை மிகவும் நன்றாக படிப்பவன். எதுக்குடா அவங்க இப்படி திட்டிக்கொண்டிருக்கின்றார்கள் என்று அவனது விடைத்தாள்களை வாங்கி பார்த்தபோது அவனது மதிப்பெண்கள் அறிவியலில் தொண்ணூற்றி ஐந்து என்று இருந்தது.

அடிப்பாவி பெண்ணே என்று மனதில் நினைத்துக்கொண்டு, இவ்வளவு மதிப்பெண்கள் வாங்கியிருக்கான், எதுக்கு அவனை திட்டிக்கிட்டிருக்கீங்க?

ஐந்து மதிப்பெண்களை கோட்டை விட்டுட்டு வந்துள்ளான். இவன் வகுப்பு தோழிகளெல்லாம் இவனைவிட அதிக மதிப்பெண்கள் எடுத்திருப்பார்கள். இவன் பாரு என்ன பண்ணியிருக்கானு. இப்பவே இப்படினா போக போக படிப்பிலே நாட்டமே போய் பத்தாவதுலே நல்ல மதிப்பெண்கள் வாங்க மாட்டான் என்றும் உருப்பிட மாட்டான் என்றும் ஒரே புலம்பல். அவன் அப்போது ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். கொஞ்சம் நியாயமாக யோசிக்க சொல்லி பார்த்தேன். பயன் இல்லை. நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா என்று கேட்க வேண்டும் போல இருந்தது. என்னைவிடவும் வயதில் பெரியவர்கள்; ஆகையால் அவ்வாறு கேட்க முடியவில்லை. சில பெற்றோர்கள் சிறிதும் யோசிக்கமாட்டார்கள் என்று நன்றாக புரிந்தது. அந்த பிள்ளையின் நிலை கண்டு வருத்தப்பட்டுக்கொண்டு அங்கிருந்து வந்துவிட்டேன்.

மனதில் அவர்கள் என்னிடம் முன்னர் கூறிய சொற்கள் வந்துபோனது. கல்லூரி ஐம்பத்தைந்தை விட ஏழாம் வகுப்பின் காலாண்டுத்தேர்வின் தொண்ணூற்றி ஐந்து குறைவான மதிப்பெண் என்று எனக்கு அதுவரை தெரியாமல் போயிற்று. அடப்போங்க மக்கா....


பி.கு: பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையும்,பொதுநல நோக்கும் இருக்கும் சில மக்களிடமும் ஒரு சிறு அளவாவது தன்னலம் இருக்கின்றதோ என்று யோசிக்க வைத்த சில நிகழ்வுகளை இந்த வரிசையில் பதிய முயல்கிறேன்.


Monday, September 7, 2009

விடுமுறை இறுதியில் கண்டுகளித்தவை

தற்போது நான் வசிக்கும் இந்த திசான் (Dijon) நகரில் ஆகஸ்ட் மாத இறுதியில் Dijonfest எனப்படும் நாட்டிய-இசை விழா ஒருவார காலம் நடந்தது. இதில் பல நாடுகளின் பாரம்பரிய நடன/பாடல் நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. இந்தியாவின் சார்பில் கேரளத்து கதக்களி நடனம் நடைப்பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. விழா முடிவடையயிருந்த இரண்டு நாட்கள் முன்னர்தான் விழா பற்றிய செய்தியையே நான் அறியப்பெற்றேன். அதனை காண சென்றபோது எடுத்த சில புகைப்படங்களையும், சில காணொளிகளையும் இதில் காணலாம். இரண்டும் மிகவும் திட்டமிட்டு எடுக்கப்பட்டதல்ல; ஆகையால் அவற்றில் குறைகள் இருக்க வாய்ப்புள்ளது.

கதக்களி நடைபெறுவதாய் இருந்த இடத்திற்கு சென்றோம். முதலில் தென் ஆப்பிரிக்க நடனம், தொடர்ந்து இந்தியாவின் கதக்களி மற்றும் இறுதியாக போர்த்துகீசிய நடனம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொன்றும் முப்பது நிமிடங்கள் நடப்பதாக இருந்தது. ஏனோ நாங்கள் சென்ற அன்று கதக்களி நடைபெறவில்லை. அதனால் மற்ற இரண்டு குழுக்களும் கூடுதல் நேரம் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை மகிழ்வித்தனர்.


தென் ஆப்பிரிக்க குழு


அவர்களின் குழு நடனம்


தனித்து நடனமாடிய குழந்தை



போர்த்துகீசிய இசைக்குழு


அதில் நடனமாடுபவர்களின் ஒரு பகுதி


அவர்களின் குழு நடனம்



மற்றொரு இடத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த பிரான்சு நாட்டின் போர்கோன் பகுதியின் நடனம்



தென் ஆப்பிரிக்க நடனம்




முடிவில் ஒரு தென் ஆப்பிரிக்க பாடல்




போர்த்துகீசிய நடனத்தின் துவக்கம்

Friday, July 17, 2009

இமயம் - கங்கோத்திரி - கேதார்தல் பயணம் - இ

(பகுதி அ)
(பகுதி ஆ)

மறுநாள் மலைமீது விடியல் கண்டோம். நான் நன்றாக உறங்கியிருந்தேன். என் நண்பரிடம் விசாரித்தபோது அவர்கள் படுத்திருந்த இடத்தில் தண்ணீர் கசிந்துகொண்டே இருந்ததால் சரியான உறக்கம் இல்லையென்றும் நானெல்லாம் நன்றாக குறட்டைவிட்டு உறங்கியதாகவும் புலம்பினார். என்ன செய்வது??எதுவும் நான் மனமுவந்து செய்த தவறல்ல.;)


நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து பார்த்தால் இரண்டு மலை சிகரங்கள் பனிபடர்ந்து காட்சியளித்தன. ஒன்றினை கண்டபோது நந்தியை போன்ற உருவம் கொண்டதாக கண்ணில்பட்டது. இரண்டாம் சிகரத்தை தாண்டினால்தான் கேதார்தல் ஏரி வரும் என்றார் நண்பர். சிறிது நேரம் காலைபொழுதினை ரசித்துவிட்டு அங்கிருந்து கிளம்புவது என்று முடிவு செய்தோம். நாங்கள் தங்கிய இடத்திலேயே எங்கள் உடைமைகளை வைத்துவிட்டு பாரமின்றி செல்வது என்று பேசிக்கொண்டோம். முதல் நாள் கண்ட பெரிய நிலச்சரிவு ஒருசிலரை கலங்க வைத்துவிட்டது என்றே சொல்லலாம். மேலும் இருவருக்கு முதல்நாள் சிறிது உடல்நிலை ஒத்துழைப்பு அளிக்காததால், மூவர் தொடர்ந்து வரவில்லை என்றும் வேண்டுமெனில் மற்றவர்கள் சென்று வரவும் என்றும் கூறினர். எங்கள் நால்வரில் என்னுள்ளும் சிறிது பயம் இருந்தது உண்மையே. ஆனாலும் ஆசை. இருவர் சென்றுவருவோம் என்று கூற நாங்கள் நான்கு பேர் பயணத்தை தொடர்ந்தோம்.

நாங்கள் எதிர்கொண்ட நிலச்சரிவு சுமார் இருநூறு அடியாவது இருந்திருக்கும். ஓரளவு அனுபவமுள்ள நண்பர் முதலில் வழிகாட்டி செல்ல, அவரை தொடர்ந்து நாங்கள் செல்வது என்று எண்ணினோம். முதலாமவர் சிறிது சென்றதை பார்த்தபோதே என்னுள் பயம் அதிகமாகியது. ஏனெனில், இரண்டு அடி முன்னே கால்களை வைப்பதற்குள், கீழ்நோக்கி சுமார் நான்கு அடிகள் சரிந்து போய்கொண்டிருந்தார். முழுவதும் கீழே போய் பின்னர் மேலே ஏறி வருவது என்பது அந்த இடத்தில் இயலாத காரியம். மிகவும் தடுமாறி தடுமாறி முன்னே செல்ல முயன்று கொண்டிருந்தார். அந்த இடத்தை தாண்டி நோக்கினாலும் நிலச்சரிவுகள் தொடர்ச்சியாக கண்ணில் தென்பட்டன. அந்த நொடியில் மனதினுள் பயம் சூழ்ந்துக்கொண்டது. கண்டிப்பாக தாண்டி செல்ல வேண்டுமா என்று நானும் கேட்டுவிட்டேன். அவர்கள் சிறிது முயன்று பார்க்கலாமே என்று கூற இறுதியில் இரண்டு பேர்மட்டுமே செல்வது என்ற நிலையானது. அதுவும் எளிதாக இல்லை. அந்த சூழலில் அவர்களும் எங்களுக்காக மேற்கொண்டு செல்லும் எண்ணத்தை கைவிட்டனர். அவர்களுக்கு சிறிது வருத்தம்தான். ஒருவிதத்தில் எல்லோருக்கும்; ஏனெனில், எங்களின் குறிக்கோள் கேதார்தல். அதனை அடைய அதே வழியில் மேலும் சிறிது தூரம் செல்லவேண்டும். அதனை அடைய முடியாது, ஒருவகையில் பார்த்தால் எங்களின் பயணம் தோல்வியில் முடிகின்றது. மறுபடியும் வரவேண்டும் என்று இருவரும் கூறிக்கொண்டிருந்தனர். அந்த நொடியில் மறுபடியும் வருவது பற்றி எனக்குள் மிகுந்த யோசனை (சந்தேகம் என்றே சொல்லலாம்) இருந்தது. அந்த இடத்தில் மட்டும் நதிக்கரையில் கைநினைக்க சிறிது வழி இருந்தது. ஆகையால் சிறிது நேரம் நதிக்கரையில் செலவிட்டோம். நதியின் மறுபக்கம் பார்த்தால் செங்குத்தான மலைச்சரிவுதான் காட்சி தந்தது. அந்த திசையில் எவ்வாறு மேலே ஏறுவது என்றே வழி புலப்படவில்லை. வழிசொல்லாத மலைகளாக இருந்தன.



நேரம் சென்றுகொண்டே இருந்தபடியால் திரும்பிவருவதற்கு தயாரானோம். வந்த வழியிலேயேதான் செல்லவேண்டும்; வேறு வழியில்லை. முதல்நாள் கடந்துவந்த பாதையை நினைத்தபோது மனதினுள் சிறிது பயம் ஏற்பட்டது என்பது உண்மை. எனினும், முதல்நாள் எப்படி வந்தோமோ அப்படியே சென்றுவிடமுடியும் என்று தோன்றியது. இருந்த இடத்திலிருந்து காட்சியளித்த மலை சிகரங்களை இறுதியாக மனதினுள் உருவமாக பதித்துக்கொண்டும், புகைப்படங்களாய் கைப்பற்றிக்கொண்டும் வந்தவழியிலேயே நடையினை தொடர்ந்தோம். அந்த இடம் சிறிது நேரத்தில் மேகமூட்டமாகியது. நல்ல நேரமாக மழை வரவில்லை.


வந்த வழியிலேயே நடந்ததால் அன்றைய நடையில் எதிர்பார்ப்பு ஏதும் இல்லை. கால்கள் சிறிது ஓய்வெடுத்துக்கொண்டு நடந்து கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் பனி படர்ந்த சரிவினை அடைந்தோம். முதல்நாள் அளவிற்கு சிரமம் இல்லை; எனினும் சிறிது நேரம் எடுத்தது என்னவோ உண்மைதான். சில இடங்கள் தொடக்கபுள்ளிக்கு அருகில் வந்துவிட்டது போன்று தோன்றும்; ஆனால் அதிலிருந்து மேலும் அதிக தூரம் நடக்க வேண்டியதாயிருக்கும். எல்லாம் ஒரே மாதிரி இருந்ததால் ஒரே நாளில் பாதையில் பார்த்த பல விடயங்கள் மறந்துபோயிருந்தன. முதல் நாள் தொடக்கத்தில் தடுமாறிய சிறுகுன்று வந்தபோது அதற்குமேல் எவ்வாறு செல்வது என்று புரியவில்லை. பலருக்கும் எப்படி வந்தோம் என்று நினைவில்லில்லை. சிறிது யூகத்தின் அடிப்படையில் வழியினை தொடர்ந்து மனிதநடமாட்டம் உள்ள இடத்தினை வந்தடைந்தோம்.


எங்கள் அறையில் சிறிது இளைப்பாறிவிட்டு, கங்கோத்திரி ஆலயம் சென்று வழிபட்டோம். இரண்டு நாட்களாக சரியாக சாப்பிடாததால் இரவு உணவினை சீக்கிரமே முடித்துக்கொண்டோம். மறுநாள் ரிசிகேசம் வந்துசேர பொதியுந்துவை ஏற்பாடு செய்துவிட்டு, கடைத்தெருவில் சிறிது சுற்றிவிட்டு தங்கும் அறை வந்து சேர்ந்தோம். மறுநாள் காலை மீண்டும் பொதியுந்து பயணம். வழியில் சில இடங்களில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம். மேலும் சில மண்சரிவுகளையும் வழியில் கண்டோம். ரிசிகேசம் வந்துசேர மாலை ஏழு மணியாகிவிட்டது. எங்கள் திட்டப்படி நாங்கள் நால்வர் மறுநாள் காலை புதுதில்லி புறப்படுவது என்றும், மற்ற மூவர் வேறு இடங்களுக்கு தங்கள் பயணத்தை தொடர்வது என்றும் முடிவாகியிருந்தது. நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா என்ன?? எங்களுக்கு பெங்களூரு செல்ல இரயிலில் முன்பதிவு (டட்கால்) செய்ய நண்பனின் நண்பனிடம் சொல்லியிருந்தோம். அவனோ அலைபேசியில் அழைத்து முன்பதிவு கிடைக்கவில்லை என்று கூறி பீதியை கிளப்பிவிட்டான். அதன் காரணமாக அன்றிரவே பேருந்துபிடித்து அதிகாலை மூன்று மணியளவில் தில்லி இரயில் நிலையம் வந்து, காலை ஏழு மணியளாவில் புறப்படும் இரயிலில் முன்பதிவு செய்யாதோர் பெட்டியில் முண்டியடித்து இடம்பிடித்து எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். எங்கள் பயணதிட்டத்தை ஒருநாள் முன்னராக மாற்றியதால் முன்பதிவு செய்து வைத்திருந்த பயணசீட்டை கிளம்பும்முன்னர் ரத்து செய்து விட்டோம். நல்ல வேளையாக, அதிக சிரமமில்லாமல் இரண்டு நாள் பயணத்தை அந்த பெட்டியில் முடித்து பெங்களூரில் கால் வைத்தபோது மனதினுள் எதையோ சாதித்த உணர்வு குடிகொண்டது.

எங்களின் உண்மையான இலக்கினை அடையமுடியவில்லை. எனினும், இமயத்தை காணவேண்டும் என்ற ஆவல் பூர்த்தியானது. பூர்த்தியானது என்பதைவிட மேலும் சென்று கண்டுகளிக்க வேண்டும் என்ற ஆசையை தூண்டிவிட்டது என்றே கூறவேண்டும். மீண்டும் செல்ல வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக செல்லவேண்டும். அந்த வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருக்கின்றேன். என் மனதில் என்றும் நீங்காத இடத்தை இந்த பயணமும் பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.