Monday, November 22, 2010

தலைக்கவசம் அழகிற்கல்ல - ஆபத்தை தடுக்க

சில வாரங்களுக்கு முன்னர் எப்பொழுதும் போல வீட்டிற்கு தொலைபேசியபோது காலையிலேயே அவர்கள் ஒரு துக்க நிகழ்விற்கு செல்வதாக கூறினர். ஒரு உறவினர் அதற்கு முந்தைய நாள் தவறிவிட்டதாகவும் அதற்கு செல்வதாகவும் கூறினர். இங்கு நான் வந்தபிறகு இந்த ஒன்பது மாதத்தில் எனக்கு அறிவிக்கப்படும் நான்காவது உறவின் மரணம். சிறிது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. காரணம், மிகவும் அதிக வயதாகாதவர்; நோயினால் அவதிப்படுவதாக அறியப்படாதவர். இறப்பின் காரணம் கேட்டபோது சாலை விபத்து என்று கூறினர். நமது ஊரை பொறுத்தவரை மிகவும் சாதாரணமாகிப்போன விடயமாகிவிட்டது இந்த விபத்துக்கள். இருசக்கர வாகனத்தில் இவரது நண்பருடன் சென்னை அன்னனூர் அருகே சென்றபோது வாகனத்தின் முன்சக்கரம் வெடித்துசிதறியதால் சாலையில் விழுந்து தலையில் அடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலில் பிழைத்துவிடுவார் என்று நம்பிக்கையளித்து இரண்டு நாட்கள் சிகிச்சையில் பயனின்றி மூளைச்சாவு ஏற்பட்டு உயிர் நீத்துள்ளார். வாகனத்தை ஓட்டிச்சென்றவர் அதிர்ஷ்டவசமாக கைமுறிவுடன் உயிர் தப்பியுள்ளார்.

இவர்கள் இருவரின் தலைக்கவசமும் வாகனத்தின் பக்கவாட்டில் மாட்டிவிடப்பட்டிருந்தது. இவரது மரணத்தை பொறுத்தவரை அதிர்ச்சியையும் மீறி அவர்மீது கோபம் அதிகமானது. என்னை பொறுத்தவரை தானே சென்று தேடிக்கொண்டதாகவே இது படுகின்றது. தலைக்கவசம் தன்னை பாதுகாத்துக்கொள்ள அணிந்துகொள்வதற்கா இல்லை ஏதோ அழகுபொருள் போல தொங்கவிடுவதற்கா? அவர்கள் தலைக்கவசத்தை அணிந்து சென்றிருந்தால் உயிர் தப்பியிருக்க வாய்ப்புகள் நிறைய உள்ளது.

பலரும் இவ்வாறு தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவதை பார்க்கிறோம். சென்னை போன்ற பெருநகரங்களிலேயே இவ்வாறென்றால் பிற சிறு நகரங்களில் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது. அங்கெல்லாம் தலைக்கவசம் என்றால் நம்மை ஏளனமாக பார்க்கின்றனர். நம் மக்களை பொறுத்தவரை எதுவுமே கடுமையான சட்டமாக இல்லாதவரை அதற்கு மதிப்பு கொடுத்து பின்பற்றுவது என்பதை தேவையற்ற ஒன்றாகவே நினைக்கிறார்கள். சில நாட்கள் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டம் இருந்தது. பின்னர் என்ன ஆனதோ தெரியவில்லை, அந்த சட்டம் திரும்ப பெறப்பட்டது. சட்டம் அமலில் இருந்தபோது பலரும் காவலருக்கு பணம் அழவேண்டுமே என்ற நோக்கிலாவது தலைக்கவசத்தை அணிந்து சென்றனர். நல்ல விடயங்கள் எல்லாம் சட்டமாகி அமலில் இருக்காது. எவராவது செல்வாக்குள்ளவர் மக்கள் அவதிப்படுகின்றனர் என்று தவறான உதாரணம் கூறியிருப்பாரோ என்று தெரியவில்லை, அரசு சட்டத்தை ரத்து செய்துவிட்டது. இதில் என்ன அவதி என்று புரியவில்லை. நிதிநிலை என்றால், அவ்வளவு செலவுசெய்து வாகனம் வாங்கும்போது, அதன் சிறுபகுதியில் தலைக்கவசம் வாங்குவது என்பது சிரமமாக இருக்காது. சிலரோ அதனை அணிவதால் தலைவலி, கழுத்துவலி போன்ற உடல் உபாதைகள் வருவதாக கூறுகின்றனர். சிறு பிரச்சனைகளுக்காக எவரேனும் உயிரை பணயம் வைப்பார்களா? அவ்வாறு இருப்பின் அவர்கள் வாகனங்களையே செலுத்தாமல் இருக்கலாம்.

இதற்கு எப்படி வேண்டுமானாலும் (எதிர்)விதண்டாவாதம் செய்யலாம். ஆனால், அவ்வாறு செய்பவர்கள், தங்களையும் மீறி தங்களுக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால், தங்களின் குடும்பத்தின் கதி என்னவாகும் என்று நினைத்துப்பார்பார்களா? எனது உறவினர் தன்னுடைய உடலின் பாகங்களை தானமளித்து சிலருக்கு வாழ்வளித்து சென்றுள்ளார். ஆனால், அவரின் மறைவால் வாடும் அவரின் மனைவிக்கும், இரண்டு சிறு பிள்ளைகளுக்கும் அவர்களின் வாழ்வில் நீங்காத சோகத்தையும், கேள்விகளையும் அல்லவா விட்டுச்சென்றுள்ளார். எவரும் தனிமனிதர்கள் இல்லை. ஒவ்வொருவரையும் நம்பியோ, சுற்றியோ குடும்பமோ, நட்போ, உறவுகளோ இருந்துக்கொண்டுதான் இருக்கும். அதனை நினைவில் கொண்டாவது இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிந்து செல்லலாமே.

இந்த விபத்தை கேள்விப்பட்டவுடன் என் மனதில் சில காலம் முன்னர் நடந்த நிகழ்ச்சி சிறிது நடுக்கத்தை மீண்டும் அளித்துச்சென்றது. சென்ற திசம்பர் மாதம் சென்னையில் இருந்தபோது எனது அப்பாவை அழைத்துக்கொண்டு தாம்பரத்திலிருந்து மைலாப்பூர் சென்றேன். இரு சக்கர வாகனத்தில் பயணம். தலைக்கவசம் அணியாமல் செல்லமாட்டேன்; சாலை இலகுவாக இருந்தால் நல்ல வேகத்தில் செல்வது பழக்கம். (60-70 கி.மீ). அன்றும் அவ்வாறே சென்றுகொண்டிருந்தேன். அப்பாவை பொறுத்தவரை என்னுடன் வரும்போது பார்த்துப்போ என்றுமட்டும் சொல்வார். என் மீது நம்பிக்கை அதிகம் (வேற வழி...) அடையாறு சிக்கனலில் நின்று, பின்னர் கிளம்பி சிறிது வேகம் எடுப்பதற்குள் ஏதோ வெடித்தது போன்ற சத்தம் கேட்டது. அதனோடு வாகனத்தின் பின்பக்கம் நிலைதடுமாறி செல்ல ஆரம்பித்தது. சாலையின் நடுவே சென்று கொண்டிருந்தேன். பின்சக்கரம் வெடித்துவிட்டது என்று புரிந்துவிட்டது. நல்லவேலையாக வேகம் அதிகமில்லாததால் பிரேக் பிடித்து வண்டியை நிப்பாட்டவும் எனது அப்பா சரியான பக்கத்தில் கீழே குதிப்பதற்கும் சரியாக இருந்தது. வேறு வண்டியில் சென்றுகொண்டிருந்த இரண்டு பேர் வாகனத்தை தூக்கி ஓரமாக செல்ல உதவினர். எனக்கு மயக்கம் வந்துவிட்டதோ என்று அவர்கள் நினைத்தார்களாம். சக்கரத்தில் ஆணி ஏறியிருந்தது அந்த டையரை மாற்றும்போது பார்த்தோம். அந்த சிக்னல் தாண்டியதுமுள்ள வேக தடுப்பான்களில் ஏறியிருக்கக்கூடும். எங்களின் நல்லநேரம் எங்கள் பின்னால் எந்த பேருந்தோ, பெரிய வாகனங்களோ வரவில்லை; நெருக்கடியான போக்குவரத்தும் இல்லை. நல்ல வேகத்தில் செல்லவில்லை. இல்லாவிட்டால் இன்று எங்கள் நிலைமை எப்படியிருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அந்த நிகழ்விற்கு பின்னர் மிகவும் அதிக எச்சரிக்கையோடு, சாலையை உற்றுநோக்கி வாகனத்தை செலுத்த ஆரம்பித்துவிட்டேன். என்னதான் வாகனம் என்கட்டுப்பாட்டிற்க்குள் இருக்கின்றது என்று கூறிக்கொண்டாலும், இவ்வாறான சில நிகழ்வுகள் சிறிது அச்சத்தை ஏற்படுத்தியே செல்கின்றன. அதிலும், நம்மை நம்பி மற்றவர் அமரும்போது நம்பிக்கையையும் மீறி மனதில் எச்சரிக்கை மணி ஒலிக்க ஆரம்பித்துவிடுகின்றது. இந்த விபத்திற்கு பின்னர் பின்னால் அமர்பவருக்கும் தலைக்கவசம் ஏற்பாடுசெய்ய வேண்டும் என்றும் முடிவெடுத்துவிட்டேன்.

இருசக்கர வாகனவோட்டிகள் தயவு செய்து தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள்.

Friday, September 10, 2010

காத்திருந்த பயணம் - இ

அன்று பிரதோச தினம். சிவபெருமானுக்கு உகந்த தினம். அன்று மாலை மன்னார்குடியிலுள்ள சித்தி வீட்டிற்கு செல்லும் திட்டம். மேலும், மாலை மன்னார்குடிக்கு அருகிலுள்ள பாமினி என்னும் ஊரிலுள்ள சிவாலயத்திற்கு சென்றுவர வேண்டும் என்று என் அப்பா விரும்பியபடியால் அவ்வாறே திட்டமிட்டிருந்தோம். குடந்தை வந்து சிறிது ஓய்வெடுத்துக்கொண்டு மாலை மன்னை நோக்கி பயணமானோம்.

பாமினி - மன்னையிலிருந்து சில மைல்கள் தூரத்தில் உள்ளது. பழங்காலத்தைய சிவத்தலமாகும். சென்று சேரும்போது மாலை ஆறு மணிக்கு மேலாகிவிட்டது. மழை தூரிக்கொண்டேயிருந்ததால் சுவாமி புறப்பாடு அன்று இல்லை. எனினும் தரிசனம் நன்றாக கிடைத்தது. அப்பாவிற்கு எல்லோரையும்விட மிகுந்த மகிழ்ச்சி என்று எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. அன்றைய தினம் மன்னையில் அலவலாவிக்கொண்டு இனிதே முடிந்தது.

அடுத்த நாள் பல இடங்களுக்கு செல்லும் திட்டம் வைத்திருந்தோம். மேலும் அன்றிரவு சென்னையும் திரும்ப வேண்டும். ஆகையால் சீக்கிரமே மன்னையிலிருந்து கிளம்பி முதலில் குருஸ்தலமான ஆலங்குடி சென்றடைந்தோம். நாங்கள் சென்றது குருபெயர்ச்சிக்கு முதல்நாள். ஆலயத்தில் அதற்கான ஏற்பாடுகள் நடந்த வண்ணம் இருந்தன. எங்களுக்கு நேரம் மிக குறைவாக இருந்ததால் சீக்கிரமாக குருதரிசனத்தை முடித்துக்கொண்டு நேராக ராகுஸ்தலமான திருநாகேஸ்வரம் சென்றடைந்தோம்.


எவ்வளவு பெரிய கோயில் அது. பார்ப்பதற்கே மலைப்பாகத்தான் இருந்தது. ஏற்கனவே சிலமுறை சென்றிருந்தாலும் அம்முறை சென்றபோதும் பிரம்மிப்பேற்படுத்தியது. அதிக மக்கள் கூட்டம் இல்லாததால் இறையின் நிறைவான தரிசனம் கிடைத்தது. அந்த தரிசனத்தை முடித்துக்கொண்டு குடந்தை வந்து அவர்களிடம் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டுவிட்டு, சென்னை செல்லும் மற்றவர்களை அழைத்துக்கொண்டு நாங்கள் கிளம்பியது அப்பாவின் சொந்த ஊரான திருக்களாச்சேரி நோக்கி. அங்கு அவர்கள் வாழ்ந்த வீடும் இப்போது எங்களுக்கு சொந்தமில்லை. எனினும் அங்கு செல்வது எங்களில் சிலருக்கு ஒரு அலாதியான இன்பத்தை அளிக்கும். அதன் காரணமாக அந்த பயணம்.

செல்லும் வழியில் திருபுவனம் சரபேஸ்வரர் ஆலயம் சென்றடைந்தோம். சிவபெருமான் சரபேஸ்வரராக காட்சியளிக்கும் ஆதிஸ்தலம். அங்கும் சுவாமியின் நிறைவான தரிசனம் கிடைத்தது. எல்லாமே மிகவும் விஸ்தாரமான கோயில்கள்.( வாயில் தூண்களில் கண்ட சிற்பங்கள்)

அங்கிருந்து கிளம்பி எங்கள் கிராமம் சென்றடைய மதியம் ஒன்றரை மணிக்கு மேலாகிவிட்டது. மயிலாடுதுறை தாண்டியதும் மழை கொட்டித்தீர்த்துவிட்டதால் மெதுவாகத்தான் செல்லமுடிந்தது. எடுத்துச்சென்ற உணவினை அந்த வீட்டிலேயே வைத்து சாப்பிட்டுவிட்டு எங்கள் ஊர் நாகநாதஸ்வாமி ஆலயத்திற்கு மூன்று மணிக்குமேல் சென்றோம். அன்று சங்காபிஷேகம் எனவும் நாங்கள் வந்தது மகிழ்ச்சி எனவும் அங்கிருந்த குருக்கள் கூறிக்கொண்டிருந்தார்.


தாத்தா, பாட்டி கிட்டத்திட்ட இறுதிவரை வாழ்ந்த ஊரிற்கு செல்வதே எனக்கெல்லாம் தனிசுகம்தான். அவர்கள் வீட்டுப்பிள்ளை என்று அடையாளப்படுத்தும்போது மகிழ்வாகவே இருக்கும். தரிசனம் முடித்துக்கொண்டு தெரிந்தவர்கள் வீட்டிற்கு சென்று சிறிது நேரம் அளவளாவிவிட்டு புறப்பட்டோம். அந்த பயணத்தில் வரும்வழியில் சிலமுறை சென்றுள்ள திருக்கடையூருக்கும், அதுவரை செல்ல வாய்ப்பே கிடைக்காத சிதம்பரம் கோயிலுக்கும் சென்றுவரவேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால், அங்கேயே மாலை நான்கு மணியாகியபடியாலும், இரவு எப்படியும் சென்னை சென்றுவிடவேண்டும் என்ற காரணத்தாலும் ஆலய தரிசனத்திற்காக வழியில் எங்கும் நிறுத்தாமல் சென்னை நோக்கி செல்வது என்று முடிவு செய்யப்பட்டு கிளம்பினோம். சிதம்பரம், சீர்காழி எல்லாம் மற்றொரு வாய்ப்பிற்காக தள்ளிவைக்கப்ட்டது. வழியில் பண்ருட்டி அருகே உணவினை முடித்துக்கொண்டு நள்ளிரவு நேரத்தில் சென்னை சென்றடைந்தோம்.

பல ஆண்டு கனவான குலதெய்வ தரிசனமும், மேலும் பல கோயில்களும் கண்டதில் மனம் நிறைவாக இருந்தது. குடும்பத்தினர் பலரும் சேர்ந்துவந்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. என்றும் மனதில் அசைப்போட்டுக்கொண்டேயிருக்ககூடிய பயணமாய் இது அமைந்தது.

Wednesday, September 8, 2010

காத்திருந்த பயணம் - ஆ

கூந்தலூர் - எங்களின் பூர்வீகமான ஊர் என்று அப்பாவும், தாத்தாவும் சொல்லி கேள்விபட்ட இடம். எனது தாத்தாவரை அங்குதான் பிறந்துள்ளார்கள். பின்னர் தாத்தாவின் அப்பாவின் கர்ணம் (கணக்காளர்) வேலையின் பொருட்டு மயிலாடுதுறை பகுதியிலுள்ள திருக்களாச்சேரி என்னும் கிராமத்தில் குடிபெயர்ந்துவிட்டனர். என் அப்பா பிறந்து வளர்ந்த ஊரெல்லாம் அதுவே. ஆகையால் கூந்தலூர் செல்வது எனக்கு அதுவே முதன்முறையாகும்.

கேள்விபட்ட பூர்வீக ஊரை பார்க்கப்போவதில் ஒருவித ஆர்வம் மேலோங்கியே இருந்தது. குடந்தை மற்றும் சென்னையிலுள்ள உறவுகள் சூழ செல்வதில் மேலும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு வண்டி பற்றாத நிலை. மற்றொரு மகிழுந்துவையும் ஏற்பாடு செய்து கொண்டு கூந்தலூர் நோக்கி புறப்பட்டோம். நாங்கள் செல்வதற்கு முன்னரே அந்த கோயில் பூசாரியிடம் எல்லா ஏற்பாடுகளையும் செய்ய சொல்லியிருந்தோம். சிறிய கிராமங்களிலுள்ள ஆலயத்தில் நினைத்த நேரத்தில் சென்று பூசாரியை பார்த்து அனைத்து வேலைகளையும் செய்வது என்பது மிகுந்த கடனமான காரியமாகும். இரண்டு-மூன்று கோயில்களுக்கு சேர்த்து ஒரு பூசாரியோ/குருக்களோதான் இருப்பார்கள். ஆகையால் முன்னேற்பாட்டுடன் சென்றோம்.
காவிரியின் ஒரு கிளைநதியின் கரையில் அந்த கோயில் அமைந்திருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர் குடமுழுக்கு நடைப்பெற்று ஆலயம் சிறப்பாக இருந்தது. பூசாரி சந்நிதியினுள்ளே அம்மனின் அபிஷேக ஏற்பாடுகளை கவனிக்க, எங்கள் மக்கள் சந்நிதியின் வெளியே பூசைக்கான ஆயத்த வேலைகளில் ஈடுபடலானர். முந்தைய காலங்களாக இருந்திருந்தால் காவிரியில் நீர் எடுத்துவந்து சுத்தம் செய்து பூசைக்கான வேலைகளை செய்திருப்பார்களாம். எங்கள் பாட்டி இருந்த காலத்தில் அவ்வாறுதான் எல்லாம் நடந்ததாக எனது அண்ணன் கூறினார். இப்போதோ பாட்டியும் இல்லை, காவிரியில் அவ்வளவு தண்ணீரும் இல்லை. அவர்கள் இருக்கும்போது வந்திருந்தால் மகிழ்ச்சி பலமடங்காக இருந்திருக்கும். கிடைத்த இந்த சந்தர்ப்பத்திற்காக மகிழ்ச்சி அடைந்துக்கொண்டோம். கோயிலிலேயே அடிபம்பு அமைத்துவிட்டதால் தண்ணீருக்கு கவலையில்லை.


அந்த இடத்தை சுத்தம் செய்து அம்மா, பெரியத்தை போன்றோர் பூசைக்கான ஆயத்தங்களை ஆரம்பிக்க சின்னத்தை போன்றோர் அம்மன் பாடல்கள் பாட ஆரம்பித்தனர். பூசைகளில் முக்கியமாக படைப்பது மாவிளக்கு மாவும், காப்பரிசியும், பழங்களும்தான். மாவிளக்கு மாவு அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. ஒருகாலத்தில் உரலில் இடித்து மாவு பிசைவார்கள். இப்போதெல்லாம் உரலும் இல்லை; அதற்கான தெம்பும் இல்லை. எல்லாம் அறிவியல் இயந்திரமயம்தான். அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைப்பெற்றது. அம்மனின் அலங்காரம் முடியவும், பூசைக்கான படையல்கள் தயார் செய்துமுடிக்கவும் சரியாக இருந்தது. அனைவரும் ஒன்றுகூடி அம்மனுக்கு நெய்வேதியம் செய்து தீபாராதனை காட்சி காணப்பெற்றோம். பலஆண்டுகால காத்திருப்பு நிறைவேறியதில் பெரும் மகிழ்ச்சி வீட்டினர் அனைவருக்கும். பூசைகள் முடிந்த பின்னர் எடுத்து சென்றிருந்த உணவினை அங்கேயே முடித்துக்கொண்டோம். இந்த கட்டுசாப்பிட்டிற்கான சுவை வேறு எதிலும் கிடைப்பதேயில்லை. கண், மனம் மற்றும் வயிறு நிறைந்து புறப்பட தயாரானோம்.

வண்டியில் ஏறியதும் யாரோ ஒருவரின் அழுகை கேட்டது. கொஞ்சம் அதிர்ச்சியில் என்னவென்று பார்த்தபோது வண்டியில் ஏறும்போது கால்பிசகியதால் வலியில் என் அம்மாவின் கண்களில் கண்ணீர். எங்களுக்கு அதுவும் ஒரு ஆச்சிரியம்தான். இதுவரை தனக்கு எந்தவொரு வலிவந்தாலும் அழுது பார்த்ததேயில்லை. பெரிதாக அதற்கெல்லாம் அலட்டிக்கொள்ளாதவர். சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திவிட்டு கிளம்பினோம்.


அந்த ஊரிலுள்ள சிவாலயத்திற்கு சென்றோம். மழை தூறிக்கொண்டே வந்ததால் அங்கும் அவர்கள் கால் தடுமாறி வழுக்கி விழும் சம்பவமும் நடந்தது. நல்லவேளையாக பலத்த பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. அந்த ஆலயத்திலும் தரிசனத்தை முடித்துக்கொண்டு குடந்தை நோக்கி கிளம்பினோம். கிளம்பிய நேரம் பெருமழை பிடித்துக்கொண்டு விடாது பெய்து தீர்த்துவிட்டது.

Tuesday, September 7, 2010

காத்திருந்த பயணம் - அ

பயணங்கள் பெரும்பாலும் மகிழ்ச்சியை அளிக்கும் விடயம். சில இடங்களுக்கு நினைத்தவுடன் சென்றுவர முடிந்துவிடுகிறது; சில இடங்களுக்கு ஒருசில மாதங்களோ, வருடங்களோ காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த பயணத்தை பொறுத்தவரை சுமார் முப்பது வருட காத்திருப்பு இதன் பின்னால் இருந்துள்ளது. சென்ற ஆண்டு திசம்பரில் நான் ஊருக்கு செல்வதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே எங்கள் வீட்டில் இம்முறை எப்படியேனும் இந்த பயணத்தை மேற்கொண்டுவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.அவ்வாறு நாங்கள் செல்ல விரும்பியது எங்கள் குலதெய்வ கோயிலுக்கு.

கூந்தலூர் - கும்பகோணம் (குடந்தை) அருகில் எரவாஞ்சேரி செல்லும் வழியில் உள்ள ஒரு கிராமம். அங்குள்ள அம்மன்தான் குலதெய்வம்.இத்துனை ஆண்டுகளில் பலமுறை குடந்தைக்கும், சொந்த ஊரான மயிலாடுதுறைக்கும் சென்று வந்திருந்தாலும் கூந்தலூர் செல்வது மட்டும் கைகூடாமலேயே இருந்தது. எல்லாவற்றிற்கும் நேரங்காலம் வரவேண்டுமென்று சொல்வது உண்மையோ என்று எண்ணவைக்கிறது.

குடந்தையை அடித்தளமாக வைத்து பயண ஏற்பாடுகள் செய்யத்துவங்கினோம். சில நெருங்கிய உறவுகளையும் அழைத்துக்கொண்டோம். இரயிலில் இடம் கிடைக்காததால் வேன் எடுத்துச்செல்வது என்று முடிவாயிற்று. நான்கு குடும்பமாக சென்னையிலிருந்து கிளம்பி குடந்தையிலுள்ள அத்தையின் வீட்டிற்கு செல்வது என முடிவாயிய்று. ஒரு பொடியனுக்கு உடல் நலமில்லாததால் அந்த குடும்பம் எங்களுடன் வரமுடியவில்லை. குடந்தைக்கு தனியாக வண்டியெடுத்து செல்வதால் செல்லும் வழியில் வடலூர் சென்றுவிட்டு செல்வது என்று முடிவு செய்தோம்.வடலூர் இராமலிங்க அடிகளார் மீதும், அவர்தம் கொள்கைகள் மீதும் ஒருவித பற்று சில ஆண்டுகளுக்கு முன்னர் என் தந்தைக்கு ஏற்பட்டது.ஆகையால் வடலூர் செல்ல வேண்டும் என்ற அவாவும் சில ஆண்டுகளாக அவருக்கு இருந்தது. அது நிறைவேறவும் இதுதான் உற்ற சமயம் போன்று தோன்றியது.

திசம்பர் 12.ஆம் தேதி காலையில் நாங்கள் ஏழு பேர் சென்னையிலிருந்து கிளம்பினோம்.வழியில் எடுத்து சென்ற காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டு சுமார் பதினோரு மணியளவில் வடலூர் சென்றடைந்தோம். முதன்முறையாக சென்றதாலும், குறிப்பிட்ட கால அவகாசமே இருந்ததாலும் சத்திய ஞான சபைக்கு மட்டுமே சென்றோம். சென்ற நேரம் சந்நிதி மூடப்பட்டிருந்தாலும் அடுத்த அரை மணிநேரத்தில் திறக்கப்படும் என்று அங்கிருந்தவர்கள் கூறியபடியால், தரிசனம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் தீர்ந்தது. அங்கு குழுமியிருந்தவர்களில் வயதான ஒருவர் தொடர்ந்து சுவாமிகளின் பாடலை பாடிக்கொண்டிருந்த்தார். அந்த நிலையிலேயே அவரை புகைப்படம் பிடிக்காமல் இருக்க முடியவில்லை.
குறித்த நேரத்தில் தீப தரிசனம் கிடைக்கப்பெற்றோம். மிகுந்த நிறைவாக இருந்தது.சிறிது நேரம் அந்த வளாகத்தை சுற்றிப்பார்த்துவிட்டு குடந்தை நோக்கி பயணமானோம். செல்லும் வழியில் சில ஆச்சிரியமான விசயங்களும் அறியெப்பெற்றேன். ஏதோ பழைய பாடல் ஒன்று ஓடிக்கொண்டிருக்க அந்த பாட்டை பள்ளியில் பாடி முதல் பரிசு வாங்கியதாக எங்கள் அம்மா கூறினார். இன்பதிர்ச்சி. அம்மாவிற்கு இசையில் நாட்டமுண்டு, பாடவெல்லாம் தெரியும் என்பதே அப்போதுதான் எங்களுக்கு தெரியும். மேலும், ஏதோ பேசிக்கொண்டிருக்கையில் என் தம்பி அந்த விசயத்தைபற்றி சில விடயங்கள் சொன்னான். அவனுக்கும் அந்தமாதிரியெல்லாம் பேசமுடியும் என்பதையே நாங்கள் அப்போதுதான் கண்டோம். அவன் எப்போதும் விளையாட்டுத்தனமாய் இருப்பதால் பல விடயங்கள் அவனுக்கு தெரியாது என்று நாங்கள் தவறான கணக்கு போட்டு வைத்திருந்தோம். சில தெரியாத விடயங்கள் இந்த பயணத்தில் அறியப்பெற்றோம். குடந்தையில் அனைவரையும் ஓராண்டிற்கு பின்னர் கண்டதில் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. சுவையான உணவுடனும், அளவளாவலுடனும் மதிய நேரம் கழிந்தது.

கூந்தலூர் செல்வது பிரதானமாக இருந்தாலும் அதனூடே பல ஆலயங்களுக்கும் செல்வதும் எங்களின் திட்டமாக இருந்தது. பலமுறை குடந்தை சென்றிருந்தாலும் வெகுசில ஆலயங்களுக்கே இதுவரை சென்று வந்துள்ளோம். ஆகையால் அன்று மாலை அங்கிருந்த சில உறவுகளையும் அழைத்துக்கொண்டு தாராசுரம், பட்டீஸ்வரம், திருவலஞ்சுழி மற்றும் சுவாமிமலை ஆகிய தலங்களுக்கு சென்றோம். அதுவரை தெளிவாக இருந்த வானிலை தாராசுரத்தில் இறங்கியவுடன் மாறத்துவங்கி மழை தூற ஆரம்பித்துவிட்டது.

தாராசுரம் பல சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட சிவத்தலமாகும். இதற்கு முன்னர் எப்போது சென்றேன் என்பது நியாபகமில்லை. மேலும், இம்முறைதான் புகைப்படக்கருவி இருந்தது. ஆகையால் நிறைய புகைப்படங்கள் எடுக்க திட்டமிட்டிருந்தேன். மழை வந்து அந்த ஆசையை குலைத்துவிட்டது. எனினும் குடைக்குள்ளிருந்து வெகுசில படங்களை மட்டும் எடுத்துக்கொண்டோம். ஆலயத்தில் அங்குமிங்குமாக சில மக்களை மட்டுமே காண முடிந்த்தது. இவ்வாறான ஊர்களில் உள்ள கோயில்களில் சாதாராண நாட்களில் செல்வதிலுள்ள ஒரு வசதியெனில் அது அதிக கூட்டமில்லாமையாகும். அதனால் அடித்துபிடித்து முன்டியடித்து தரிசனம் செய்யத்தேவையில்லை. போங்க-போங்க என்று விரட்டும் மனிதர்களும் இருக்கமாட்டார்கள்.ஆகையால் நின்று நிதானமாக நிம்மதியான தரிசனம் கிடைக்கப்பெற்றோம்.
பின்னர் அங்கிருந்து கிளம்பி பட்டீஸ்வரம் சென்றடைந்தோம். அங்கே வாசலிலேயே வீற்றிருக்கும் துர்க்கையம்மன் பிரசித்தமாகும். அந்த மாலைவேளையில் மிகுந்த அலங்காரத்துடன் அழகாக காட்சியளித்தார். பிற சந்நிதிகள் கோயிலின் உட்புறத்தில் இருந்தது. சென்றுவந்தோம். அமைதியாக அதிக ஆள்நடமாட்டமில்லாமல் இருந்தது. மழை தூறிக்கொண்டே இருந்தது. சிறிது நேரம் அங்கு இருந்துவிட்டு திருவலஞ்சுழி சென்றோம்.

திருவலஞ்சுழியில் வெள்ளை விநாயகர் பிரசித்தம். சென்ற நேரம் மின்சாரம் தடைப்பட்டுபோனது. கற்பூர தீபயொளியில் நிறைவான காட்சி கிடைக்கையில் மின்சாரமும் வந்து அந்த நிமிடத்தை மேலும் நிறைவாக்கியது. விநாயகர் சந்நிதியே வாசலிலிருந்து நல்ல தூரத்தில் இருக்கும். பின்னர்தான் தெரிந்தது அதன்பின்புறம் சிவப்பெருமான் சந்நிதியும், அம்பாள் சந்நிதியும் மேலும் உள்ளடங்கி இருப்பது. சென்று தரிசித்து வந்தோம். தீபங்கள் மட்டும் எரிந்து கொண்டிருந்தது. தாராசுரம் போல இங்கும் மனித நடமாட்டம் இல்லை. இதுதான் கிராமங்களிலுள்ள கோயில்களின் நிலை பெரும்பாலும். ஆலயங்களை கட்டிய அரசர்கள் என்ன நினைப்பில் இவற்றை எழுப்பியிருப்பார்கள். அவர்கள் இன்றைய நிலையில் இக்கோயில்கள் இருப்பதை பார்த்தால் என்ன நினைத்திருப்பார்கள் என்ற எண்ணம் வராமல் இருக்கபோவதில்லை. எத்துனை மக்கள் இவ்வாறான ஆலயங்களுக்கு வந்து சென்றிருக்க வேண்டும். இப்போது எப்படியுள்ளது.... அங்கிருந்து சுவாமிமலை முருகனை தரிசிக்க சென்றோம். கிட்டத்திட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர் சென்றேன். சுவாமிநாதனின் அருமையான தரிசனம் கிடைக்கப்பெற்றோம். அனைவருக்கும் மனம் மிகவும் மகிழ்வாய் இருந்தது.அன்றைய தினத்தை அங்கிருப்பதிலேயே பெரியவரின் பிறந்தநாளை கொண்டாடியும், அடுத்த நாள் கூந்தலூர் செல்வதற்கான ஏற்பாடுகளை முடித்துக்கொண்டும் உறங்கச்சென்றோம்.

(பி.கு.: கடந்த ஆறு மாதங்களாக எழுத நினைத்து கடந்த இரண்டு நாட்களில் எழுதிய பயணத்தொடரின் முதல் பகுதி.)

Friday, May 7, 2010

சென்ற வாரயிறுதியில்...

இங்கு வந்துசேர்ந்து கிட்டத்திட்ட மூன்று மாதங்களாகிவிட்டது. ஒவ்வொரு வாரமும் ஒரேமாதிரியாக சென்றுகொண்டிருந்தது. வாரயிறுதிகளில் அதிகபட்சமாக கடைக்கு செல்வதற்கு மட்டுமே வீட்டினைவிட்டு வருவது என்று பெரும்பாலும் வீட்டினுள் அடைப்பட்டுக்கொண்டிருந்தேன். சிலருக்கு தனிமையில் வெளியில் சென்று வர பிடிக்கும்; சிலருக்கு தெரிந்த நண்பர்களோடோ அல்லது சிறு குழுவாகவோ சென்றுவர பிடிக்கும். நானோ இரண்டாவது ரகம். இங்கு வந்து சேர்ந்ததிலிருந்து சரியான சமயமோ, குழுவோ அமையாததால் பெரும்பாலும் நான்கு சுவர்றிற்குள் சிறை வாழ்க்கை போன்று வாரயிறுதிகளை கடத்திக்கொண்டிருந்தேன். இரண்டு முறை இரண்டு நண்பர்கள் வருவதாக இருந்தது.ஏனோ, இயற்க்கைக்கே பொறுக்கவில்லையோ தெரியவில்லை. அதுநாள்வரை நல்லவிதமாக இருந்த வானிலை நாங்கள் திட்டமிட்டு வைத்திருந்த வாரயிறுதியில் எங்கள் இருவரின் பகுதிகளிலும் கனமழையை கொட்டித்தீர்த்தது. வெறுப்பேற்றி சென்ற நாட்கள் அவை.வாய்ப்புகள் கைநழுவி சென்ற வண்ணமே இருந்தன. நமக்கென்று அதிர்ஷ்டம் இருக்கவேண்டும் என்று சொல்வார்களே....அது எனக்கு இல்லை என்று நினைத்து நொந்துகொண்டிருந்த நாட்களாய் காலம் சென்று கொண்டிருந்தது.

சென்ற வெள்ளியிரவு பள்ளித்தோழன் வாஷிங்கடன் டி.சி. யிலிருந்து சனியன்று முடிந்தால் எனது இருப்பிடத்திற்கு (பெத்லஹாம்) வருவதாக கூறினான். மறுநாள் காலை மின்னஞ்சல் அனுப்புவதாக கூறியிருந்தான். கூறியபடியே மதியம் 2 மணியளவில் வந்து சேர்வதாக அனுப்பியிருந்தான். மூன்றரை மணி நேர மகிழுந்து பயணம். அவன் வரும் மகிழ்ச்சியில் அவனுக்கும் சேர்த்து சமையலை செய்து முடித்தேன். சேர்ந்து சாப்பிடலாம் என்று காத்திருக்கையில் வழியில் போக்குவரத்தில் மாட்டிக்கொண்டதால் வந்துசேர மேலும் இரண்டு மணி நேரங்கள் ஆகுமென்றான். ஆஹா என்ன சோதனை என்று எண்ணியவாரே காத்துக்கொண்டிருந்தேன். சுமார் மூன்றரை மணியளவில் வந்து சேர்ந்தான். அவனை கண்டதில் எனக்கோ மகிழ்ச்சி. அவன் உணவருந்தியபின் சிறிது நேரம் அளவளாவிக்கொண்டிருந்தோம். இந்நேரத்தில் கணிணியில் மற்றொரு பள்ளித்தோழனையும் அழைத்து பேசிக்கொண்டிருந்தோம்.

மாலை என்ன திட்டம் என்று அவன் கேட்க அருகில் கடைகளுக்கு சென்று வரவேண்டும் என்றேன். பேசிக்கொண்டே இருக்கையில் இரவு நமது உணவருந்த நியு ஜெர்சி எடிசனிலுள்ள சரவண பவன் செல்லலாமா என கேட்க, சென்று வர ஆகும் நேரத்தை யோசிக்க சொன்னேன். மேலும், வெகுநேரம் வண்டியை ஓட்டி வந்ததால் அசதியாக இருப்பானோ என்று யோசித்தேன். அவனுக்கு அசதியொன்றும் இல்லையெனவும், நமது வண்டியில் செல்வதால் எளிமையாக சென்று வந்துவிடலாம் என்றும் அவன் கூற, உடனே கிளம்பிவிட்டோம்.


மாலை ஐந்து மணியளவில் கிளம்பினோம். அங்கே ஒரு கோயில் இருப்பதாகவும் செல்லலாமா என்றும் கேட்டான். உடனேயே சரியென்றேன். செல்லும் வழியில் காபி அருந்த சில நிமிடங்கள் நிப்பாட்டினோம். அந்த இடைவெளியில் வெகுநாட்களாக வாங்க எண்ணி தள்ளிபோட்டுக்கொண்டே வந்த கைப்பேசியை வாங்கி முடித்தோம். எத்துனை நாள் காத்திருப்பு. சில உந்து சக்திகளால்தான் பல விடயங்கள் எனக்கு சாத்தியமாகிறது என்பது மறுக்க முடியாதவொன்று.அங்கிருந்து கிளம்பி நேரே வுட்பிரிட்ஜ் அவன்யுவிலுள்ள ஆலயத்தை அடைந்தோம். ஆலயத்தில் கிட்டத்திட்ட அனைத்து சுவாமி விக்கிரங்களும் இருந்தன. அன்று சங்கடஹர சதுர்த்தி. சனிக்கிழமை வேறு. ஆலயத்தில் நல்ல கூட்டம். அந்த அளவு நம் நாட்டு மக்களை கண்டது ஒருவித மகிழ்ச்சியை தந்தது. என்னதான் எல்லைகள் இல்லையென்று கூறிக்கொண்டாலும், எங்கோ இருக்கும்போது பிறந்த நாட்டு மக்களை யார், எவர் என்று தெரியாமல் இருந்தாலும், அவர்களையெல்லம் ஓரிடத்தில் காண்பது கண்டிப்பாக மகிழ்ச்சியையே அளிக்கின்றது. ஒத்த வயதுடையோர், அவர்களின் குழந்தைகள் மற்றும் பெற்றோர் என பல வயதுடைய மக்கள். பெரும்பாலும் தென்னிந்தியர்கள். சில வயதான பெற்றோர் தங்களின் பேரக்குழந்தைகளுடன் நேரத்தை கழித்துக்கொண்டிருந்தனர். இறை தரிசனமும் நன்றாக கிடைத்தது.


சிறிது நேரம் அங்கிருந்துவிட்டு உணவருந்த சரவண பவன் நோக்கி கிளம்பினோம். இரவு ஒன்பது மணியளவில் அங்கு சென்று சேர்ந்தோம். அங்கும் வரிசையில் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. மூன்று மாதங்களுக்கு பிறகு வெளியில் சாப்பிடும் நம் நாட்டு உணவு. சுவைத்து சாப்பிட எண்ணுகையில் ஒரு விடயத்தை கூறினான். மணி, அருகில் தமிழ்த்திரைப்படம் திரையிடுகிறார்கள். அதற்கு செல்வோம் என்றான். எனக்கு சற்று அதிர்ச்சி. சாதாரணமாகவே மிக குறைந்த எண்ணிக்கையிலேயே படம் பார்க்கும் பழக்கமுள்ளவன். அதுவும், அவன் கூறிய படம் பற்றி நிறைய திரைப்பார்வைகள் படித்துவிட்டதாலும், அந்த படத்தில் முதலிலிருந்தே விருப்பமில்லாதிருந்ததாலும் வேண்டாம் என்றேன். உணவு பறிமாறப்படவும் காலதாமதமானதால் தப்பித்து விடலாம் என்று நினைத்தேன். நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்???? அது எப்படி நீ தப்பிக்கலாம் என்று அவன் கூறி உணவினை முடித்துக்கொண்டு சரியான நேரத்திற்கு படத்திற்கு அழைத்துச்சென்றுவிட்டான். எப்பொழுதுமே மகிழ்வாக இருக்க முடியுமா என்ன? அனுபவி ராசா அனுபவி என்று எண்ணியபடியே திரையரங்கினுள் சென்று உட்கார்ந்துவிட்டோம். படம் துவங்கிய முப்பது நிமிடங்களிலெல்லாம் அவனே இப்படி படம் இருக்குமென எதிர்பார்க்கவில்லையே என்று வருந்தினான். வெள்ளியில் சீட்டு வாங்கி போய்யாகிவிட்டது; வேறு வழியில்லை. முழு படத்தையும் பார்த்துவிட்டு இரவு ஒன்றரை மணியளவில் அங்கிருந்து கிளம்பினோம். அப்படி நாங்கள் பார்த்த படம் - சுறா. நாடுவிட்டு நாடு வந்து இந்த படத்தை திரையரங்கினுள் பார்ப்பேன் என்று சற்றும் நான் எண்ணவில்லை.விதி வலியது... வீடு வந்து சேர மணி மூன்றானது.அதன் பிறகு கணிணியில் குடும்பத்தாரோடும், உறவினர்களோடும் பேசிவிட்டு அந்த நாளை முடித்து படுக்கையில் சாய்கையில் அதிகாலை மணி நான்கரை.

அடுதத நாள் ஞாயிற்றுக்கிழமை மதிய உணவிற்கு இந்த ஊரிலேயே உள்ள ஒரு இந்திய உணவகத்திற்கு சென்று வந்தோம். அதன் பின்னர் சில வாங்க வேண்டிய பொருட்களை வாங்க உதவிசெய்து விட்டு நண்பன் கிளம்பிச்சென்றான்.

அந்த வாரயிறுதி எதிர்பாராமல் பல விடயங்களை அளித்து சென்றுள்ளது. இதற்கு முன்பு தனிமை என்ற தலைப்பில், அதன் வலியை உணர்ந்து(ம்), அனுமானமாகவும் கிறுக்கியிறுந்தபோது பல நட்புக்கள் திட்டாத குறையாக திட்டித்தீர்த்தன. அந்த உணர்விலிருந்து விடுப்பட்டு கழித்த சென்ற வாரயிறுதியின் ஒரு நாள், மகிழ்ச்சியை மனதில் ஆழமாக விதைத்துவிட்டு சென்றுவிட்டது. மறுபடியும் அத்தகைய நாள் எப்போது கிடைக்குமோ என்ற கேள்வியையும், ஏக்கத்தையும் எழுப்பியே சென்றுள்ளது.


Tuesday, March 30, 2010

தனிமை

யாருமற்ற நேரங்களில்
தனிமையின் நிசப்தங்களில்
செவிகளில் பாய்வது
மரணத்தின் ஓலங்கள்.

எதை தேடி இந்த பயணம்
யாரை ஏமாற்றி இந்த வாழ்வு
ஏதேதோ சாக்குபோக்கு கூறினாலும்
உண்மையான பதில் கூறியதாய்
தெரியவில்லை...
கூறத்தெரியவுமில்லை.

தோள் சாய யாருமின்றி
மொழி பேச நாதியின்றி
கரையும் நேரங்கள் கொடிது.
நேரில் பேச யாருமில்லாமல்
பேசும் சில மனிதர்களுக்காக
பல மணிநேரம்
கணினி முன் காத்திருந்து
சில மணிகளுக்கப்பால் பேச விசயங்களின்றி
நேரத்தை கொல்லும் நிலைமை...
அனுபவிக்கையில் கொடுமை.

என்னியல்பில்லாத குணங்கள் புதிதாய்
குடிகொண்டுள்ளன...
பொறாமை...
பலரின் சொல்லும் செயலும்
ஏற்படுத்தும் ஏக்கம்
விளைவோ
ஏராளமானோர் மீது பொறாமை.
எதிர்பாராமல்
என்னுள்ளும் பொறாமை.
நிலை மறந்த இக்குணத்தால்
என் மனமும்
கேவலமானவனே என்கிறது...
என்னை
குற்றவாளியாக்கிவிட்டது.

மனம் சஞ்சலத்தில் அலைபாய
குற்றயுணர்ச்சியில்
மனம் சங்கடப்படுத்துகின்றது.

ரசித்த விசயங்கள்
சுவையிழந்து போகின்றன
அர்த்தமற்றதாகி போகின்றதோ வாழ்க்கை.
தொலைத்துக்கொண்டிரிக்கின்றேனோ என்னை...
புரியவில்லை.
மரணத்திருக்கலாமோ என்கிறது
ரணமான மனம்.

Thursday, January 28, 2010

ம்....

இறக்கும் நாள் தெரிந்தால் வாழும்நாள் நரகமாகிவிடும் என்று படித்ததுண்டு. அதை போன்றதொரு நிலையில் தற்போது உள்ளது போன்று உணர்கிறேன். நிற்க... எனது இறக்கும் நாள் எல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் எனது இரண்டு மாத விடுமுறை முடிந்து இங்கிருந்து நான் கிளம்பும் நாள் முடிவாகிவிட்டது. கிளம்ப இன்னும் நான்கைந்து நாட்கள் உள்ளன. எனினும் கடந்த இரண்டு வாரங்களாகவே மனம் ஏனோ மிகவும் தடுமாறிக்கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் ஒருவித பதற்றத்துடன்தான் விடிகின்றது. அடுத்து செல்லப்போகும் இடம் மிகவும் ஆவலுடன் முயன்று, காத்திருந்து செல்ல அனுமதி பெற்ற இடம். சுமார் மூன்றாண்டு கனவு இது. இருந்தும், கிளம்பும் நாள் நெருங்க நெருங்க மனதில் இனம்புரியாத உணர்ச்சி ( வலி, கலவரம்...) பற்றிக்கொண்டு எறிகின்றது. கனவு தேசத்திற்கு கிளம்புகிறாய் என்றும் உனது நெடுநாளைய கனவு பலிக்க போகின்றது என்றும் கலாய்த்த, வாழ்த்திய எனது நெருங்கிய நட்புக்களுக்குகூட தெரியாது எனது மனதில் நான் நடத்திக்கொண்டிருக்கும் இந்த போராட்டம். இந்த பல்கலைகழகத்திற்கு ஓரிரு ஆண்டுகளாவது செல்லவேண்டும் என்ற அவாவுடன் விரும்பி ஏற்றுக்கொண்டதொரு பணியிடம் இது. எனினும், எதனால் என் மனம் இவ்வளவு தடுமாறுகின்றது என்று தெரியவில்லை. இதுவரை புதிய இடத்திற்கு செல்லும்போது இவ்வாறான நிலையில் இருந்ததில்லை. இப்போது ஏன் என்று புரியவில்லை. குடும்ப கூட்டினைவிட்டு மீண்டும் தனிமையை நோக்கி செல்வதாலா என்று தெரியவில்லையே. ம்... எடுத்த பணியினை முடிக்காமல் விடமுடியாது. அதற்காகவாவது சென்றுத்தான் ஆகவேண்டும். இப்போதைய வேண்டுதலெல்லாம் இருக்கும் இந்த இறுதி நாட்கள் மெதுவாக செல்லவேண்டும் என்பதுதான். நேரம் ஒரேமாதிரிதான் செல்லும் என்று தெரியும். மனமாவது மெதுவாக செல்வதுபோல உணரவேண்டும். ம்....உணர்த்த முடியா உணர்ச்சிகளுடன் இங்கே மீதமிருக்கும் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றேன்...