Friday, May 7, 2010

சென்ற வாரயிறுதியில்...

இங்கு வந்துசேர்ந்து கிட்டத்திட்ட மூன்று மாதங்களாகிவிட்டது. ஒவ்வொரு வாரமும் ஒரேமாதிரியாக சென்றுகொண்டிருந்தது. வாரயிறுதிகளில் அதிகபட்சமாக கடைக்கு செல்வதற்கு மட்டுமே வீட்டினைவிட்டு வருவது என்று பெரும்பாலும் வீட்டினுள் அடைப்பட்டுக்கொண்டிருந்தேன். சிலருக்கு தனிமையில் வெளியில் சென்று வர பிடிக்கும்; சிலருக்கு தெரிந்த நண்பர்களோடோ அல்லது சிறு குழுவாகவோ சென்றுவர பிடிக்கும். நானோ இரண்டாவது ரகம். இங்கு வந்து சேர்ந்ததிலிருந்து சரியான சமயமோ, குழுவோ அமையாததால் பெரும்பாலும் நான்கு சுவர்றிற்குள் சிறை வாழ்க்கை போன்று வாரயிறுதிகளை கடத்திக்கொண்டிருந்தேன். இரண்டு முறை இரண்டு நண்பர்கள் வருவதாக இருந்தது.ஏனோ, இயற்க்கைக்கே பொறுக்கவில்லையோ தெரியவில்லை. அதுநாள்வரை நல்லவிதமாக இருந்த வானிலை நாங்கள் திட்டமிட்டு வைத்திருந்த வாரயிறுதியில் எங்கள் இருவரின் பகுதிகளிலும் கனமழையை கொட்டித்தீர்த்தது. வெறுப்பேற்றி சென்ற நாட்கள் அவை.வாய்ப்புகள் கைநழுவி சென்ற வண்ணமே இருந்தன. நமக்கென்று அதிர்ஷ்டம் இருக்கவேண்டும் என்று சொல்வார்களே....அது எனக்கு இல்லை என்று நினைத்து நொந்துகொண்டிருந்த நாட்களாய் காலம் சென்று கொண்டிருந்தது.

சென்ற வெள்ளியிரவு பள்ளித்தோழன் வாஷிங்கடன் டி.சி. யிலிருந்து சனியன்று முடிந்தால் எனது இருப்பிடத்திற்கு (பெத்லஹாம்) வருவதாக கூறினான். மறுநாள் காலை மின்னஞ்சல் அனுப்புவதாக கூறியிருந்தான். கூறியபடியே மதியம் 2 மணியளவில் வந்து சேர்வதாக அனுப்பியிருந்தான். மூன்றரை மணி நேர மகிழுந்து பயணம். அவன் வரும் மகிழ்ச்சியில் அவனுக்கும் சேர்த்து சமையலை செய்து முடித்தேன். சேர்ந்து சாப்பிடலாம் என்று காத்திருக்கையில் வழியில் போக்குவரத்தில் மாட்டிக்கொண்டதால் வந்துசேர மேலும் இரண்டு மணி நேரங்கள் ஆகுமென்றான். ஆஹா என்ன சோதனை என்று எண்ணியவாரே காத்துக்கொண்டிருந்தேன். சுமார் மூன்றரை மணியளவில் வந்து சேர்ந்தான். அவனை கண்டதில் எனக்கோ மகிழ்ச்சி. அவன் உணவருந்தியபின் சிறிது நேரம் அளவளாவிக்கொண்டிருந்தோம். இந்நேரத்தில் கணிணியில் மற்றொரு பள்ளித்தோழனையும் அழைத்து பேசிக்கொண்டிருந்தோம்.

மாலை என்ன திட்டம் என்று அவன் கேட்க அருகில் கடைகளுக்கு சென்று வரவேண்டும் என்றேன். பேசிக்கொண்டே இருக்கையில் இரவு நமது உணவருந்த நியு ஜெர்சி எடிசனிலுள்ள சரவண பவன் செல்லலாமா என கேட்க, சென்று வர ஆகும் நேரத்தை யோசிக்க சொன்னேன். மேலும், வெகுநேரம் வண்டியை ஓட்டி வந்ததால் அசதியாக இருப்பானோ என்று யோசித்தேன். அவனுக்கு அசதியொன்றும் இல்லையெனவும், நமது வண்டியில் செல்வதால் எளிமையாக சென்று வந்துவிடலாம் என்றும் அவன் கூற, உடனே கிளம்பிவிட்டோம்.


மாலை ஐந்து மணியளவில் கிளம்பினோம். அங்கே ஒரு கோயில் இருப்பதாகவும் செல்லலாமா என்றும் கேட்டான். உடனேயே சரியென்றேன். செல்லும் வழியில் காபி அருந்த சில நிமிடங்கள் நிப்பாட்டினோம். அந்த இடைவெளியில் வெகுநாட்களாக வாங்க எண்ணி தள்ளிபோட்டுக்கொண்டே வந்த கைப்பேசியை வாங்கி முடித்தோம். எத்துனை நாள் காத்திருப்பு. சில உந்து சக்திகளால்தான் பல விடயங்கள் எனக்கு சாத்தியமாகிறது என்பது மறுக்க முடியாதவொன்று.



அங்கிருந்து கிளம்பி நேரே வுட்பிரிட்ஜ் அவன்யுவிலுள்ள ஆலயத்தை அடைந்தோம். ஆலயத்தில் கிட்டத்திட்ட அனைத்து சுவாமி விக்கிரங்களும் இருந்தன. அன்று சங்கடஹர சதுர்த்தி. சனிக்கிழமை வேறு. ஆலயத்தில் நல்ல கூட்டம். அந்த அளவு நம் நாட்டு மக்களை கண்டது ஒருவித மகிழ்ச்சியை தந்தது. என்னதான் எல்லைகள் இல்லையென்று கூறிக்கொண்டாலும், எங்கோ இருக்கும்போது பிறந்த நாட்டு மக்களை யார், எவர் என்று தெரியாமல் இருந்தாலும், அவர்களையெல்லம் ஓரிடத்தில் காண்பது கண்டிப்பாக மகிழ்ச்சியையே அளிக்கின்றது. ஒத்த வயதுடையோர், அவர்களின் குழந்தைகள் மற்றும் பெற்றோர் என பல வயதுடைய மக்கள். பெரும்பாலும் தென்னிந்தியர்கள். சில வயதான பெற்றோர் தங்களின் பேரக்குழந்தைகளுடன் நேரத்தை கழித்துக்கொண்டிருந்தனர். இறை தரிசனமும் நன்றாக கிடைத்தது.


சிறிது நேரம் அங்கிருந்துவிட்டு உணவருந்த சரவண பவன் நோக்கி கிளம்பினோம். இரவு ஒன்பது மணியளவில் அங்கு சென்று சேர்ந்தோம். அங்கும் வரிசையில் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. மூன்று மாதங்களுக்கு பிறகு வெளியில் சாப்பிடும் நம் நாட்டு உணவு. சுவைத்து சாப்பிட எண்ணுகையில் ஒரு விடயத்தை கூறினான். மணி, அருகில் தமிழ்த்திரைப்படம் திரையிடுகிறார்கள். அதற்கு செல்வோம் என்றான். எனக்கு சற்று அதிர்ச்சி. சாதாரணமாகவே மிக குறைந்த எண்ணிக்கையிலேயே படம் பார்க்கும் பழக்கமுள்ளவன். அதுவும், அவன் கூறிய படம் பற்றி நிறைய திரைப்பார்வைகள் படித்துவிட்டதாலும், அந்த படத்தில் முதலிலிருந்தே விருப்பமில்லாதிருந்ததாலும் வேண்டாம் என்றேன். உணவு பறிமாறப்படவும் காலதாமதமானதால் தப்பித்து விடலாம் என்று நினைத்தேன். நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்???? அது எப்படி நீ தப்பிக்கலாம் என்று அவன் கூறி உணவினை முடித்துக்கொண்டு சரியான நேரத்திற்கு படத்திற்கு அழைத்துச்சென்றுவிட்டான். எப்பொழுதுமே மகிழ்வாக இருக்க முடியுமா என்ன? அனுபவி ராசா அனுபவி என்று எண்ணியபடியே திரையரங்கினுள் சென்று உட்கார்ந்துவிட்டோம். படம் துவங்கிய முப்பது நிமிடங்களிலெல்லாம் அவனே இப்படி படம் இருக்குமென எதிர்பார்க்கவில்லையே என்று வருந்தினான். வெள்ளியில் சீட்டு வாங்கி போய்யாகிவிட்டது; வேறு வழியில்லை. முழு படத்தையும் பார்த்துவிட்டு இரவு ஒன்றரை மணியளவில் அங்கிருந்து கிளம்பினோம். அப்படி நாங்கள் பார்த்த படம் - சுறா. நாடுவிட்டு நாடு வந்து இந்த படத்தை திரையரங்கினுள் பார்ப்பேன் என்று சற்றும் நான் எண்ணவில்லை.விதி வலியது... வீடு வந்து சேர மணி மூன்றானது.அதன் பிறகு கணிணியில் குடும்பத்தாரோடும், உறவினர்களோடும் பேசிவிட்டு அந்த நாளை முடித்து படுக்கையில் சாய்கையில் அதிகாலை மணி நான்கரை.

அடுதத நாள் ஞாயிற்றுக்கிழமை மதிய உணவிற்கு இந்த ஊரிலேயே உள்ள ஒரு இந்திய உணவகத்திற்கு சென்று வந்தோம். அதன் பின்னர் சில வாங்க வேண்டிய பொருட்களை வாங்க உதவிசெய்து விட்டு நண்பன் கிளம்பிச்சென்றான்.

அந்த வாரயிறுதி எதிர்பாராமல் பல விடயங்களை அளித்து சென்றுள்ளது. இதற்கு முன்பு தனிமை என்ற தலைப்பில், அதன் வலியை உணர்ந்து(ம்), அனுமானமாகவும் கிறுக்கியிறுந்தபோது பல நட்புக்கள் திட்டாத குறையாக திட்டித்தீர்த்தன. அந்த உணர்விலிருந்து விடுப்பட்டு கழித்த சென்ற வாரயிறுதியின் ஒரு நாள், மகிழ்ச்சியை மனதில் ஆழமாக விதைத்துவிட்டு சென்றுவிட்டது. மறுபடியும் அத்தகைய நாள் எப்போது கிடைக்குமோ என்ற கேள்வியையும், ஏக்கத்தையும் எழுப்பியே சென்றுள்ளது.