Friday, April 24, 2009

இந்தியர் எனில் ஹிந்தி தெரியவேண்டுமா?

இந்த விடயம் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடந்தது. தஞ்சையிலிருந்து பாரி மாநகர் வந்துள்ள எனது நண்பனின் பெற்றோருடன் பாரியிலுள்ள ஓர்சே அருங்காட்சியகத்திற்கு சென்றிருந்தோம். அங்கே சந்தித்த இரண்டு விதமான நபர்களை பற்றி எழுதவேண்டும் என தோன்றியது.

உள்வாயிலில் ஒருவர் நின்றுகொண்டு புதிதாக வருவோர்க்கு வழிகாட்டிக்கொண்டிருந்தார். அவரை பார்த்தபோதே தமிழர் என்று தெரிந்தது. சிறிது தள்ளி நின்ற நாங்களும் தமிழிலேயே பேசிக்கொண்டு உள்ளே செல்வதற்கு தயார் செய்து கொண்டிருந்தோம். அவர் எங்களுக்கு வழிகாட்டுவதற்காக எங்களிடம் வந்து நாங்கள் எந்த ஊர், என்ன மொழி என்று ஆங்கிலத்தில் வினவினார். தமிழ் என்று உறுதிபடுத்திக்கொண்ட பின்னரே எங்களோடு தமிழில் சரளமாக பேச ஆரம்பித்து, நாங்கள் எவ்வாறு செல்லவேண்டும், என்னவெல்லாம் உள்ளன என்று விளக்கினார். பாண்டிச்சேரியை சேர்ந்த அவர், இந்த நாட்டில் குடியேறி பல ஆண்டுகள் ஆகிவிட்டதாக கூறினார். நம்மால் ஓரளவு நம் தமிழ் மக்களை அடையாளம் கண்டுகொண்டுவிட முடியும். அப்படியிருந்தும் அவர் எங்களிடம் மொழி யாது என்று அறிந்துகொண்ட பின்னரே இருவருக்கும் தாய்மொழியான தமிழில் பேசளாயினார். இவரைப்பற்றி எழுத காரணம் அடுத்த இரண்டு மணிநேரத்திற்குள் நாங்கள் சந்தித்த வடநாட்டு இந்தியரின் நேர்மாறான செயலே.

நாங்கள் ஒருபகுதியை பார்த்துவிட்டு சிறிது ஓய்வெடுக்க அமர்ந்தோம். நண்பனும் அவன் பெற்றோரும் ஒரு பக்கமும், அங்கு இடமில்லாததால் அவர்களுக்கு நேரெதிரே நானும் அமர்ந்தேன். இதற்கு சற்றுமுன்பே எங்களை கடந்து சென்ற அந்த மனிதரை கவனித்தேன். இந்தியர் என்று தெரிந்தது. நான் அமர்ந்தபின் என் பின்புறத்திலிருந்து “ க்யா பாய்” என்று ஹிந்தியில் ஒரு குரல். எனக்கு அந்த மனிதராகதான் இருக்கவேண்டும் என்றுபட்டது. ஆனால் திரும்பி பதிலளிக்க மனமில்லை. வெளிநாட்டில், யார் என்றே தெரியாத ஒருவரிடத்தில் இந்தியர் என்ற ஒரு காரணத்திற்காக ஹிந்தியில் பேச ஆரம்பித்தது எனக்கு சரியாகபடவில்லை. எனது பதில் இல்லாததால் ஆங்கிலத்தில் கேட்க ஆரம்பித்தார். லேசாக பேச்சு கொடுத்துவிட்டு எனக்கு ஹிந்தி தெரியாதா என்றார். அவ்வளவு தெரியாது என்றேன். அப்படியானால் பிரான்ஸ் நாட்டிலேயே பிறந்துவளர்ந்தாயா என்றார். இல்லை, நான் சென்னைவாசி; இங்கு வந்து நான்கு மாதங்கள்தான் ஆகின்றது என்றேன். உடனே இந்தியாவில் பிறந்து வளர்ந்துவிட்டு ஹிந்தி தெரியாமல் எப்படி இருக்கலாம் என கேள்வி எழுப்ப எனக்கு கோபம் அதிகரித்து. இந்த கேள்வியை எதிர்பார்த்தேன் என்றே சொல்லவேண்டும். இவ்வாறான மக்களை நமது நாட்டிலேயே நாம் பார்த்திருப்போம். சாதாரணமாக எனக்கு யாருடனும் சண்டையிட பிடிக்காததால், இந்தியர் என்றால் ஹிந்தி தெரியவேண்டியது அவசியம் இல்லை என்று அந்த நொடிக்கு பேச்சை முடித்தேன்.

இவர்கள் எல்லாம் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என எனக்கு புரியவில்லை. இவர்களுக்கு யார் சொல்லிக்கொடுத்தது இந்தியன் என்றால் ஹிந்தி தெரியவேண்டும் என்று. யார் போட்ட சட்டம் என்று தெரியவில்லை. சிலர் அது தேசிய மொழி என்று வாதிடுவர். அது அலுவல் மொழியே தவிர தேசிய மொழி கிடையாது. இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை அறியாமல் நம்மிடம் விவாதிக்கும்போது கண்டிப்பாக கோபம்தான் வரும். அவர் பற்றிய விவரம் விசாரித்தபோது இரசாயன பொறியாளர் எனவும், மத்திய பிரதேசத்துக்காரர் என்றும், செர்மனி நாட்டிற்கு ஒரு குழுவுடன் அலுவல் சந்திப்பிற்கு வந்துவிட்டு, பாரி மாநகர் பார்க்க இரண்டு நாட்கள் வந்ததாகவும் கூறினார். அலுவல் அதிகாரிகளிடம் பொதுமொழியான ஆங்கிலத்தில்தானே பேசுவார்கள், பேசியாகவேண்டும்; அப்படியிருக்க இவர்கள் மற்ற இடங்களில் தம் நாட்டினர் எல்லோரிடமும் ஹிந்தியில் பேச முற்படுவது என்ன நியாயம் என்றே தெரியவில்லை.

அதோடு விட்டாரா அவர். வாழ்வதற்கு எந்த நாடு (இந்தியா / பிரான்ஸ்) சிறந்தது என்றார். ஒப்பிடுவதில் எனக்கு விருப்பமும் இல்லை, அது சரியும் இல்லை. எனவே, இரண்டிலும் பல நல்லது- கெட்டது உள்ளது, அது தனிப்பட்டவர் விருப்பம் என நான் கூற, உனது விருப்பத்தைதான் கேட்டேன், நீ எதை விரும்புகிறாய் என்று ஆரம்பித்தார். இங்கே இருக்கும் நல்லதை எடுத்துக்கொண்டு நீ நமது நாட்டில் பயன்படுத்தலாமே என்றும் கூற, எனக்குள் ஏற்கனவே இருந்த என் கோபம் அதிகமானது. என்னைப்பற்றி ஒன்றுமே தெரியாத ஒருவர் இவ்வாறான அறிவுரைகள் கூறவேண்டிய அவசியமேயில்லை. அதோடு ஒருவர் கேட்கும்/சொல்லும் விதத்திலேயே எந்த மனநிலையிலிருந்து கேட்கிறார்/சொல்கிறார் என நம்மால் பெருமளவு யூகித்துவிட முடியும். ஏற்கனவே மொழி விடயத்தில் அவரின் பரந்த மனப்பான்மையை புரிந்துகொண்டதால், நான் எப்போதுமே நல்ல விடயங்களை கண்டு அவற்றைதான் செய்கிறேன் என்றும், விதிப்படிதான் எப்போதும் நடக்கிறேன் என்றும் வந்த கோபத்தை காட்டிக்கொள்ளாமல் சொல்லிமுடித்தேன். அப்போதே சரியாக என் நண்பன் வந்து அடுத்த இடம் செல்ல அழைத்துக்கொண்டு போய்விட்டான்.

அவன் பின்னர் என்ன சண்டைபோட்டுக்கொண்டிருந்தாய் என வினவ, நான் இந்த ஹிந்தி மொழி பிரச்சினையை கூறினேன். அவனது ஒரே பதில் அந்த வகையான மனிதர்கள் என்னிடம் பேசியிருக்கவேண்டும், சரியான பதில் கொடுத்திருப்பேன் என்றான். அது உண்மைதான். என்னைவிட அதிக மொழிப்பற்றும், மொழி அறிவும் உடையவன். அந்த மனிதர் தப்பித்தார் என்றே சொல்லவேண்டும்.

------------------------------------------------------------------------------------------------

இது சென்ற ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று நடந்தது. நாங்கள் நண்பர்கள் மூவர் சேர்ந்து இந்த பல்கலைகழகத்தில் உள்ள ஒருசில இந்திய மாணவர்களை இரவு விருந்து உணவிற்கு அழைத்திருந்தோம். பலரை நாங்கள் முதல்முறையாக பார்கிறோம். அங்கு இருந்த எங்களில் மூவர் தமிழ்; மற்ற ஆறு பேரும் ஆந்திரா, மும்பை மற்றும் வடமாநிலத்தவர்கள். பரஸ்பரம் அறிமுகம் செய்துகொண்டு பேசிக்கொண்டிருந்தோம். அனைவரும் இருப்பதால் நாங்கள் மட்டும் ஒரு மொழியில் பேசினால் சங்கடப்படுவார்களோ என்றென்னி தமிழ் நண்பரிடம் ஆங்கிலத்தில் ஏதோ பேசிக்கொண்டிருந்தேன். ஒருவன் வந்து அனைவரும் இருப்பதால் பொது மொழியாம் ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்றான். அவன் நாங்கள் தமிழில் பேசிக்கொண்டிருந்ததாக கற்பனை செய்துகொண்டு அறிவுறித்தினான். வந்த கோபத்தை காட்டிக்கொள்ளாமல் நாங்கள் இதுவரை ஆங்கிலத்தில்தான் பேசிக்கொண்டிருந்தோம், அனைவரோடும் இருப்பதாலும், அனைவருக்கும் புரியவேண்டும் என்பதாலும் தமிழில் அங்கே பேசிக்கொள்ளவது நன்றாக இருக்காது என்பது எங்களுக்கு தெரியும் என்றும் எடுத்துரைத்தேன். சிரித்துக்கொண்டான்.

அவர்களின் செய்கையோ மாறுபட்டது. அவர்களின் அறிமுகம் மட்டுமே ஆங்கிலத்தில்; பிறகு அவர்கள் ஹிந்தியில் பேசிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கு அவர்கள் சொன்ன விளக்கம் ஆங்கிலத்தில் சொன்னால் அவர்கள் சொல்ல விரும்பிய துணுக்குகள், நகைச்சுவைகளின் சாராம்சம் வெளிப்படாது என்பதாகும். இது எந்த ஊரின் நியாயம் என தெரியவில்லை. ஆங்கிலம் தெரிந்த அவர்களுக்கு அயல்நாட்டிலும் பிற மாநிலத்தவர்கள் இருந்தாலும் ஆங்கிலத்தைவிடவும் ஹிந்தி பொதுமொழியாகிவிட்டது. மற்றவர்கள் அவர்கள் மொழியில் பொது இடத்தில் பேசிக்கொண்டால் தவறு; ஆனால் ஹிந்தி மொழிக்காரர்கள் மட்டும் அப்படி பேசிக்கொள்ளலாம்.

எனக்கு ஹிந்திமொழி மீது வெறுப்பு இல்லை. நானும் சிறிய வயதில் படித்துள்ளேன். ஆனால் அந்த மொழி பேசும் இப்படிப்பட்ட மக்களின் செய்கைதான் அந்த மொழியை அவர்களிடம் பேசக்கூடாது என்ற நிலைக்கு என்னை தள்ளிவிட்டுள்ளது. ஹிந்தி தவிர மற்ற மொழியே தெரியாதவர்கள் பேசினால் முடிந்தவரை எனக்கு தெரிந்த ஹிந்தியில் பதில் கூற முயற்சிப்பேன். ஆனால் மற்ற நாட்டவரிடம் ஆங்கிலம் பேச முடியும்; மற்ற மாநிலத்தவரிடம் ஹிந்தியில்தான் பேச முடியும் எனில் அவ்வாறான நட்போ, உறவோ தேவையேயில்லை என நினைக்கிறேன். மொழி என்பதே நமது கருத்துக்களை மற்றவர்களிடம் எடுத்து செல்ல பயன்படும் ஒரு சாதனம். அப்படியிருக்க அனைவருக்கும் தெரிந்த, புரிந்த மொழியை உபயோகிக்காது தம் மொழியை திணிப்பது சரியாகபடவில்லை. பல மொழிகளை கற்றுக்கொள்ளலாம், கையாளலாம்; ஆனால் தம் மொழியை மற்றவர் மீது யாரும் திணிக்கக்கூடாது என்பது என் கருத்து.

Monday, April 20, 2009

இரு படங்களும் பல கேள்விகளும்

இந்த இரண்டு படங்களை பற்றி எழுத வேண்டும் என பல நாட்களாக எண்ணிக்கொண்டிருந்தேன். நான் முழுமையாக அமர்ந்து பார்த்து, என்னுள் பல கேள்விகளை எழுப்பிய படங்கள். ஒன்று ஹிந்தி மொழி படமான தாரே சமீன் பர். மற்றொன்று தமிழில் நவரசம். இவற்றைப்பற்றி எனது எண்ணங்களை மட்டுமே எழுதுகிறேன்.

அமீர் கானின் “தாரே சமீன் பர்” பலராலும் புகழப்பட்டு வர்த்தகரீதியாகவும் வெற்றி பெற்ற படம். டிஸ்லெக்சியா நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் கதையை கூறியிருப்பார்கள். அவனுடைய உலகம் எப்படிப்பட்டது, அதனை புரிந்துகொள்ளாத பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களினால் அவன் படும் சங்கடங்கள் என பல விவரங்களை காண்பித்திருப்பார்கள். அவனது நோயினை புரிந்துகொண்டு, அந்த சிறுவனை மெல்ல மெல்ல இயல்பான வாழ்க்கைக்கு கொண்டுவந்து, அவனது திறமையை வெளிக்கொண்டு வரும் ஆசிரியராக அமீர் கான் நடித்திருப்பார். ஒரு அழகான ஓவியன் அந்த சிறுவனுள் புதைந்து இருப்பான். அந்த ஒரு ஆசிரியர் இல்லாவிடில் அந்த ஓவியன் யாருக்கும் தெரியாமல் சென்றிருக்க வாய்ப்பு உள்ளது.

இந்த படத்தில் வரும் பெற்றோர், ஆசிரியர்கள் செயல்கள் பெருவாரியான மக்கள் செய்யும் தவறை காண்பிக்கின்றது. பொதுவாக அனைத்து குழந்தைகளிடமும் பெரியவர்கள் இப்படிதான் நடந்துகொள்கிறார்கள். கல்வி மிகவும் அவசியம்; அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் ஏட்டுக்கல்வி மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை பலரும் புரிந்து கொள்வதில்லை. ஒவ்வொருவருக்குமுள்ள தனித்திறமையை, விருப்பத்தை பெரும்பாலும் அறிந்துகொள்வதும் இல்லை; அப்படியே அறிந்து கொண்டாலும் அதனை ஊக்குவிப்பதில்லை. கல்வி என்பது மதிப்பெண் மட்டுமே என்று நினைக்கின்றனர். அனைவருடைய குறிக்கோளும் மதிப்பெண், அதிக மதிப்பெண் என்பதிலேயே நிற்கிறது. நன்றாக படிக்கும் குழந்தை முதல் மதிப்பெண் பெறுபவராக வரவேண்டும், சுமாராக படிக்கும் குழந்தை அதிக மதிப்பெண் பெறுபவராக வரவேண்டும் என்றே அறிவுறித்தி வழிகாட்டப்படுகின்றனர். சரியாக படிக்காத குழந்தைகளை மக்கு, மரமண்டை என ஏசி அவர்களின் தன்னம்பிக்கையை கொன்றுவிடுகின்றனர். இல்லாவிடில் சிறப்பு வகுப்பில் சேர்த்து எந்நேரமும் புத்தகமும் கையுமாய் அலையவைத்து எப்படியாவது தேர்ச்சிபெறுவதற்கு முயல்வது. இவ்வாறெல்லாம் செய்தால் அந்த குழந்தை வெறும் மதிப்பெண் வாங்கும் இயந்திரமாகதான் வளருமே அன்றி கல்விகற்ற ஒரு மனிதராக வளராது. படிக்கும் விடயங்களிலும் புரிதல் இருக்காது; புரிதலின்றி படிப்பதால் பயனும் இருக்காது.

எந்த ஒரு செயலை செய்வதற்கும் அதன் மீது ஈடுபாடு இருக்கவேண்டும். அந்த செயலை நேசிக்க வேண்டும். அந்த செயலின் மீது நாட்டம் வரவேண்டும். அப்படி ஒரு நாட்டம், ஆசை வந்துவிட்டால் அதில் சோடை போகமாட்டார்கள். வளர்ந்த கல்லூரி மாணவர்களே தங்களுக்கு ஈடுபாடு ஏற்படுத்தாத ஆசிரியரின் வகுப்பில் சரியாக கவனிக்காமல் புறக்கனிப்பார்கள்; அப்படியிருக்க விளையாட்டுத்தனம் அதிகமாக இருக்கும் குழந்தை பருவத்தில், அவர்களுக்கு கல்வியின் மீது ஈடுபாட்டை ஏற்படுத்தாமல் வற்புறுத்தி மட்டும் படிக்கவைக்க முயல்வது எப்படி நியாயமாகும். குழந்தைகள் படிக்க தடுமாறுகிறார்கள் என்றால் அதன் காரணத்தை அறிய முற்படவேண்டும். காரணத்தை கண்டுபிடித்து அதனை நிவர்த்தி செய்ய வேண்டும். உலகிலுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் கண்டிப்பாக ஒரு தீர்வு உள்ளது. பிரச்சினையின் மூலகாரணத்தை அறிய முற்பட வேண்டும். பெரும்பாலான நேரங்களில் அதனை கவனிக்க மறந்துவிடுகிறோம். பெரியவர்கள் செய்யும் தவறினால் பாதிக்கப்படுவது தங்கள் குழந்தைகள்தான் என்பதை பலரும் உணருவதில்லை. பிள்ளைகளை கரித்துக்கொட்டுவதில் பயனில்லை; மாறாக அவர்களின் திறமையை பெரியவர்கள் அறிந்துகொண்டு அவர்களுக்கு சரியான வழியினை காண்பித்தால் அவர்களின் வாழ்வும் சிறக்கும். அனைவரும் புகழும் பிள்ளைகளாக அவர்கள் வளருவார்கள்.

இந்த படத்திலேயே பார்க்கும் மற்றொரு விடயம் ஒப்பீடு செய்வது. சகோதர-சகோதரிக்குள், தோழர்களுக்குள் என் ஒப்பீடு செய்து சரியாக படிக்காத பிள்ளைகளை மட்டம் தட்டுவது, இது எவ்வளவு பெரிய தவறு. பெற்றோர் பெரும்பாலும் சொல்வது இருவருக்கும் ஒரேமாதிரிதான் வசதிகள் செய்து கொடுத்துள்ளோம்; ஆனால் இருவரும் ஒரேமாதிரி நன்றாக படிப்பதில்லை. இதில் யோசிக்க வேண்டியது வசதிகள் இல்லை. மாறாக குழந்தைகளிடம் உள்ள குறைபாடுகள். எதனால் ஒருவன் நன்றாக படிப்பதில்லை என்பதை ஆராயவேண்டும். அதற்கு ஒரு சரியான தீர்வு காணவேண்டும். அதனை விடுத்து ஒப்பிட்டுகொண்டே இருந்தால் அங்கே பொறாமை வளருமேயன்றி ஆரோக்கியமான போட்டி வளராது. இதனால் விட்டுக்கொடுத்தல், சகோதரத்துவம் போன்ற நல்ல பண்புகளுடன் வளரக்கூடிய ஒரு சமூகத்தை அழிப்பதுபோல தெரிகிறது. நம்மால் முடிந்தவரை பொறாமைகளற்ற வளமான போட்டிகளை வளர்ப்போம்,


மற்றொரு படம் நவரசம். இந்த படத்தை நான் பார்க்கவேண்டும் என என் நண்பன் கையேடு கூறியபோதே அது சராசரி படமில்லை என்று புரிந்துவிட்டது. அவன் அறிமுகப்படுத்தும் பல விடயங்கள் ஒரு தனி பரிமானத்துடன்தான் இருக்கும், அந்த படம் திருநங்கைகளை பற்றிய படம். சந்தோஷ்சிவன் இயக்கத்தில் உருவான படம். திருநங்கைகள் என்றாலே ஒருவித அருவெறுப்பு, பயம் என்றே பழக்கப்பட்டுவிட்டோம். ஒருசில ஆண்டுகளாகதான் அவர்களை பற்றிய சிறு புரிதல் வந்துள்ளது. சென்ற ஆண்டு சி என் என் தொலைக்காட்சியில் அவர்களைப்பற்றி ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பினார்கள். அதுவும் எனது பார்வையை மாற்ற வழிசெய்தது என்றே சொல்லவேண்டும்.

இந்த படத்தில் தான் திருநங்கை என்பதை காட்டிக்கொள்ளாத தனது சிற்றப்பாவை வெளிக்கொணர பாடுபடும் ஒரு பெண் குழந்தையின் கண்ணோட்டத்தில் காண்பித்திருப்பார் இயக்குனர். அண்ணனுக்கும், சமூகத்துக்கும் பயந்து ஆண் வேடத்திலேயே அந்த திருநங்கை இருப்பார். எனினும் அவருக்குள் கூவாகம் செல்லவேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருக்கும். அந்த பெண் குழந்தையின் பெற்றோர் தங்கள் மகளை தன் தம்பியின் பொறுப்பில் விட்டுவிட்டு மூன்று நாட்கள் வெளியூர் சென்றுவிடுவார்கள். அந்த திருநங்கை தன் அண்ணன் மகளுக்கு தெரியாமல் எப்படியோ கூவாகம் சென்றுவிடுவார். அவரை தேடி அந்த பெண் குழந்தை சென்று யாருமே தெரியாத ஊரில் எப்படி தன் சிற்றப்பாவை கண்டுபிடித்து திரும்ப அழைத்துக்கொண்டு வருகிறார் என்று காண்பித்திருப்பார்கள். இறுதியில் அவர் மற்றவர் நலனுக்காக என்றென்னி வீட்டைவிட்டு சென்றுவிடுவார். இந்த படத்தில் திருநங்கைகளின் மனநிலை, சமூகத்தில் அவர்கள் அனுபவிக்கும் சங்கடங்கள், கூவாகத்தில் நடைப்பெறும் நிகழ்ச்சிகள், சடங்குகள் என பலவற்றை காண்பித்திருப்பார்கள். அந்த நிகழ்ச்சிகளே நம்மை பாதிக்கும். அவர்கள் அனுபவிக்கும் இன்னல்களோ அதிகம். அவர்களைபற்றி எழுதும் சக்தி எனக்கில்லை; எனவே இங்கே அவர்களைப்பற்றி எழுதப்போவதில்லை.

இங்கே என்னை அவர்களை போலவே சரியளவு பாதித்தது அந்த பெண் குழந்தை சந்தித்திடும் அனுபவங்கள். முகவரி தேடிச்செல்லும் இடத்தில் தவறான இடத்தின் முகவரி அளித்து பெண்மையை சூறையாட பார்க்கும் ஆண் மாக்கள் பல இடங்களிலும் உள்ளனரே என எண்ணும்போது மனம் மிகவும் வேதனையடைகிறது. அவர்களிடமிருந்து அந்த குழந்தையை காப்பவறாக மற்றொரு திருநங்கையை காண்பித்திருப்பார்கள். அவரிடமும் தவறாக நடக்க முற்படும் சில மாக்களும் காண்பிக்கப்பட்டிருப்பார்கள். அந்த பெண்குழந்தையை நல்லவிதமாக கடைசியில் தன் வீட்டில் பார்க்கும்வரை மனதினுள் நிம்மதியில்லை.

ஏனோ பாதிக்கப்படுபவர்களை காணவே மனதினுள் அச்சம் எழுகிறது. அதிலும் பெண்கள் என்றால் கூடுதல் பயம். ஏனெனில் அவர்களை பாதிப்பிற்கு உள்ளாக்க சமுதாயத்தில் ஒரு கும்பல் எப்போதும் சுற்றிக்கொண்டே இருக்கிறது. ஒரு சிலரின் தவறான இன்பத்திற்காக மற்றவர்கள் பாதிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் என தெரியவில்லை. பெண்களே இவ்வாறான ஒன்றிற்கு ஊக்குவிப்பதாக சிலர் கூறிக்கொண்டு சமுதாயத்தை காப்பாற்றுவதற்காக கிளம்பியுள்ளனர். அவ்வாறாக இருப்பின் பெண்குழந்தைகள் ஏன் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். நொய்டா, நித்தாரி படுகொலைகள், வடமாநிலங்களில் நடக்கும் பால்ய விவாகங்கள் என்று பாதிக்கப்பட்ட குழந்தைகளா அதற்கு பொறுப்பானவர்கள்? என்னவென்று சொல்ல நமது மக்களின் பழிசுமத்தும் மனப்பான்மையை...இதுதான் ஆங்கிலத்தில் எஸ்கேபிசம் என்பர்.

என்னதான் பெண்விடுதலை, பெண்முன்னேற்றம் என்று நாம் பேசிக்கொண்டிருந்தாலும் அவர்களுக்குரிய மரியாதையை சமூகம் சரியாக வழங்கவில்லையோ என்றே தோன்றுகிறது. பத்து வயது சிறுமியானாலும் சரி அய்ம்பது வயது பெண்ணாலும் சரி அவர்களின் தன்மானத்திற்கு, பெண்மைக்கு ஒரு மரியாதை இல்லையோ என்றே தோன்றுகிறது. படத்தில் ஏதும் மிகைப்படுத்தி காட்டவில்லை என்பதற்கு செய்திதாள்களில் நிதமும் வந்து கொண்டிருக்கும் செய்திகளே சாட்சி. பலாத்காரம், கற்பழிப்பு போன்ற செய்திகள் இல்லாத நாட்கள் என்று விடியும் என்றே தெரியவில்லை. இவ்வாறு நினைக்கையிலேயே வேதனையும், விரக்தியும், இந்த செய்கைகளை செய்யும் மனிதர்கள் மீது தீராத கோபமும்தான் வருகிறது.

மனிதர்கள் மாறுவார்களா? மனிதராக வாழ்வார்களா? சகமனிதரை மனிதராக பாவிக்கும், நடத்தும் மனப்பான்மை அனைவருக்குள்ளும் வளருமா என்பது கேள்வியாகவே உள்ளது. கேள்விக்கான பதில் ஆம் என்றால் மிகவும் நன்றாக இருக்கும். இந்த ஒரு மனமாற்றம் வந்தால் நல்லதொரு சமுதாயத்தை உருவாக்குகிறோம் என்ற நிம்மதி மனதில் இருக்கும்.

Monday, April 6, 2009

குடகு மலைப்பயணம் - 1ஆ

பாகமண்டலா – காவேரி, கன்னிகே மற்றும் பூமிக்கு அடியே செல்லும் சுயோதி ஆகிய மூன்று ஆறுகள் கலக்கும் கரையில் உள்ளது. பாககேஷ்வரர் ஆலயம் இந்த இடத்தின் சிறப்பு. கேரள மாநிலத்து வடிவமைப்பில் கட்டப்பட்ட கோயில். நாங்கள் சென்ற காலத்தில் மக்கள் கூட்டம் இல்லாததால் பொறுமையாக தரிசனம் செய்து வந்தோம். மலைப்பிரதேசத்தில் மழைக்காலத்தில் சென்றதால் எங்கும் பச்சை பசேல் என்று கண்ணிற்கு விருந்தாக இருந்தது.


மேகம் தழுவிசெல்லும் மலைகளை கண்டபோது மனம் துள்ளிகுதித்து ஆனந்த நடனமாடியது. மழையும் அவ்வப்போது பெய்துவந்ததால் அந்த இடமே மிக ரம்மியமாகவும், மனதிற்கு ஆனந்தம் அளிக்கும் விதமாகவும் இருந்தது. மழைத்தூறல் அதிகரித்ததாலும், மதிய உணவிற்கான நேரமாகிவிட்டதாலும் அங்கிருக்கும் உணவகத்திற்கு சென்றோம். கர்நாடக அரசு நடத்தும் உணவகத்திற்கு எங்கள் வாகன ஓட்டுனர் அழைத்து சென்றார். மதிய உணவு அங்கே முன்னரே சொன்னால்தான் கிடைக்குமாம்.ஆகையால் நாங்கள் எங்களுக்கு வேண்டியதை தயாரிக்க சொல்லிவிட்டு தலைகாவேரி நோக்கி பயணமானோம்.

பாகமண்டலாவிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் பிரம்மகிரி மலைத்தொடரின் உச்சியில் உள்ளது தலைகாவேரி. செல்லும் வழியில் ஆங்காங்கே மலைதேன் விற்பனை நிலையங்கள் இருந்தன. தேன் உற்பத்திற்கு பெயர்பெற்ற இடமாக அந்த ஊர்கள் விளங்கியதாம். காவேரி ஆற்றின் ஊற்றிடமாக,பிறப்பிடமாக தலைகாவேரி அறியப்படுகிறது. ஊற்று இருக்கும் இடத்தில் ஒரு சிறிய கோயில் கட்டப்பட்டிருந்தது. நதிகளை வழிபடும் வழக்கம் பலகாலமாக இருந்ததால் காவிரியன்னையை வழிபட்டோம். அங்கிருந்து பிரம்மகிரி மலைத்தொடரின் உச்சிக்கு செல்ல படிக்கட்டுகள் உள்ளன. அங்கிருந்து பார்த்தால் மலைத்தொடர் முழுதும் தெரியும் என்று இணையத்தில் படித்திருந்ததால், நாங்கள் படியேறி சென்றோம். நண்பனின் பெற்றோர் மற்றும் ஓரிருவர் மேலே வரவில்லை. மேலே செல்லசெல்ல கண்ட காட்சியை விவரிக்க வார்த்தைகள் போதாது. பசுமை, பசுமை, பசுமை... கண்ணிற்கு எட்டிய தூரம்வரை பசுந்தோல் போர்த்திய மலைத்தொடர்கள்தான். வேறு ஒன்றுமே தெரியவில்லை.மேகமூட்டமாக இருந்ததால் ஆங்காங்கே வெள்ளைநிற வடிவமைப்புகளும் பச்சைபோர்வையில் காணமுடிந்தது. இம்மாதிரியான இடங்கள்தான் உண்மையில் சொர்கமோ என்று தோன்றியது. சிறிது நேரம்தான் அங்கு நின்று அந்த அழகை அனுபவிக்க முடிந்தது. மழை ஆரம்பித்துவிட்டதால் அந்த இடத்தை விட்டகல மனமின்றி கீழே இறங்கினோம். கீழே கால்கள் இறங்கினாலும் கண்கள் பின்நோக்கி பார்த்தவாறேதான் இருந்தன.

மறுபடியும் பாகமண்டலா உணவு விடுதிக்கு சென்று பசியாறினோம். நண்பர்கள் ஒன்றாய் சேர்ந்து சென்றால் அங்கே கேலியும், கலாட்டாவும் இல்லாமலா இருக்கும்?? எல்லாமும் இருந்தது. அங்கே மகிழ்ச்சி அலைகள் மட்டுமே கரைபுரண்டோடியது. அன்றைய ஊர்சுற்றும் படலம் முடிந்துவிட்டதால் எங்கள் தங்குமிடத்திற்கு புறப்பட்டோம். வரும் வழியில் கூடுஉந்துவின் உருளிப்பட்டையில் துளை ஏற்பட்டதால் அதனை சரி செய்ய சில மணித்துளிகள் ஆனது. ஒரு பள்ளியின் அருகே காத்துகொண்டிருந்ததால் கிடைத்த சந்தர்ப்பத்தில் நண்பர்கள் சிலர் சிறு மாணவர்களுக்கான ஊஞ்சல், ஏற்ற-இறக்க விசை அசைவு போன்றவற்றில் மகிழ்ச்சியுடன் விளையாட ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் மனதில் புதைந்துபோன குழந்தைத்தனத்தைதான் காண முடிந்தது. அவர்களை மறுபடியும் அழைத்து வருவதற்கு படாத-பாடு பட வேண்டியதாகியிருந்தது. அன்றைய பொழுது இரவு நல்ல உணவுடனும், பார்த்த இடங்களை பற்றி அசைபோட்டுக்கொண்டும் முடிந்தது.

மறுநாள் பொழுதும் இனிதே புலர்ந்தது. காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டு, உரிமையாளர்களிடம் நன்றிகூறி விடைப்பெற்றுக்கொண்டு கிளம்பினோம். கீழே கபினக்காடு வந்தபோது எங்கள் ஊர்தியில் முதல்நாள் பிரச்சினை மறுபடியும் இருந்ததால், அதனை சரிசெய்துகொண்டு அப்பே (Abbe) நீர்வீழ்ச்சி நோக்கி சென்றோம். இந்த பயணமும் மகிழ்வாக இருந்தது.அப்பே (Abbe) நீர்வீழ்ச்சி ஒரு தனியார் தோட்டத்தினுள் உள்ளது. பெரிய நீர்வீழ்ச்சி கிடையாது; ஆனால் குடகு என்று சொன்னவுடன் அதன் பெயரும் பார்க்கவேண்டிய இடங்களுள் முதன்மையானதொன்றாக வரும். அந்த இடத்தின் அழகை ரசித்து அனுபவித்து கொண்டிருந்தோம்.ஆசைக்கு பல புகைப்படங்களும் எடுத்துக்கொண்டு எங்களின் கடைசி செல்லிடமாகிய திபத்திய மடம் இருக்கும் பயிலக்குப்பே நோக்கி பயணமானோம். எல்லா பயணத்தின் போதும் பாட்டும், பேச்சும், கிண்டலுமாகவே இருந்து கொண்டிருந்தது.

அதுவரை நமது மக்களாகவே கண்டுவந்த எங்களுக்கு, அதிக அளவில் புத்தமதத்து மக்களை கண்டபோது அந்த ஊரின் எல்லையை அடைந்துவிட்டோம் என்று புரிந்தது. அங்குள்ள புத்தர் கோயிலை காணவே மக்கள் அதிகயளவில் வருகின்றனர். பல வயதுடைய துறவிகளை அங்கு காணமுடிந்தது.கோயிலின் உட்புற சுவர்கள் முழுதும் பலவிதமான ஓவியங்களை காண முடிந்தது. என்னால் அவற்றை புரிந்துகொள்ள முடியவில்லை. எங்களால் முடிந்தது அவற்றின் முன்னால் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள மட்டுமே. மாலை வேலையில் அவர்கள் செய்யும் பிரார்த்தனையை காணமுடிந்தது.

இவற்றையெல்லாம் ரசித்து கொண்டிருந்ததில் நேரம் சென்றதே தெரியவில்லை. அப்பொழுதே மாலை ஆறு மணியாகி இருந்தது. நாங்கள் இரவுக்குள் பெங்களூரு வந்து சேர வேண்டியிருந்ததால் அந்த இடத்தைவிட்டு கிளம்ப மனமின்றி கிளம்பினோம். எங்கள் கூடுஉந்துவில் ஏறும் சமயம் அந்த காட்சி கண்ணில்பட்டது. துறவிகள் பலர் மாலைநேரம் விளையாடிக்கொண்டிருந்தனர் – மட்டைப்பந்து. அடடா, அவர்களையும் இந்த விளையாட்டு விடவில்லையே என்ற பேசிக்கொண்டே எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். பலரும் களைத்துபோய்விட்டதால் பயணம் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தது. வழியில் மத்தூர் அருகே இரவு உணவை முடித்துக்கொண்டு நள்ளிரவுவாக்கில் பெங்களூரு வந்தடைந்தோம்.

இந்த பயணம் நல்லவிதமாக அமைந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி. எப்போது போக வாய்ப்பு கிடைக்கும் என ஏக்கத்தோடும், ஆவலோடும் காத்துக்கொண்டிருந்த எனக்கு இந்த பயணம் அளித்த ஆனந்தத்திற்கு அளவே கிடையாது. இந்த பயணத்திற்கு காரணியாக இருந்த நண்பனின் பெற்றோர் வருகைக்குதான் நன்றி சொல்ல வேண்டும். உண்மையில் இந்த இடத்தின் அழகை வார்த்தைகளால் உணர்த்த, உணர இயலாது. சென்று கண்டுகளித்திட வேண்டும்.

அதற்கு பிறகு அடித்தடுத்து குறுகிய காலகட்டத்திற்குள் இரண்டு முறை குடகு செல்ல வாய்ப்பு கிடைத்து. அந்த சமயங்களில் சென்ற பிற இடங்களையும், நடந்த சுவையான சம்பவங்களையும் பின்னர் பதிவு செய்ய எண்ணியுள்ளேன்.