Monday, April 6, 2009

குடகு மலைப்பயணம் - 1ஆ

பாகமண்டலா – காவேரி, கன்னிகே மற்றும் பூமிக்கு அடியே செல்லும் சுயோதி ஆகிய மூன்று ஆறுகள் கலக்கும் கரையில் உள்ளது. பாககேஷ்வரர் ஆலயம் இந்த இடத்தின் சிறப்பு. கேரள மாநிலத்து வடிவமைப்பில் கட்டப்பட்ட கோயில். நாங்கள் சென்ற காலத்தில் மக்கள் கூட்டம் இல்லாததால் பொறுமையாக தரிசனம் செய்து வந்தோம். மலைப்பிரதேசத்தில் மழைக்காலத்தில் சென்றதால் எங்கும் பச்சை பசேல் என்று கண்ணிற்கு விருந்தாக இருந்தது.


மேகம் தழுவிசெல்லும் மலைகளை கண்டபோது மனம் துள்ளிகுதித்து ஆனந்த நடனமாடியது. மழையும் அவ்வப்போது பெய்துவந்ததால் அந்த இடமே மிக ரம்மியமாகவும், மனதிற்கு ஆனந்தம் அளிக்கும் விதமாகவும் இருந்தது. மழைத்தூறல் அதிகரித்ததாலும், மதிய உணவிற்கான நேரமாகிவிட்டதாலும் அங்கிருக்கும் உணவகத்திற்கு சென்றோம். கர்நாடக அரசு நடத்தும் உணவகத்திற்கு எங்கள் வாகன ஓட்டுனர் அழைத்து சென்றார். மதிய உணவு அங்கே முன்னரே சொன்னால்தான் கிடைக்குமாம்.ஆகையால் நாங்கள் எங்களுக்கு வேண்டியதை தயாரிக்க சொல்லிவிட்டு தலைகாவேரி நோக்கி பயணமானோம்.

பாகமண்டலாவிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் பிரம்மகிரி மலைத்தொடரின் உச்சியில் உள்ளது தலைகாவேரி. செல்லும் வழியில் ஆங்காங்கே மலைதேன் விற்பனை நிலையங்கள் இருந்தன. தேன் உற்பத்திற்கு பெயர்பெற்ற இடமாக அந்த ஊர்கள் விளங்கியதாம். காவேரி ஆற்றின் ஊற்றிடமாக,பிறப்பிடமாக தலைகாவேரி அறியப்படுகிறது. ஊற்று இருக்கும் இடத்தில் ஒரு சிறிய கோயில் கட்டப்பட்டிருந்தது. நதிகளை வழிபடும் வழக்கம் பலகாலமாக இருந்ததால் காவிரியன்னையை வழிபட்டோம். அங்கிருந்து பிரம்மகிரி மலைத்தொடரின் உச்சிக்கு செல்ல படிக்கட்டுகள் உள்ளன. அங்கிருந்து பார்த்தால் மலைத்தொடர் முழுதும் தெரியும் என்று இணையத்தில் படித்திருந்ததால், நாங்கள் படியேறி சென்றோம். நண்பனின் பெற்றோர் மற்றும் ஓரிருவர் மேலே வரவில்லை. மேலே செல்லசெல்ல கண்ட காட்சியை விவரிக்க வார்த்தைகள் போதாது. பசுமை, பசுமை, பசுமை... கண்ணிற்கு எட்டிய தூரம்வரை பசுந்தோல் போர்த்திய மலைத்தொடர்கள்தான். வேறு ஒன்றுமே தெரியவில்லை.மேகமூட்டமாக இருந்ததால் ஆங்காங்கே வெள்ளைநிற வடிவமைப்புகளும் பச்சைபோர்வையில் காணமுடிந்தது. இம்மாதிரியான இடங்கள்தான் உண்மையில் சொர்கமோ என்று தோன்றியது. சிறிது நேரம்தான் அங்கு நின்று அந்த அழகை அனுபவிக்க முடிந்தது. மழை ஆரம்பித்துவிட்டதால் அந்த இடத்தை விட்டகல மனமின்றி கீழே இறங்கினோம். கீழே கால்கள் இறங்கினாலும் கண்கள் பின்நோக்கி பார்த்தவாறேதான் இருந்தன.

மறுபடியும் பாகமண்டலா உணவு விடுதிக்கு சென்று பசியாறினோம். நண்பர்கள் ஒன்றாய் சேர்ந்து சென்றால் அங்கே கேலியும், கலாட்டாவும் இல்லாமலா இருக்கும்?? எல்லாமும் இருந்தது. அங்கே மகிழ்ச்சி அலைகள் மட்டுமே கரைபுரண்டோடியது. அன்றைய ஊர்சுற்றும் படலம் முடிந்துவிட்டதால் எங்கள் தங்குமிடத்திற்கு புறப்பட்டோம். வரும் வழியில் கூடுஉந்துவின் உருளிப்பட்டையில் துளை ஏற்பட்டதால் அதனை சரி செய்ய சில மணித்துளிகள் ஆனது. ஒரு பள்ளியின் அருகே காத்துகொண்டிருந்ததால் கிடைத்த சந்தர்ப்பத்தில் நண்பர்கள் சிலர் சிறு மாணவர்களுக்கான ஊஞ்சல், ஏற்ற-இறக்க விசை அசைவு போன்றவற்றில் மகிழ்ச்சியுடன் விளையாட ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் மனதில் புதைந்துபோன குழந்தைத்தனத்தைதான் காண முடிந்தது. அவர்களை மறுபடியும் அழைத்து வருவதற்கு படாத-பாடு பட வேண்டியதாகியிருந்தது. அன்றைய பொழுது இரவு நல்ல உணவுடனும், பார்த்த இடங்களை பற்றி அசைபோட்டுக்கொண்டும் முடிந்தது.

மறுநாள் பொழுதும் இனிதே புலர்ந்தது. காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டு, உரிமையாளர்களிடம் நன்றிகூறி விடைப்பெற்றுக்கொண்டு கிளம்பினோம். கீழே கபினக்காடு வந்தபோது எங்கள் ஊர்தியில் முதல்நாள் பிரச்சினை மறுபடியும் இருந்ததால், அதனை சரிசெய்துகொண்டு அப்பே (Abbe) நீர்வீழ்ச்சி நோக்கி சென்றோம். இந்த பயணமும் மகிழ்வாக இருந்தது.அப்பே (Abbe) நீர்வீழ்ச்சி ஒரு தனியார் தோட்டத்தினுள் உள்ளது. பெரிய நீர்வீழ்ச்சி கிடையாது; ஆனால் குடகு என்று சொன்னவுடன் அதன் பெயரும் பார்க்கவேண்டிய இடங்களுள் முதன்மையானதொன்றாக வரும். அந்த இடத்தின் அழகை ரசித்து அனுபவித்து கொண்டிருந்தோம்.ஆசைக்கு பல புகைப்படங்களும் எடுத்துக்கொண்டு எங்களின் கடைசி செல்லிடமாகிய திபத்திய மடம் இருக்கும் பயிலக்குப்பே நோக்கி பயணமானோம். எல்லா பயணத்தின் போதும் பாட்டும், பேச்சும், கிண்டலுமாகவே இருந்து கொண்டிருந்தது.

அதுவரை நமது மக்களாகவே கண்டுவந்த எங்களுக்கு, அதிக அளவில் புத்தமதத்து மக்களை கண்டபோது அந்த ஊரின் எல்லையை அடைந்துவிட்டோம் என்று புரிந்தது. அங்குள்ள புத்தர் கோயிலை காணவே மக்கள் அதிகயளவில் வருகின்றனர். பல வயதுடைய துறவிகளை அங்கு காணமுடிந்தது.கோயிலின் உட்புற சுவர்கள் முழுதும் பலவிதமான ஓவியங்களை காண முடிந்தது. என்னால் அவற்றை புரிந்துகொள்ள முடியவில்லை. எங்களால் முடிந்தது அவற்றின் முன்னால் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள மட்டுமே. மாலை வேலையில் அவர்கள் செய்யும் பிரார்த்தனையை காணமுடிந்தது.

இவற்றையெல்லாம் ரசித்து கொண்டிருந்ததில் நேரம் சென்றதே தெரியவில்லை. அப்பொழுதே மாலை ஆறு மணியாகி இருந்தது. நாங்கள் இரவுக்குள் பெங்களூரு வந்து சேர வேண்டியிருந்ததால் அந்த இடத்தைவிட்டு கிளம்ப மனமின்றி கிளம்பினோம். எங்கள் கூடுஉந்துவில் ஏறும் சமயம் அந்த காட்சி கண்ணில்பட்டது. துறவிகள் பலர் மாலைநேரம் விளையாடிக்கொண்டிருந்தனர் – மட்டைப்பந்து. அடடா, அவர்களையும் இந்த விளையாட்டு விடவில்லையே என்ற பேசிக்கொண்டே எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். பலரும் களைத்துபோய்விட்டதால் பயணம் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தது. வழியில் மத்தூர் அருகே இரவு உணவை முடித்துக்கொண்டு நள்ளிரவுவாக்கில் பெங்களூரு வந்தடைந்தோம்.

இந்த பயணம் நல்லவிதமாக அமைந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி. எப்போது போக வாய்ப்பு கிடைக்கும் என ஏக்கத்தோடும், ஆவலோடும் காத்துக்கொண்டிருந்த எனக்கு இந்த பயணம் அளித்த ஆனந்தத்திற்கு அளவே கிடையாது. இந்த பயணத்திற்கு காரணியாக இருந்த நண்பனின் பெற்றோர் வருகைக்குதான் நன்றி சொல்ல வேண்டும். உண்மையில் இந்த இடத்தின் அழகை வார்த்தைகளால் உணர்த்த, உணர இயலாது. சென்று கண்டுகளித்திட வேண்டும்.

அதற்கு பிறகு அடித்தடுத்து குறுகிய காலகட்டத்திற்குள் இரண்டு முறை குடகு செல்ல வாய்ப்பு கிடைத்து. அந்த சமயங்களில் சென்ற பிற இடங்களையும், நடந்த சுவையான சம்பவங்களையும் பின்னர் பதிவு செய்ய எண்ணியுள்ளேன்.

No comments: