Friday, March 27, 2009

குடகு மலைப்பயணம் - 1அ

குடகு- இந்த பெயரை எப்போது கேட்டாலும் என் மனதினுள் ஒருவித ஆனந்தம் குடிகொண்டுவிடும். சென்னையில் இருக்கும்போதே இந்த மலை பிரதேசத்திற்கு சென்று வரவேண்டும் என்ற அவா இருந்தபோதும் அது முடியாமல்போனது. ஆராய்ச்சி படிப்பிற்காக பெங்களூரு சென்ற போதும் முதல் 4 ஆண்டுகளில் அது சாத்தியப்படவில்லை. கனவாகவே குடகு மலைப்பயணம் இருந்து கொண்டிருந்தது. எனது மூத்த நண்பர் தன் மூன்று நண்பர்களுடன் குடகிற்கு செல்லுவதற்கு முன்பு என்னிடம் சொல்லி வெறுப்பேற்றிவிட்டு சென்றார். நாம் எப்போது அங்கே செல்வோம் என்று தவித்துகொண்டிருந்தபோது அருமையான வாய்ப்பு கிடைத்து.

என் நண்பனின் பெற்றோர் பெங்களூர் வருவதாக ஏற்பாடாகி இருந்தது. அவர்களை அழைத்துகொண்டு எங்காவது செல்ல என்னை நண்பன் ஆலோசனை கேட்டபோது, குடகுதான் என் மனதில் முன்னிலையில் இருந்தது. அவனுக்கும் அதில் உடன்பாடு இருந்ததால் அதற்கான ஏற்பாடுகளை கவனித்தோம். எங்கள் நண்பர்களையும் ஒன்றுசேர்த்து சுமார் பதினைந்து நபர்கள் செல்வது என முடிவானது. எல்லோரும் போல விடுதியில் தங்குவதற்கு எனக்கு விருப்பமில்லை. அதற்கு ஒரு காரணமும் உண்டு. ஏற்கனவே சென்று வந்த மூத்த நண்பர் ஹனிவேலி பன்னைத்தோட்டம் (Honeyvalley estate) என்னும் homestay-வில் தங்கியதாகவும், எந்தவிதமான சத்தங்களும், இடையூறுகளுமின்றி அமைதியான, அருமையான இடமாகவும், வித்தியாசமான அனுபவமாகவும் இருந்ததாக கூறியிருந்தார். அத்தகைய அனுபவத்திற்கு ஆசைப்பட்டு நாங்களும் அங்கே தங்க ஏற்பாடுகள் செய்தோம்.

ஆவலாய் எதிர்பார்திருந்த அந்த நாளும் வந்தது. நாங்கள் செல்லும் கூடுஉந்து வந்துசேர, இரவு பதினோறு மணியளவில் குடகு நோக்கி எங்கள் பயணம் ஆரம்பமானது. விராச்பெட் என்ற இடத்தை காலை 5.45 மணியளவில் சென்றடைந்தோம். நாங்கள் சென்றதோ சூன் மாதம், அங்கு மழைக்காலம். அந்த காலைவேலையிலும் மலைப்பிரதேசத்தின் அழகு மனதை கொள்ளை கொண்டது. அது நாங்கள் அடுத்த இரண்டு தினங்கள் கண்டு அனுபவிக்கப்போகும் அழகின் ஒரு வெள்ளோட்டமென உணர்த்தியது. அங்கிருந்து அலைபேசியில் அந்த இடத்தின் உரிமையாளர்களை தொடர்பு கொண்டபோது நாங்கள் வரவேண்டிய இடத்தை கூறினார்கள். நாங்களும் அந்த இடத்தை (கபினக்காடு) சென்றடைய, உரிமையாளர் தனது 2 பொதியுந்துகளுடன் காத்துகொண்டிருந்தார்.

நாங்கள் தங்கும் இடத்திற்கு கபினக்காடிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர்கள் மலைமீது செல்லவேண்டும்.அந்த பாதை அழகாக தார் பூசி போடப்பட்ட பாதை அல்ல; மாறாக பொதியுந்துகள் சென்று வந்ததால் ஏற்பட்ட ஒன்றாகும். ஆகையால் நல்ல மலைபயண அனுபவத்தை அது கொடுக்களாயிற்று. பல இடங்களில் செங்குத்தாகவும், மேடும்-பள்ளமுமாகவும், கல்-மணல் மற்றும் நிறைய வளைவுகள் கொண்டதாகவும் பாதை இருந்தது. இயந்திர உலகை விட்டு ஒரு தனி உலகிற்குள் செல்கின்ற உணர்வை முதல் பயணமே அளித்தது. இறுதியாக நாங்கள் தங்கும் இடத்தை வந்தடைந்தோம்.
(படத்தில் தெரிவது எங்கள் பின்னல் வந்தகொண்டிருந்த இரண்டாவது ஊர்தி)

நாங்கள் ஒரு குழுவாக வந்ததால் எங்களுக்கு ஒரு தனி வீட்டினையே தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். மலையின் மேலே காபித்தோட்டத்தின் நடுவே அந்த இடம் இருந்தது. மழை பெய்துமுடித்து சிறிது இடைவெளி விட்டிருந்ததால், அந்த மண்வாசமும், காபி தோட்டத்துவாசமும் சேர்த்து ஒரு ரம்மியமான சூழலை உருவாக்கியது. இந்த இடத்தை அடைந்தவுடன் நாம் எப்போது இங்கிருந்து செல்வோம் என்று பயத்துடன் நண்பனின் தாயார் கேட்டதாக பின்னர் அறிந்தேன்.




முதல் வேலையாக எங்களுக்கு வந்த அந்த காபியை மிகுந்த எதிர்பார்போடு அனைவருக்கும் பறிமாறி குடித்தோம். அந்த சுவையுடன் ஒரு காப்பியை அப்போதுதான் முதன்முதலாக குடித்தேன். மிகவும் கசப்பான காபி. கசப்பு என்பதைவிட ஒரு விதமான சுவையில் அது இருந்தது. நகரங்களில் கிடைப்பது போன்று பதப்படுத்தியதல்ல; மாறாக அவர்கள் தோட்டத்திலிருந்தே விளைவித்து அளித்தது. ஆகையாலேயே அந்த வித்தியாசமான சுவை கொண்டதாக இருந்தது. முதலில் வித்தியாசமாக இருந்தாலும் காபி பிரியர்களான நாங்கள் சிலர் அதனை அதிக ஆர்வத்துடன் பின்னர் பருக ஆரம்பித்துவிட்டோம். எல்லோரும் தயாராகி காலை உணவு உண்ண சென்றபோதுதான் கலைகட்ட ஆரம்பித்தது எங்கள் மகிழ்ச்சி. குடகு முறை உணவு வகைகளுடன் மலை தேன், பழங்கள் என்று கொண்டுவந்து வைக்க, நண்பர்கள் ஒரு பிடிபிடித்தனர். நல்ல சுவையான சிற்றுண்டிக்கு பின்னர் எங்கள் பயணதிட்டத்தின்படி பாகமண்டலாவிற்கும், தலைகாவேரிக்கும் பயணமானோம்.

7 comments:

பதி said...

வாங்க மணி !!!!!

ஓ... பயணத்துல 1ல அ'வா?? அப்போ நான் 2 அ'ல வந்து சேர்ந்துக்குறேன் !!!!

மலைத்தேன் - மலை தேன்னு மாத்தியிடுங்க...

பழைய புகைப் படங்களைப் பார்த்து முடிஞ்சா சாப்பிட்ட எல்லா உணவுவகைகலையும் தொகுக்கலாம் !!!!!!! :)

மணிநரேன் said...

/மலைத்தேன் - மலை தேன்னு மாத்தியிடுங்க... /
மாற்றிவிட்டேன்.

கையேடு said...

//இந்த இடத்தை அடைந்தவுடன் நாம் எப்போது இங்கிருந்து செல்வோம் என்று பயத்துடன் நண்பனின் தாயார் கேட்டதாக பின்னர் அறிந்தேன்.//
.... :))

முனைவர் மு.இளங்கோவன் said...

வாழ்த்துகள்
தொடர்ந்து எழுதுங்கள்
பாராட்டுகள்
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
http://muelangovan.blogspot.com/

நிகழ்காலத்தில்... said...

நன்றாக உள்ளது, தொடர்ந்து விரிவாக எழுதுங்கள்

வாழ்த்துக்கள்..

விழிகள் - நந்தினி said...

அருமையான பதிவு மணி.. அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.. :)

மணிநரேன் said...

நன்றி முனைவர் மு.இளங்கோவன், அறிவே தெய்வம், நந்தினி.