Sunday, March 22, 2009

அனுபவம்

வெகு நாட்களுக்கு பிறகு ஒரு தனிமை வாய்தது. ஒவ்வொரு வாரமும் நண்பர்கள் யாரவது உடன் வர வெளியில் செல்வது வழக்கம். இந்த வாரம் எல்லோரும் பாரிஸ் மாநகர் சென்று விட்டதால் நான் தனியே செல்ல வேண்டிய சூழல். தனியாக சென்றே நீண்ட நாட்களாகிவிட்டது. நண்பர்களுடன் பொழுதினை கழித்திடவே பிடிக்கும். ஆனால் எப்போதும் நமது எண்ண அலைகளுடன் ஒத்து வரகூடியவர்கள் அமைவது கடினம். அவ்வாறான நேரங்களில் கொஞ்சம் ஒதுங்கியே இருப்பது நல்லது என நினைப்பவன். இந்த இடத்திற்கு வந்த பிறகு சிறிது தனிமை எனக்கு தேவைபட்டது. அதோடு, சில நாட்களாக எனக்குள் ஏனோ ஒரு பயமும் குடிகொண்டது. நம்மால் மற்றவர் துணையின்றி எங்கும் செல்லவே முடியாதோ என்ற எண்ணம்தான். ஏனெனில், ஒவ்வொரு வாரமும் செல்வதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் மற்றவர்களிடம் செல்லும் நேரத்தையும் இடத்தையும் நானே சென்று ஆலோசித்து முடிவு செய்து வந்தேன். இதனை எனது முன்னிலைத்தன்மை என்று சொல்வதா இல்லை அனைவரையும் சேர்த்து அழைத்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் என்று சொல்வதா இல்லை தனியே செல்ல பயம் என்று சொல்வதா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும், இந்த நாள் ஒரு நல்ல வாய்ப்பாகவே அமைந்தது.

இந்த ஊர் வந்த பிறகு ஒவ்வொரு வாரமும் கடைத்தெரு சென்று வருவது தவிர வேறு எந்த இடத்திற்கும் செல்லவில்லை. ஒரு முறை இங்குள்ள கெர் ஏரி பார்க்க நண்பர்கள் சென்ற போதும் கடைசி நிமிடத்தில் என்னால் செல்ல முடியாமல் போயிய்று. ஆகையால் இந்த வாரம் அங்கு செல்ல தீர்மானித்திருந்தேன்.

எப்போதும் போல மதிய உணவை முடித்துகொண்டு கிளம்பினேன். இரண்டு பேருந்துகள் மாறி நான் செல்ல விரும்பிய இடத்திற்கும் சென்றடைந்தேன். ஏரிக்கு செல்லுமுன் ஒரு ஓடையை காண நேரிட்டது. அதன் கரையோரம் ஒரு சில மக்களை காண முடிந்தது. முதியவர்களும் இளையவரும் தங்கள் மதிய பொழுதை கரையோரம் கழித்து கொண்டிருந்தனர். சில அழகான வண்ணங்களில் ஒருசில வாத்துக்களை கண்டபோது எனது புகைப்படக்கருவிக்கு வேலை குடுக்க நினைத்தேன். மிக அழகாக இருந்த அந்த பறவைகள் எனது கண்களை கொள்ளை கொண்டன. எப்போதும் தானியங்கி முறையிலேயே படம் எடுத்து வந்ததால், இம்முறை கருவியின் பிற வசதிகளை உபயோகப்படுத்தி எடுக்க முயற்சித்தேன். இந்த முயற்சியில் சிறு வெற்றியும் கிட்டிய உணர்வு இறுதியில் ஏற்பட்டது.



அதன் வழியாகவே ஏரியை அடைந்தபோது அங்கும் இங்குமாய் மக்களை காணமுடிந்தது. அது அவ்வளவு பெரிய ஏரியாக தெரியவில்லை என்றபோதிலும் எனக்கு அழகாக தெரிந்தது. சிறு சிறு படகுகளில் மக்கள் இருகரைகளுக்கும் இடையே சென்று வந்துகொண்டிருந்தனர். ஒருசிலர் இதை ஒரு போட்டி போன்று விளையாடிகொண்டிருந்தனர். இவர்களை வழிநடத்துவதுபோல ஒரு இயந்தரப்படகில் ஒருவர் அவர்கள் பின்னே செல்வதும் வருவதுமாய் இருந்தார். அதில் என்னை கவர்ந்தது என்னவென்றால் அதில் இரண்டு குழந்தைகளும் அமர்ந்துகொண்டு அவர் ஒலிமாட்றியில் ஏதோ சொல்லும்போதெல்லாம், இவர்களும் ஏதோ சொல்லிகொண்டே வந்தனர். அந்த குழந்தைகளின் செயலே அவர்களை உற்றுநோக்க வைத்தது. நேரம் செல்ல செல்ல மக்கள் அதிக அளவில் வர தொடங்கினர். இளைய பெற்றோர் தம் குழந்தைகளுடனும், முதியோர் தத்தம் துணையுடனும், வேறு சிலர் தம் வளர்ப்பு நாய்களுடனும் தங்கள் நேரத்தை செலவழிக்களாயினர். நானும் கரையோரம் நடக்க ஆரம்பித்தேன். பல கோணங்களில் புகைப்படமும் எடுத்துக்கொண்டிருந்தேன்.



அந்த வேலையில் மனதினுள் ஒருவித மகிழ்ச்சி நிலைகொள்ள ஆரம்பித்தது. இவர்களை எல்லாம் கண்டபோது நாம் எவ்வளவு விஷயங்களை கண்டுகொள்ளாமல் செல்கிறோம் என்று புரிந்தது. பிறகு பார்த்துக் கொள்ளளாம் என்று இவ்வாறான சின்ன சின்ன விஷயங்களையெல்லாம் ஒத்திப்போட்டுக்கொண்டு அந்த மகிழ்ச்சியை இழந்து வருவதை என்னால் உணர முடிந்தது. நின்று ரசிக்ககூட முடியாமல் எதையோ நோக்கி ஓடிகொண்டிருக்கின்ற ஒரு குற்றவுணர்வு எனக்குள் எப்போதும் உண்டு. இந்த ஏரிகரை அளித்த மகிழ்ச்சி நான் செய்து வந்த தவறை சுட்டிக்காட்டியது. எனக்கு பிடித்தவாறு புகைப்படமும் எடுக்க முடிந்தது. ஒருசிலரோடு செல்லும்போது மட்டுமே நினைத்ததை படம் பிடிக்க முடியும்; பெரும்பாலான நேரங்களில் மற்றவர் ஏதாவது சொல்ல எனக்கு பிடித்த பல விஷயங்களை பதிவு செய்யாமல் வந்துவிட நேர்ந்துவிடும். இங்கே எனக்கு பிடித்தவற்றை பதிவு செய்து வந்தேன். இதில் ஒரு சங்கடம் என்னவென்றால் நாம் இருப்பது போன்று படம் எடுப்பது கடினம்; இதற்கும் ஒரு வழிகிடைத்தது போல எனது ஆய்வறை நண்பன் தனது நண்பர்களோடு வர, நான் அங்கே தனியே வந்துள்ளதை ஆச்சிரியத்துடன் பார்த்து என்னையும் புகைப்படம் எடுத்து கொடுத்தான். மேலும் சிறிது நேரம் அங்கே இருந்து அந்த பொழுதினை அனுபவித்துவிட்டு ஆனந்தத்துடன் கிளம்பினேன். எனக்குள் எதையோ மீட்டெடுத்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. பல நாட்களாக தொலைத்த ஒன்றை திரும்ப பெற்றது போன்று உணர்ந்தேன். ஒரே நோக்கிலோ இல்லை சலிப்பூட்டுகின்ற விதத்திலோ சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையை மாற்றி மனதினுள் மகிழ்ச்சியை உணர இந்த மதியவேலை வழிசெய்தது. அதோடுகூட கணிணியும், இணையமும் இல்லையெனில் வாழ்வையே தொலைத்தது போன்ற உணர்வும் பல நாட்களாய் இருக்கின்றது. காலை முதல் இரவு வரை கணிணியிலேயே பொழுது போக்கி கொண்டிருக்கிறேன். இத்தனைக்கும் இதை தவிர்பதற்காகவே மென்பொருள்துறை பக்கம் செல்லாமல் இருந்தேன். இப்போதோ!!!! அதிலிருந்து விடுபடவும் இந்த மதியவேலை பயணம் உதவியது.வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது.

1 comment:

கையேடு said...

அனைத்து புகைப்படங்களும் அருமை மணி. அனுபவமும் இனிமையாக உள்ளது.