Wednesday, September 8, 2010

காத்திருந்த பயணம் - ஆ

கூந்தலூர் - எங்களின் பூர்வீகமான ஊர் என்று அப்பாவும், தாத்தாவும் சொல்லி கேள்விபட்ட இடம். எனது தாத்தாவரை அங்குதான் பிறந்துள்ளார்கள். பின்னர் தாத்தாவின் அப்பாவின் கர்ணம் (கணக்காளர்) வேலையின் பொருட்டு மயிலாடுதுறை பகுதியிலுள்ள திருக்களாச்சேரி என்னும் கிராமத்தில் குடிபெயர்ந்துவிட்டனர். என் அப்பா பிறந்து வளர்ந்த ஊரெல்லாம் அதுவே. ஆகையால் கூந்தலூர் செல்வது எனக்கு அதுவே முதன்முறையாகும்.

கேள்விபட்ட பூர்வீக ஊரை பார்க்கப்போவதில் ஒருவித ஆர்வம் மேலோங்கியே இருந்தது. குடந்தை மற்றும் சென்னையிலுள்ள உறவுகள் சூழ செல்வதில் மேலும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு வண்டி பற்றாத நிலை. மற்றொரு மகிழுந்துவையும் ஏற்பாடு செய்து கொண்டு கூந்தலூர் நோக்கி புறப்பட்டோம். நாங்கள் செல்வதற்கு முன்னரே அந்த கோயில் பூசாரியிடம் எல்லா ஏற்பாடுகளையும் செய்ய சொல்லியிருந்தோம். சிறிய கிராமங்களிலுள்ள ஆலயத்தில் நினைத்த நேரத்தில் சென்று பூசாரியை பார்த்து அனைத்து வேலைகளையும் செய்வது என்பது மிகுந்த கடனமான காரியமாகும். இரண்டு-மூன்று கோயில்களுக்கு சேர்த்து ஒரு பூசாரியோ/குருக்களோதான் இருப்பார்கள். ஆகையால் முன்னேற்பாட்டுடன் சென்றோம்.




காவிரியின் ஒரு கிளைநதியின் கரையில் அந்த கோயில் அமைந்திருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர் குடமுழுக்கு நடைப்பெற்று ஆலயம் சிறப்பாக இருந்தது. பூசாரி சந்நிதியினுள்ளே அம்மனின் அபிஷேக ஏற்பாடுகளை கவனிக்க, எங்கள் மக்கள் சந்நிதியின் வெளியே பூசைக்கான ஆயத்த வேலைகளில் ஈடுபடலானர். முந்தைய காலங்களாக இருந்திருந்தால் காவிரியில் நீர் எடுத்துவந்து சுத்தம் செய்து பூசைக்கான வேலைகளை செய்திருப்பார்களாம். எங்கள் பாட்டி இருந்த காலத்தில் அவ்வாறுதான் எல்லாம் நடந்ததாக எனது அண்ணன் கூறினார். இப்போதோ பாட்டியும் இல்லை, காவிரியில் அவ்வளவு தண்ணீரும் இல்லை. அவர்கள் இருக்கும்போது வந்திருந்தால் மகிழ்ச்சி பலமடங்காக இருந்திருக்கும். கிடைத்த இந்த சந்தர்ப்பத்திற்காக மகிழ்ச்சி அடைந்துக்கொண்டோம். கோயிலிலேயே அடிபம்பு அமைத்துவிட்டதால் தண்ணீருக்கு கவலையில்லை.


அந்த இடத்தை சுத்தம் செய்து அம்மா, பெரியத்தை போன்றோர் பூசைக்கான ஆயத்தங்களை ஆரம்பிக்க சின்னத்தை போன்றோர் அம்மன் பாடல்கள் பாட ஆரம்பித்தனர். பூசைகளில் முக்கியமாக படைப்பது மாவிளக்கு மாவும், காப்பரிசியும், பழங்களும்தான். மாவிளக்கு மாவு அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. ஒருகாலத்தில் உரலில் இடித்து மாவு பிசைவார்கள். இப்போதெல்லாம் உரலும் இல்லை; அதற்கான தெம்பும் இல்லை. எல்லாம் அறிவியல் இயந்திரமயம்தான். அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைப்பெற்றது. அம்மனின் அலங்காரம் முடியவும், பூசைக்கான படையல்கள் தயார் செய்துமுடிக்கவும் சரியாக இருந்தது. அனைவரும் ஒன்றுகூடி அம்மனுக்கு நெய்வேதியம் செய்து தீபாராதனை காட்சி காணப்பெற்றோம். பலஆண்டுகால காத்திருப்பு நிறைவேறியதில் பெரும் மகிழ்ச்சி வீட்டினர் அனைவருக்கும். பூசைகள் முடிந்த பின்னர் எடுத்து சென்றிருந்த உணவினை அங்கேயே முடித்துக்கொண்டோம். இந்த கட்டுசாப்பிட்டிற்கான சுவை வேறு எதிலும் கிடைப்பதேயில்லை. கண், மனம் மற்றும் வயிறு நிறைந்து புறப்பட தயாரானோம்.

வண்டியில் ஏறியதும் யாரோ ஒருவரின் அழுகை கேட்டது. கொஞ்சம் அதிர்ச்சியில் என்னவென்று பார்த்தபோது வண்டியில் ஏறும்போது கால்பிசகியதால் வலியில் என் அம்மாவின் கண்களில் கண்ணீர். எங்களுக்கு அதுவும் ஒரு ஆச்சிரியம்தான். இதுவரை தனக்கு எந்தவொரு வலிவந்தாலும் அழுது பார்த்ததேயில்லை. பெரிதாக அதற்கெல்லாம் அலட்டிக்கொள்ளாதவர். சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திவிட்டு கிளம்பினோம்.


அந்த ஊரிலுள்ள சிவாலயத்திற்கு சென்றோம். மழை தூறிக்கொண்டே வந்ததால் அங்கும் அவர்கள் கால் தடுமாறி வழுக்கி விழும் சம்பவமும் நடந்தது. நல்லவேளையாக பலத்த பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. அந்த ஆலயத்திலும் தரிசனத்தை முடித்துக்கொண்டு குடந்தை நோக்கி கிளம்பினோம். கிளம்பிய நேரம் பெருமழை பிடித்துக்கொண்டு விடாது பெய்து தீர்த்துவிட்டது.

5 comments:

துளசி கோபால் said...

அட! இப்பக் கோவில்களை நல்லாக் கட்டி இருக்காங்க போல!

முந்தி ரொம்ப சுமாரான கட்டிடங்கள்தான்.

அரசிலாறில் இருந்து பிரியும் கிளைநதிதான் கூந்தலூருக்கு வருது. அந்த ஆற்றில் நல்லா ஆட்டம் போட்டுருக்கேன்.

முன்பு இந்தக் கோவிலின் பூஜைப்பொறுப்பில் இருந்த சுந்தரேச குருக்கள்தான் என் தோழியின் தந்தை.

மாவிலக்கு = மாவிளக்கு என்று திருத்துங்கள்.

மணிநரேன் said...

வருகைக்கும், தவறை சுட்டிக்காட்டியதற்கும் நன்றிங்க
துளசி கோபால். திருத்திவிட்டேன்.

கையேடு said...

நல்லா வந்திருக்கு மணி..

கோயில் முன்னாடி இன்னும் கொஞ்சம் மரம் வச்சிருக்கலாம் நல்லா இருந்திருக்கும்.

அப்புறம் போஸ்டன் பயணக் கட்டுரை எப்ப வரும்.. :)

மணிநரேன் said...

இரஞ்சித்...
கோவில் முன்னாடி பத்தடியில் சாலை வந்துடுது.அதோட கோவிலும் சாலை வளைவுல இருக்கு.மரம் வைப்பதற்கான இடம் ரொம்ப குறைவு.

போஸ்டன் கட்டுரை எழுதுற அளவுக்கு இல்லை.

பழமைபேசி said...

நானும் கூட வந்த மாதிரியே இருக்குங்க!