Monday, November 9, 2009

ஐரோப்பாவில் கோடை விடுமுறை - ஈ

பெல்சியம் நாட்டிலுள்ள தோழியை காண இதற்கு அடுத்த வாரயிறுதியில் பயணித்தேன். நான் சென்ற அடுத்த நாள் பெல்சியம் நாட்டின் தலைநகரான புரூசல்ஸ் சுற்றிப்பார்க்க சென்றோம். தோழியின் தாயாரும் வந்திருந்ததால் மூவரும் சென்றோம். இங்கும் சுற்றுலா துறையின் ஹாப் ஆன் – ஹாப் ஆப் பேருந்தில் ஒரு நகர சுற்றுலாவினை முதலில் முடித்தோம். இந்த சுற்றின் கடைசி நிறுத்தமான ராயல் அரச மாளிகை எங்களின் முதல் நிறுத்தமானது. மாளிகையின் உள்ளே சென்று பார்த்தோம். நன்றாக பராமரிக்கின்றனர். உள்ளே புகைப்படங்கள் எடுக்கமுடியாது; ஆகையால் அவற்றை ரசித்து மனதினில் உள்வாங்கிக்கொண்டு வருவதுதான் ஒரே வழி. பல விடயங்கள் பிரம்மாண்டத்தை அளித்தது. அங்கே தொங்கவிடப்பட்டிருந்த சாண்டிலியர் விளக்குகள்கூட பிரம்மாண்டததை அளித்தது என்பது உண்மை. உள்ளேயே அறிவியல் அருங்காட்சியகத்தையும் அமைத்துள்ளனர். குழந்தைகள் செய்து பார்க்கவென தனியாக சில விடயங்களையும் வைத்துள்ளனர். நன்றாக இருந்தது.

அங்கிருந்து கிளம்பி கிராண்ட் பிலேஸ் எனும் இடத்திற்கு சென்றோம். நடுவினில் பெரிய வெற்றிடம் விடப்பட்டு அதன் நான்கு பக்கங்களிலும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கட்டிடங்களான அவை பார்ப்பதற்கு புதியது போல பராமரிக்கப்பட்டு வரப்படுவது அதன் சிறப்பு. அவ்வளவு பழமையானவை என்பதை தோழியின் தாயார் முதலில் நம்பவில்லை. எனினும் அதற்கு சான்றுகளாக அங்கிருந்த ஒரு கட்டிடத்தில் கட்டப்பட்ட ஆண்டு பொறிக்கப்பட்டிருந்தது. அந்த இடத்திலுள்ள ஒரு கட்டிடம்தான் நகர மன்றமாக செயல்பட்டு வருகின்றது.அந்த நகரின் மற்றொரு பார்க்க வேண்டிய இடமாக கூறப்பட்டிருந்த மேனக்கன் பிஸ் என்னும் சிறுவனின் சிலையை கண்டுவிட்டு அங்கிருந்து பார்க் சின்குவாண்டினயர் என்னும் பூங்காவிற்கு சென்றோம். அங்கே கட்டப்பட்டிருந்த நினைவு வளைவு முதல் சுற்றில் பார்த்தபோதே மனதில் இடம் பிடித்துக்கொண்டது. ஆகையால் அங்கே சில நேரம் செலவிட முடிவு செய்தோம். இளைப்பாற நல்லதொரு இடமாக அது அமைந்தது.
அடோமியம் என்னும் இடத்தினை பேருந்திலிருந்தே கண்டோம். அங்கே இறங்கி பார்த்து நேரம் செலவழிக்கவில்லை. அதற்கு பதில் பூங்காவில் சில மணி நேரங்கள் இளைப்பாறினோம். அங்கிருந்து கிளம்பிய பேருந்துதான் அந்த நாளின் கடைசி சுற்றுப்பேருந்தாக இருந்தபடியால் வேறெங்கும் செல்லாமல் அந்த நாளினை முடித்துக்கொண்டு வீட்டினை அடைந்தோம். மறுநாள் தங்கியிருந்த லியுவன் நகரினை சுற்றிக்காண்பித்தார். நகர மன்றங்கள் பல ஊர்களிலும் ஒரே மாதிரியான கட்டிட அமைப்புகளாய் இருந்ததை அங்கே காணமுடிந்தது.மறுபடியும் சூளிச் சென்று ஒரு வார காலம் தங்கிவிட்டு அந்த வார இறுதியில் எனது இல்லம் வந்தடைந்தேன். பலவகையான இடங்கள், பல்வேறுப்பட்ட மனிதர்கள் என்று நல்ல அனுபவமாக இருந்தது. சில இடங்களை பார்த்தபோதே ஒருவித அமைதியும், மகிழ்ச்சியும் மனதினுள் குடிகொண்டது. அதனோடு நம்மால் ஏன் நமது இயற்கை செல்வங்களை பாதுகாக்க முடியவில்லை, எதனால் தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடிக்க முடியவில்லை, சக மனிதர்களை அவர்கள் செய்யும் வேலையை பார்க்காமல் மனிதர்களாய் மட்டும் பார்க்கும் மனநிலை வரவில்லை போன்ற பல கேள்விகள் எழுந்ததை மறுக்கமுடியவில்லை.

5 comments:

கையேடு said...

தொடரை வெற்றிகரமா முடிச்சிட்ட போல.. :)

பதி said...

மணி,

நல்லா இருக்கு... பெல்ஜியத்துல வாட்டர்லூ போகலையா?

அருமையா இருந்தது....

மணிநரேன் said...

ஆமாம் இரஞ்சித்.

வாட்டர்லூ போகவில்லை பதி.

விக்னேஷ்வரி said...

அழகான புகைப்படங்களுடன் நல்ல தகவல்கள். நீங்க நல்லா சுத்திப் பாருங்க. நாங்க உங்க ப்ளாக் மூலமா பார்த்து தெரிஞ்சுக்குறோம். :)

மணிநரேன் said...

நன்றி விக்னேஷ்வரி.