Thursday, May 28, 2009

குடகு மலைப்பயணம் - 2அ

எங்களின் ஆராய்ச்சிகூடத்து நாட்கள் எண்ணப்பட்டு கொண்டிருந்தன. ஒருசில மாதங்களில் நாங்கள் ஒவ்வொருவராக அங்கிருந்து வெளியேரும் தருணம் வந்துவிடும் என தெரியும். அதற்குள் எங்காவது விசையுந்து பயணம் சென்று வரவேண்டும் என எங்களுக்குள் ஒரு அவா. அதற்கு பல மாதங்களுக்கு முன்னர் சென்றுவந்த பயண அனுபவமும் அது அளித்த மகிழ்ச்சியும் மனதில் பசுமையாக இருந்தன. இம்முறையும் மூன்று நாட்கள் விடுமுறை வந்ததால் பயணம் சென்றுவர முடிவு செய்தோம். எங்கு செல்லலாம் என யோசிக்கும் போது குடகு செல்லலாம் என நண்பர்கள் கூற, எனது மகிழ்ச்சிக்கு அளவா கேட்க வேண்டும். எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இம்முறை தங்குவதற்கு எந்த முன்பதிவும் செய்யவில்லை. அங்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று நண்பர்கள் கூறிவிட்டனர்.

திட்டமிட்டபடி ஐந்துபேர் மூன்று விசையுந்துவில் காலை ஆறு மணிக்கு முன்னர் பெங்களூரைவிட்டு புறப்பட்டோம். காலையில் விசையுந்துவில் செல்வதே ஒரு தனிசுகம்தான். அதுவும் வாகனம் ஓட்டிச்சென்றால் மிகவும் சுகமாக இருக்கும். எனக்கு பின்னிருக்கைதான் கொடுக்கப்பட்டது. ஓட்டுனரின் மகிழ்ச்சியை இழந்த நிலையில் வேறுவழியின்றி பின்னால் அமர்ந்து இயற்கை அழகை ரசித்துக்கொண்டு செல்ல ஆரம்பித்தேன். இதற்கு முன்னர் சென்றது இரவு நேரமாதலால் மலைப்பிரதேச பயணத்தை அவ்வளவாக அனுபவிக்க முடியவில்லை. இம்முறை பகல்நேர பயணம். மலையில் செல்ல செல்ல கண்முன் விரிந்த காட்சிகள் கண்ணிற்கு விருந்தாக அமைந்தன என்று சொன்னால் மிகையாகாது. சில இடங்களில் நிறுத்தி பசுமை படர்ந்த பள்ளத்தாக்கை ரசித்தோம். புகைப்படங்களும் எடுத்துக்கொண்டிருந்தோம்.

எங்களின் முதல் செல்லிடம் அப்பே நீர்வீழ்ச்சி. நாங்கள் முதன்முறை சென்றபோது பாலத்திலிருந்தே பார்த்து வந்தோம். இம்முறையும் அருவிக்கு அருகில் செல்லும் வழி இரும்பு கதவினால் மூடப்பட்டிருந்தது. எனினும், எங்களுக்கு முன்பே பலர் வேறுவிதமாக கீழிறங்கி அருவியில் கால் நனைத்தவாறு இருந்ததால், நாங்களும் கதவேறி குதித்துவிட்டோம்.




இதற்கெல்லாம் பயப்படும் நானும், இம்முறை ஏறிகுதித்து அருவியின் அருகில் சென்றேன். அதன் சுகமே தனிதான். என் நண்பன் புகைப்படங்கள் எடுப்பதில் மும்முரமாகிவிட்டான். அருகில் சென்றதால் பல நல்ல படங்கள் எங்களுக்கு கிடைத்தது. அருவியில் தண்ணீர் அதிகமாக இல்லை. சில மணி நேரம் அங்கே இருந்துவிட்டு, பாகமண்டலா நோக்கி பயணமானோம்.

மாலைநேர ஆதவன் பூமியின் மறுபகுதிக்கு பயணமாகி கொண்டிருந்தான். அவனது செங்கதிர்கள் காணும் இடமெங்கும் ஒருவித மயக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தன. அந்த அழகினை நண்பனின் புகைப்படக்கருவி உள்வாங்கிக்கொண்டது.



காட்சிகளை ரசித்துக்கொண்டே பாகமண்டலா சென்றடைந்தோம். எங்களின் நல்லநேரம், கர்நாடக அரசு நடத்தும் உணவகம் கூடிய தங்கும் விடுதியில் அறை காலியாக இருந்ததால், அங்கேயே தங்கி ஓய்வெடுத்தோம்; எங்களின் திட்டப்படி மறுநாள் காலை ஆதவன் உதயமாகும் நாழிகையில் தலைக்காவேரியில் இருப்பதே. அதன்படியே அதிகாலை மலையழகை காண தலைக்காவேரியுடன் நாங்கள் ஐக்கியமானோம்.

3 comments:

பதி said...

:)

நட்புடன் ஜமால் said...

பயண கட்டுறையா

படிக்க சுவாரஸ்யமாத்தான் இருக்கு

மணிநரேன் said...

நன்றி பதி மற்றும் ஜமால்.