Friday, July 17, 2009

இமயம் - கங்கோத்திரி - கேதார்தல் பயணம் - இ

(பகுதி அ)
(பகுதி ஆ)

மறுநாள் மலைமீது விடியல் கண்டோம். நான் நன்றாக உறங்கியிருந்தேன். என் நண்பரிடம் விசாரித்தபோது அவர்கள் படுத்திருந்த இடத்தில் தண்ணீர் கசிந்துகொண்டே இருந்ததால் சரியான உறக்கம் இல்லையென்றும் நானெல்லாம் நன்றாக குறட்டைவிட்டு உறங்கியதாகவும் புலம்பினார். என்ன செய்வது??எதுவும் நான் மனமுவந்து செய்த தவறல்ல.;)


நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து பார்த்தால் இரண்டு மலை சிகரங்கள் பனிபடர்ந்து காட்சியளித்தன. ஒன்றினை கண்டபோது நந்தியை போன்ற உருவம் கொண்டதாக கண்ணில்பட்டது. இரண்டாம் சிகரத்தை தாண்டினால்தான் கேதார்தல் ஏரி வரும் என்றார் நண்பர். சிறிது நேரம் காலைபொழுதினை ரசித்துவிட்டு அங்கிருந்து கிளம்புவது என்று முடிவு செய்தோம். நாங்கள் தங்கிய இடத்திலேயே எங்கள் உடைமைகளை வைத்துவிட்டு பாரமின்றி செல்வது என்று பேசிக்கொண்டோம். முதல் நாள் கண்ட பெரிய நிலச்சரிவு ஒருசிலரை கலங்க வைத்துவிட்டது என்றே சொல்லலாம். மேலும் இருவருக்கு முதல்நாள் சிறிது உடல்நிலை ஒத்துழைப்பு அளிக்காததால், மூவர் தொடர்ந்து வரவில்லை என்றும் வேண்டுமெனில் மற்றவர்கள் சென்று வரவும் என்றும் கூறினர். எங்கள் நால்வரில் என்னுள்ளும் சிறிது பயம் இருந்தது உண்மையே. ஆனாலும் ஆசை. இருவர் சென்றுவருவோம் என்று கூற நாங்கள் நான்கு பேர் பயணத்தை தொடர்ந்தோம்.

நாங்கள் எதிர்கொண்ட நிலச்சரிவு சுமார் இருநூறு அடியாவது இருந்திருக்கும். ஓரளவு அனுபவமுள்ள நண்பர் முதலில் வழிகாட்டி செல்ல, அவரை தொடர்ந்து நாங்கள் செல்வது என்று எண்ணினோம். முதலாமவர் சிறிது சென்றதை பார்த்தபோதே என்னுள் பயம் அதிகமாகியது. ஏனெனில், இரண்டு அடி முன்னே கால்களை வைப்பதற்குள், கீழ்நோக்கி சுமார் நான்கு அடிகள் சரிந்து போய்கொண்டிருந்தார். முழுவதும் கீழே போய் பின்னர் மேலே ஏறி வருவது என்பது அந்த இடத்தில் இயலாத காரியம். மிகவும் தடுமாறி தடுமாறி முன்னே செல்ல முயன்று கொண்டிருந்தார். அந்த இடத்தை தாண்டி நோக்கினாலும் நிலச்சரிவுகள் தொடர்ச்சியாக கண்ணில் தென்பட்டன. அந்த நொடியில் மனதினுள் பயம் சூழ்ந்துக்கொண்டது. கண்டிப்பாக தாண்டி செல்ல வேண்டுமா என்று நானும் கேட்டுவிட்டேன். அவர்கள் சிறிது முயன்று பார்க்கலாமே என்று கூற இறுதியில் இரண்டு பேர்மட்டுமே செல்வது என்ற நிலையானது. அதுவும் எளிதாக இல்லை. அந்த சூழலில் அவர்களும் எங்களுக்காக மேற்கொண்டு செல்லும் எண்ணத்தை கைவிட்டனர். அவர்களுக்கு சிறிது வருத்தம்தான். ஒருவிதத்தில் எல்லோருக்கும்; ஏனெனில், எங்களின் குறிக்கோள் கேதார்தல். அதனை அடைய அதே வழியில் மேலும் சிறிது தூரம் செல்லவேண்டும். அதனை அடைய முடியாது, ஒருவகையில் பார்த்தால் எங்களின் பயணம் தோல்வியில் முடிகின்றது. மறுபடியும் வரவேண்டும் என்று இருவரும் கூறிக்கொண்டிருந்தனர். அந்த நொடியில் மறுபடியும் வருவது பற்றி எனக்குள் மிகுந்த யோசனை (சந்தேகம் என்றே சொல்லலாம்) இருந்தது. அந்த இடத்தில் மட்டும் நதிக்கரையில் கைநினைக்க சிறிது வழி இருந்தது. ஆகையால் சிறிது நேரம் நதிக்கரையில் செலவிட்டோம். நதியின் மறுபக்கம் பார்த்தால் செங்குத்தான மலைச்சரிவுதான் காட்சி தந்தது. அந்த திசையில் எவ்வாறு மேலே ஏறுவது என்றே வழி புலப்படவில்லை. வழிசொல்லாத மலைகளாக இருந்தன.



நேரம் சென்றுகொண்டே இருந்தபடியால் திரும்பிவருவதற்கு தயாரானோம். வந்த வழியிலேயேதான் செல்லவேண்டும்; வேறு வழியில்லை. முதல்நாள் கடந்துவந்த பாதையை நினைத்தபோது மனதினுள் சிறிது பயம் ஏற்பட்டது என்பது உண்மை. எனினும், முதல்நாள் எப்படி வந்தோமோ அப்படியே சென்றுவிடமுடியும் என்று தோன்றியது. இருந்த இடத்திலிருந்து காட்சியளித்த மலை சிகரங்களை இறுதியாக மனதினுள் உருவமாக பதித்துக்கொண்டும், புகைப்படங்களாய் கைப்பற்றிக்கொண்டும் வந்தவழியிலேயே நடையினை தொடர்ந்தோம். அந்த இடம் சிறிது நேரத்தில் மேகமூட்டமாகியது. நல்ல நேரமாக மழை வரவில்லை.


வந்த வழியிலேயே நடந்ததால் அன்றைய நடையில் எதிர்பார்ப்பு ஏதும் இல்லை. கால்கள் சிறிது ஓய்வெடுத்துக்கொண்டு நடந்து கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் பனி படர்ந்த சரிவினை அடைந்தோம். முதல்நாள் அளவிற்கு சிரமம் இல்லை; எனினும் சிறிது நேரம் எடுத்தது என்னவோ உண்மைதான். சில இடங்கள் தொடக்கபுள்ளிக்கு அருகில் வந்துவிட்டது போன்று தோன்றும்; ஆனால் அதிலிருந்து மேலும் அதிக தூரம் நடக்க வேண்டியதாயிருக்கும். எல்லாம் ஒரே மாதிரி இருந்ததால் ஒரே நாளில் பாதையில் பார்த்த பல விடயங்கள் மறந்துபோயிருந்தன. முதல் நாள் தொடக்கத்தில் தடுமாறிய சிறுகுன்று வந்தபோது அதற்குமேல் எவ்வாறு செல்வது என்று புரியவில்லை. பலருக்கும் எப்படி வந்தோம் என்று நினைவில்லில்லை. சிறிது யூகத்தின் அடிப்படையில் வழியினை தொடர்ந்து மனிதநடமாட்டம் உள்ள இடத்தினை வந்தடைந்தோம்.


எங்கள் அறையில் சிறிது இளைப்பாறிவிட்டு, கங்கோத்திரி ஆலயம் சென்று வழிபட்டோம். இரண்டு நாட்களாக சரியாக சாப்பிடாததால் இரவு உணவினை சீக்கிரமே முடித்துக்கொண்டோம். மறுநாள் ரிசிகேசம் வந்துசேர பொதியுந்துவை ஏற்பாடு செய்துவிட்டு, கடைத்தெருவில் சிறிது சுற்றிவிட்டு தங்கும் அறை வந்து சேர்ந்தோம். மறுநாள் காலை மீண்டும் பொதியுந்து பயணம். வழியில் சில இடங்களில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம். மேலும் சில மண்சரிவுகளையும் வழியில் கண்டோம். ரிசிகேசம் வந்துசேர மாலை ஏழு மணியாகிவிட்டது. எங்கள் திட்டப்படி நாங்கள் நால்வர் மறுநாள் காலை புதுதில்லி புறப்படுவது என்றும், மற்ற மூவர் வேறு இடங்களுக்கு தங்கள் பயணத்தை தொடர்வது என்றும் முடிவாகியிருந்தது. நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா என்ன?? எங்களுக்கு பெங்களூரு செல்ல இரயிலில் முன்பதிவு (டட்கால்) செய்ய நண்பனின் நண்பனிடம் சொல்லியிருந்தோம். அவனோ அலைபேசியில் அழைத்து முன்பதிவு கிடைக்கவில்லை என்று கூறி பீதியை கிளப்பிவிட்டான். அதன் காரணமாக அன்றிரவே பேருந்துபிடித்து அதிகாலை மூன்று மணியளவில் தில்லி இரயில் நிலையம் வந்து, காலை ஏழு மணியளாவில் புறப்படும் இரயிலில் முன்பதிவு செய்யாதோர் பெட்டியில் முண்டியடித்து இடம்பிடித்து எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். எங்கள் பயணதிட்டத்தை ஒருநாள் முன்னராக மாற்றியதால் முன்பதிவு செய்து வைத்திருந்த பயணசீட்டை கிளம்பும்முன்னர் ரத்து செய்து விட்டோம். நல்ல வேளையாக, அதிக சிரமமில்லாமல் இரண்டு நாள் பயணத்தை அந்த பெட்டியில் முடித்து பெங்களூரில் கால் வைத்தபோது மனதினுள் எதையோ சாதித்த உணர்வு குடிகொண்டது.

எங்களின் உண்மையான இலக்கினை அடையமுடியவில்லை. எனினும், இமயத்தை காணவேண்டும் என்ற ஆவல் பூர்த்தியானது. பூர்த்தியானது என்பதைவிட மேலும் சென்று கண்டுகளிக்க வேண்டும் என்ற ஆசையை தூண்டிவிட்டது என்றே கூறவேண்டும். மீண்டும் செல்ல வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக செல்லவேண்டும். அந்த வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருக்கின்றேன். என் மனதில் என்றும் நீங்காத இடத்தை இந்த பயணமும் பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.

Monday, July 13, 2009

இமயம் - கங்கோத்திரி - கேதார்தல் பயணம் - ஆ


(பகுதி அ )

மறுநாள் காலை எட்டு மணியளவில் எங்கள் நடைபயணத்தை துவங்கினோம். முதல் நாள் கால்நனைத்த கங்கையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலத்தை தாண்டிய சிறு நிமிடங்களிலெல்லாம் மனித நடமாட்டத்தை விட்டுச்செல்ல ஆரம்பித்தோம். இதுநாள்வரை காணாத இடம் நோக்கி, வழியில் என்னவெல்லாம் ஆச்சிரியங்கள் இருக்குமோ என்றறியாமல் எங்கள் பயணத்தை நம்பிக்கையுடனும், மகிழ்வுடனும் துவங்கினோம். ஏற்கனவே மக்கள் சென்று வந்த தடங்களாக ஒற்றை அடிபாதை இருந்தது. அதிலேயே நடந்து கொண்டிருந்த எங்களுக்கு முதல் தடைக்கல்லாக நின்றது சிறிய மலைக்குன்று. அந்த இடத்தில் பாதை முடிந்து அதன் பின்னர் எப்படி செல்வது என்று தெரியவில்லை. பின்னர் எங்கள் நண்பர்கள் குன்றின் மேலேறி சென்றால்தான் வழியிருக்கும் என்று கூற சிறிது யோசனையுடன் அந்த குன்றினில் ஏறி தாண்டினோம். எதிர்பார்த்தபடியே அதன் பிறகு பாதை தொடர்ந்து கொண்டிருந்தது. அந்த பாதையிலேயே பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தோம்.



வழியெங்கும் ஏற்ற இறக்கங்களாக மாறிமாறி வந்துகொண்டிருந்தது. எங்கள் பின்னால் இருந்த மலைத்தொடர்கள் சிறிது சிறிதாக எங்களை விட்டு விலகி சென்றுகொண்டிருந்தது. எங்களின் இடப்புறம் ஆறு எதிர்திசையில் ஓடிக்கொண்டிருந்தது. அதற்கு மறுபக்கமும் தொடர்ச்சியாக மலைத்தொடர்கள்தான். எங்களுக்கு பல ஆச்சரியங்கள் அளிக்க காத்துக்கொண்டிருப்பதாக கூறி நீண்டுகொண்டே சென்றுகொண்டிருந்தன. நாங்கள் நடந்து கொண்டிருந்த ஒற்றையடி பாதையின் இடப்புறம் பெரும்சரிவு மட்டுமே இருந்தது. அதாவது, வலப்புறம் அதிகம் ஏற முடியாதவாறு சரிவான மலைத்தொடரும், பாதைக்கு இடப்புறம் ஆற்றை நோக்கிய சரிவும் இருந்தது. கீழே போய்விட்டால் மேலே வருவது மிகவும் கடினம். ஆகையால், மிகுந்த கவனத்தோடு அந்த பாதையில் ஒருவர் பின் ஒருவராக சென்று கொண்டிருந்தோம்.


தொடர்ந்து சென்று கொண்டிருந்த எங்களுக்கு அடுத்த முட்டுக்கட்டையாக வந்தது பாதையை மறைத்து மேலிருந்து கீழ்வரை சென்ற ஒரு நிலச்சரிவு. சுமார் ஐந்து அடிகள்தான் இருக்கும்; எனினும் அதனை கடப்பது அவ்வளவு எளிதாக இல்லை. என்னதான் எளிதில் தாண்டிவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தாலும், மனதில் ஒரு பயம் குடிகொண்டு ஒவ்வொரு அடியையும் அதிக கவனத்துடன் வைக்கச்சொல்லி, நம் நம்பிக்கையை குலைத்துவிடும். அதுவே அப்போதும் நடந்தது. நான் அதனை தாண்ட தடுமாறினேன் என்று சொல்லவேண்டும். அந்த இடத்தில் உதவிய என் நண்பரை மிகவும் சிரமப்படுத்திவிட்டேன். மற்றவர்கள் அவ்வளவு தடுமாறவில்லை. அந்த இடத்தை தாண்டி சிறிதுதூரம் சென்று பார்த்தால் எங்கள் முன்னர் தெரிந்தது சிறிது காலத்திற்கு முன்னர் ஏற்பட்டிருந்த நிலச்சரிவு. எப்படி அந்த இடத்தை கடப்பது என்று யோசித்து கொண்டிருந்தபோது எங்கள் கண்ணில் பட்டது சரிவினை ஒட்டிய ஒரு பாதை. மிக மிக கவனத்துடன் செல்ல வேண்டியிருந்தது. சிறிது காலினை மாற்றி வைத்தாலும் ஆற்றுபடுகைக்கு போக வேண்டியதுதான். ஒருவர் மற்றவருக்கு துணையென மிகுந்த கவனத்துடன் அந்த இடத்தை தாண்டினோம். எங்களுக்கான ஆச்சரியங்கள் அப்போதுதான் தொடங்கியிருந்தது என்பதை நாங்கள் முழுமையாக அறியவில்லை.


நிலச்சரிவினை கடந்து வந்துவிட்டோமென மகிழ்வாக நடந்து கொண்டிருந்தோம். அது அதிக நேரம் நீடிக்காது என்று எங்களுக்கு அப்போது தெரியாது. ஒரு மேட்டினை தாண்டி சென்று பார்த்தபோது எங்களுக்கான அதிர்ச்சி காத்திருந்தது. நாங்கள் கண்டது சுமார் இருபது அடி நீலமுள்ள பாதையை வெட்டிச்சென்ற செங்குத்தான சரிவை. வெறும் சரிவாக இருந்தாலே தாண்டுவது சிரமமாக இருக்கும். ஆனால் இதுவோ முழுதுமாக பனியினால் மூடப்பட்டிருந்தது. எனது கனவில் இருந்த பஞ்சுபோன்ற பளீர் வெண்மைநிற பனியாக அது இல்லை. மாறாக நமது குளிர்சாதனபெட்டியில் இருக்கும் அழுத்தமான பனிக்கட்டி போல அது இருந்தது. கால்களை வைத்து சோதித்து பார்த்தபோது மிகவும் வழுக்கும் தன்மை வாய்ந்ததாக இருந்தது. சிறிது தவறுதலாக வைத்தால் சுமார் இருபது அடிக்கும் மேலான ஆழத்திலுள்ள ஆற்றுப்படுகையில் சென்று விழவேண்டியதுதான்.


இங்கேதான் எங்களை வழிநடத்திச்சென்ற எங்கள் நண்பரின் முன்னனுபவம் கைகொடுத்தது. அவரது யோசனையின்படி முதலில் பாதையை காலால் ஏற்படுத்திக்கொண்டு அவர் செல்வது என்றும் நாங்கள் அனைவரும் ஒவ்வொருவராக அவரை சரியாக பின்தொடர்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படியே முதலில் அவர் செல்ல ஆரம்பித்தார். அது அவ்வளவு எளிதாக இல்லை. ஒரு காலால் வழி ஏற்படுத்த முயலும்போது மறுகாலால் பனிக்கட்டியை அழுத்தி நின்றிருக்க வேண்டும். சிறிது தவறு செய்தாலும் அடிபடுவது உறுதி. மேலும் கைகளில் பிடிக்க நாங்கள் வைத்திருந்த கோல்தான் துணை. வேறு எதனையும் பிடிக்க முடியாது. பனிக்கட்டிக்குள் கோல் எவ்வளவு வலுவாக சென்று பிடித்துக்கொள்கின்றதோ அவ்வளவு பிடிமானம் நமக்கு. கைகளும், கால்களும் மிகவும் ஒத்துழைத்து செல்லவேண்டிய பாதை. மெதுவாக முதல் நண்பர் சென்றுவிட நாங்கள் அனைவரும் ஒவ்வொருவராக செல்ல ஆரம்பித்தோம். கீழே பார்க்கவும் மனதில் பயம். கண்கள் நேரே பாதையை மட்டுமே பார்த்து கொண்டிருந்தது. எப்போது அந்த தூரத்தை கடப்போம் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. வெற்றிகரமாக அந்த இடத்தை தாண்டி முடித்தபோது ஏற்பட்ட நிம்மதிக்கு அளவே கிடையாது. இனி எப்படிப்பட்ட இடத்தையும் தாண்டிவிடலாம் என்ற அசட்டு தைரியமும் வந்துவிட்டது. எங்களுக்கு இந்த இடத்தை தாண்டதான் அதிக நேரம் பிடித்துக்கொண்டது. தாண்டும்போது எங்கள் நண்பர்கள் தங்கள் கையிலிருந்த ஒரு கழியையும், ஒரு உறங்கும் பையையும் பனிசருக்கிலும், பல்லத்திலும் தவறுதலாக போட்டுவிட்டனர். கழி போனால் பரவாயில்லை; ஆனால் உறங்கும் பை இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. ஆகையால் முதலில் வழி காட்டிய நண்பரே கயிற்றின் துணைக்கொண்டு கீழிறங்கி அவற்றை எடுத்து வந்தார்.


எங்களின் கண்களின் பசிக்கு தீனியாக பலவற்றை இயற்கை விருந்தாக்கி படைத்துக்கொண்டிருந்தது. கண்களின் பசி தீர்ந்துகொண்டேயிருந்தது. ஆனால் வயிற்று பசி எட்டிப்பார்த்தது. அமர்ந்து விருந்து சாப்பாடெல்லாம் சாப்பிட முடியாது. அதற்கு பதிலாக, சில இடங்களில் நின்று கடலை உருண்டையும், ரொட்டிகளும், மிட்டாய்களும், ஊறவைத்த அவலுமாக வயிற்று பசியை போக்கிக்கொண்டோம். இவையெல்லாம் உண்மையிலேயே பசி தாங்கியதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து நடக்க உடலுக்கு தேவையான சக்தியையும் அளித்தது. அதற்கு பின்னும் எங்கள் நடை தொடர்ந்தது. அந்த வழியில் திடீரென்று மலைமீது பார்த்தபோது ஏதோ சில உயிரினங்கள் மேய்ந்து கொண்டிருந்தன. என்னவென்று உற்றுநோக்கியபோது ஒருசில மான்கள் இருந்ததை கண்டோம். அந்த நேரம்வரை எங்களை தவிர வேறெந்த நடக்கும்/பறக்கும் உயிரினங்களையும் காணவில்லை. சிறிது ஆச்சிரியமாகவும், மகிழ்வாகவும் இருந்தது. நாங்கள் சென்ற வழியில் சில இடங்களில் பாதை நன்றாகவும், சில இடங்களில் அச்சம் அளிக்கும் வகையிலும் இருந்தது. ஆற்றின் அந்த பக்கம் பார்த்தபோது பல இடங்களில் மலை செங்குத்தாக இறங்கியிருந்தது. அதாகப்பட்டது பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டிருந்தது.


சுமார் ஐந்தரை மணியளவில் நாங்கள் எதிர்கொண்டது எங்கள் வழியில் இருந்த பெரும் நிலச்சரிவை. அதனை தாண்டுவது அவ்வளவு எளிதாக இருக்காது என்றும் அதற்கு பல மணி நேரங்கள் பிடிக்கும் என்றும் உணர்ந்தோம். ஆகையால் அதற்கு முன்னர் இருந்த ஒரு சமதரையில் தங்கி, மறுநாள் காலை பயணத்தை தொடர்வது என்று முடிவுசெய்தோம். நாங்கள் எங்களுடன் கூடாரம் அமைக்க தேவையானவற்றை எடுத்து சென்றிருந்தபடியால் அதனை அமைக்கும் பணி கூட்டுமுயற்சியில் நடந்துகொண்டிருந்தது. அதுவரை ஓரளவு நன்றாக இருந்த வானிலை சிறிதுமாறி மழை தூறல் ஆரம்பித்துவிட்டது. மழை சிறிது வலுபெற ஆரம்பித்துவிட்டதால், வேகவேகமாக கூடாரத்தை முடிந்தவரை அமைத்துக்கொண்டு எங்கள் படுக்கை பையினுள் எங்கள் உடல்களை சிக்கவைத்துக்கொண்டோம். மணியோ மாலை ஆறரைதான் ஆகியிருந்தது. வானிலை நன்றாக இருந்திருந்தால் வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்திருக்கலாம். ஆனால் மழையின் வேகம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. மழையை ரசித்துக்கொண்டே உறக்கம் எப்போது வரும் என்று காத்துகொண்டிருந்தோம். சில நேரங்களில் ஏதோ சரிந்துஓடுவது போன்ற சப்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. மனதினுள் ஏற்பட்ட சிறிது பயத்தினை ஏதோ நம்பிக்கையில் அடக்கிக்கொண்டே எப்படியோ உறங்கிப்போனோம்.

Wednesday, July 8, 2009

இமயம் - கங்கோத்திரி - கேதார்தல் பயணம் - அ

மண்ணும் இமயமலை எங்கள் மலையே என்று பெருமை கொள்ளும் மக்கள் நாம். பாரதி அழகாகவும், ஆசையை தூண்டும் விதமாகவும் “வெள்ளிப்பனிமலையின் மீதுலவுவோம்” என்றும் கூறினான். அவன் தீர்க்கமாக கூறிச்சென்ற பலவற்றுள் இமயத்தை கண்டு, அதன் மீது உலவி வரவேண்டும் என்ற ஆசை என்னுள் நெடுநாளாக இருந்தது. ஆசை இருந்தாலும் வழி தெரியவேண்டுமே; தகுந்த நேரம் வரவேண்டுமே! எனது நெடுநாள் காத்திருப்பு நிறைவடையும் நேரமும் வந்தது. எங்கள் அறிவியல் கழகத்திலிருந்து நண்பர்கள் சிலர் கங்கோத்திரி செல்லமுடிவெடுத்து ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். கங்கோத்திரி செல்லும் பலர் அங்கிருந்து தபோவன் – கோமுக் ஆகிய இடங்களுக்கு டிரெக்கிங் என்று சொல்லப்படும் நடைபயணம் மேற்கொள்வார்கள். கோமுக் என்பது கங்கையின் பிறப்பிடமாக அறியப்படுகிறது. இவர்களின் திட்டம் அந்த வழியில் செல்லாமல் அதற்கு எதிர்திசையில் உள்ள கேதார்தல் என்னும் ஏரி நோக்கி செல்வதாக இருந்தது. அதிகம் மக்கள் செல்லாத இடம் அது. ஆகையால் சிறிது பயம் என் மனதினுள் இருந்தது. இதனால் என்னால் முதலில் அவர்களுடன் செல்வது பற்றி முடிவெடுக்க முடியவில்லை. பின்னர் அவர்களுள் ஒருவர் உடல்நல குறைவு காரணமாக தனது பயண முடிவை மாற்றிக்கொண்டார். அவருக்காக ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட ஒரு இருக்கை இருப்பதாகவும், நான் வர சம்மதமா என்றும் கேட்டனர். விதிகளின்படி மாற்றி பயணிக்க கூடாது. புதியதாக பதிவு செய்ய இருக்கைகளும் இல்லை. ஆசை....இமயத்தை பார்க்க ஆசை. கூட்டமாக செல்வதால் பிரச்சினை இருக்காது என்ற நம்பிக்கையுடன் வீட்டில் சிறிது போராடி அனுமதி வாங்கி அவர்களுடன் செல்ல முடிவெடுத்து ஆயத்தமானேன்.

எங்கள் பயண திட்டத்தின்படி பெங்களூரிலிருந்து தில்லி சென்று, அங்கிருந்து ரிசிகேசம் செல்ல வேண்டும். பின்னர் அங்கிருந்து கங்கோத்திரி செல்ல திட்டம். அந்த நாளும் வந்தது. நாங்கள் நடக்கபோகும் பாதையில் உணவெல்லாம் கிடைக்காது. ஆகையால் அவற்றை இங்கிருந்தே எடுத்து செல்லவேண்டிய கட்டாயம். அதிகமாக சுமையும் எடுத்துக்கொண்டு செல்ல முடியாது. ஏனெனில், நாங்கள் அந்த சுமைகளை சுமந்துக்கொண்டு இரண்டு நாட்கள் மலைகளில் செல்ல வேண்டும். சிறிது கடினமான பாதையாதலால் மற்றவர்களுக்கு சுமைதூக்கி உதவுவது எளிதாக இருக்காது. அவரவர் சுமந்து சென்றால்தான் இலக்கை அடைய முடியும். மேலும் மலை நடுவே ஓர் இரவு தங்கவேண்டியுள்ளதால் அதற்கு தேவையான தூங்கும் பை (sleeping bag) வாங்க வேண்டியிருந்தது. எல்லாவற்றையும் வாங்கி பைகளில் எடுத்து வைப்பதே பெரிய வேலையாகிபோனது.

எல்லோரும் மகிழ்வுடன் ரயில் நிலையம் நோக்கி கிளம்பினோம். பயணம் நல்ல விதமாக துவங்கியது. மறுநாள் காலை செகந்திராபாத் இரயில் நிலையத்திற்கு எங்கள் குழுவிலிருந்த நண்பரின் குடும்பத்தினர் எங்கள் அனைவருக்கும் பயணத்திற்கான உணவு கொண்டுவந்து அளித்தனர். அருமையான உணவு. அவர்களுக்கு நன்றி கூறிகொண்டு பயணம் தொடர்ந்தது. மறுநாள் மதியம் தில்லி சென்றடைந்தோம். அங்கே இன்னொரு நண்பரின் நண்பர் வந்திருந்தார். அவரிடம் எங்கள் ரிடர்ன் (மறு பயணத்தை) மாற்றி முன்பதிவு செய்ய சொல்லிவிட்டு ரிசிகேசம் நோக்கிய பேருந்து பயணத்தை மேற்கொண்டோம்.

கங்கோத்திரி உத்திரகண்ட் மாநிலத்தில் உள்ளது. இமய மலைத்தொடர்களில் கார்வால் மலைத்தொடர் பகுதியில் இது அமைந்துள்ளது. ரிசிகேசத்திலிருந்து உத்திரகாசி வழியாக சுமார் 220 கி.மீ. தூரத்தில் உள்ளது. முழுதும் மலைத்தொடர்களினூடேயே பாதை அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் ரிசிகேசம் சென்றடைய இரவு சுமார் பத்து மணியாகிவிட்டது. கங்கோத்திரி செல்ல பேருந்து சீட்டு மறுநாள் காலை சுமார் நான்கு மணிக்கெல்லாம் வாங்கிக்கொண்டு உடனேயே பேருந்தில் செல்ல வேண்டும் என்று நண்பர் சொன்னார். எங்களுக்கோ சிறிது அசதியாக இருந்தது. எப்படியும் உணவருந்திவிட்டு உறங்க நடுநிசி ஆகிவிடும் என்று தெரியும். ஆகையால் நாங்கள் தங்குவதற்கு அறை எடுத்த இடத்திலேயே தனியாக பொதியுந்து ஏற்பாடு செய்துகொண்டோம்.

அடுத்த நாள் காலை சுமார் 6.30 மணியளவில் கங்கோத்திரி நோக்கி புறப்பட்டோம். சுமார் பத்து நிமிடங்கள்தான் சமதரையில் பயணம். அதன் பின்னர் முழுதுமாக மலைப்பயணம்தான். ஆரம்பத்தில் பயணம் சுகமாகத்தான் இருந்தது. எனினும், மலைகளில் செல்ல செல்ல ஓரிருவர் மிகவும் சங்கடப்பட்டனர். வளைந்து வளைந்து பாதை இருந்ததால் தலைசுற்றல் மற்றும் சில உபாதைகள் அவர்களை வாட்டியது. நல்ல உடல்நிலை உள்ளவர்கள்தான்; எனினும், பயண பாதை அவர்களுக்கும் சிறிது சங்கடத்தை அளித்தது. வேறு பாதைகளும் இல்லை. அவர்கள் எப்படியோ சமாளித்துகொண்டு பயணத்தை தொடர்ந்தனர். இதில் நாங்கள் பாராட்டியது பின்புறம் பக்கவாட்டில் அமர்ந்து, முழு பயணமும் செய்த இரண்டு நண்பர்களைதான். ஏனெனில், அந்த இருக்கையை தவிர்க்க நாங்கள் ஐவர் முயன்று வென்றோம் என்றே சொல்ல வேண்டும். அங்கே அமர்ந்து பயணிக்கும் தைரியம் எங்களுக்கு இல்லை என்றே சொல்லலாம்.

பயணம் தொடர்ந்தது. ஒரு பக்கம் உயர்ந்த மலைகளும், மறுபக்கம் ஆழ் பல்லத்தாக்குகளும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. ஆங்காங்கே சில சிறிய ஊர்கள் வந்துசென்றன. பல காட்சிகள் இதமாக வந்துசென்றாலும், தெஹரி என்ற இடம் முதன்முதலில் மனதில் நீங்காத இடமாக குடிகொண்டது. அணை கட்டப்படும் இடம் என்று ஓரிடத்தில் எங்கள் ஓட்டுனர் வண்டியை நிறுத்தினார்.




இரண்டு மலைகளுக்கும் நடுவே ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அந்த உயரத்திலிருந்து பார்த்தபோது ஆறு பச்சை நிறத்தில் காட்சி அளித்தது. ரசித்து பார்த்துக்கொண்டிருந்தோம். ஆற்றின் ஓரத்தில் இருக்கும் பல ஊர்கள் மூழ்கிவிடும் என்று கேள்விபட்டபோது மனம் வருந்தியது. சிறிது நேரம் அங்கே இருந்துவிட்டு பயணத்தை தொடர்ந்தோம். பல காட்சிகளை எங்களுக்கு இயற்கை விருந்தாக்கி படைத்து கொண்டிருந்தது. மலைகளில் ஏறுவதும், இறங்குவதுமாக மாறி மாறி பாதை சென்றுகொண்டிருந்தது. சில நேரங்களில் கங்கை நதி சாலையின் அருகிலேயே எங்களுக்கு எதிர்திசையில் ஓடிக்கொண்டிருந்தது.



தராசு வழியாக உத்திரகாசி சென்றடைந்தோம். அங்கிருந்து சுமார் 100 கி.மீ. தூரம் செல்லவேண்டும். அதன் பின்னர் சென்ற பாதை மிகவும் பிரம்மிக்க வைத்தது என்றே சொல்லவேண்டும். அவ்வாறான மலை பிரதேசங்களில் மலைகளை குடைந்து சாலைகள் அமைத்து அதனை பராமரிப்பதே மிகப்பெரிய விடயம். அதனை செய்துகொண்டிருக்கும் பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேசன் (BRO) பாராட்டப்பட வேண்டியவர்கள். பயணித்த வழியில் சில மண்சரிவுகளையும் கண்டோம்; ஒரு சில இடங்களில் சாலை வேலையும் நடந்து கொண்டிருந்தது.



என்னதான் மலைகளில் காலைமுதல் சென்றுகொண்டிருந்தாலும், இமயத்திற்கான அடையாளமான பனிபடர்ந்த மலையுச்சியின் தரிசனம் எங்களுக்கு மதியம் சுமார் மூன்றறை மணியளவில் கிடைத்தது. தூரத்திலிருந்து அந்த காட்சியை கண்டவுடன் எனது உள்ளம் ஆனந்தநடமாடியது. இதனை காணதானே இத்துனை நாட்கள் காத்துக்கொண்டிருந்தேன். அங்கே இறங்கி ரசித்து, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அந்த அழகை அருகில் ரசிக்க எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். மாலை சுமார் ஐந்தரை மணியளவில் கங்கோத்திரியை அடைந்தோம்.

அங்கே தங்குவதற்கு பல விடுதிகள் உள்ளன. அதில் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, முதல் வேலையாக கங்கையில் குளித்து வரலாமென புறப்பட்டு சென்றோம். தெளிந்த நீராக இருக்கும் என்று நினைத்திருந்த எனக்கு காலை முதற்கொண்டே மண்னின் நிறத்திலேயே காட்சியளித்து வந்தாள். இந்த இடத்தில் எப்படியிருக்கும் என்றெண்ணிக்கொண்டு சென்றேன். இங்கும் மண்னை அடித்துகொண்டுவருவது போலவே அந்த நிறத்திலேயே ஓடிக்கொண்டிருந்தாள்.


நிறம் எவ்வாறு இருந்தால் என்ன, கங்கையில் குளிப்பதுதான் முக்கியம் என்றெண்ணி ஒவ்வொருவராக இறங்க ஆரம்பித்தோம். ஆசையாக கால் வைத்த எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சி கிடைத்தது. காரணம், அந்த நீரின் வெப்பநிலை. நாங்கள் சென்றதோ வெயில் வாட்டிஎடுக்கும் மே மாதம். காற்றில் வெப்பம் சிறிது இருந்ததால், நீரில் குளிர்ச்சி அதிகம் இருக்காது என்று நினைத்திருந்த எங்களுக்கு முதல் அதிர்ச்சியை அளித்தது கங்கை நதி. குளிர்சாதன பெட்டியிலுள்ள ஃபிரீசர் (freezer-ல்) தண்ணிர் எந்த வெப்பநிலையில் இருக்குமோ, அதற்கு ஒப்பான குளிர்ச்சியில் கங்கை ஓடிக்கொண்டிருந்தது. பனிக்கட்டி இல்லாதது மட்டுமே வித்தியாசம். எப்படி இருந்தாலும் அங்கே குளிப்பது என்று முடிவுசெய்து கொண்டோம். குளிரில் உடல் நடுநடுங்க, பற்கள் பலமாக தாளம்போட வேகவேகமாக ஆற்றில் குளித்து முடித்தோம். என்னதான் குளிரடித்தாலும் ஆற்றுநீர் குளியல் அளித்த சுகமே தனிதான். பகல் முழுதும் பயணம் செய்த அயர்ச்சி நீங்கி ஒரு புத்துணர்ச்சி பெற்றோம் என்றே சொல்லவேண்டும். இரவு நன்றாக பசியாறிவிட்டு அடுத்த நாள் ட்ரெக்கிங் பயணத்திற்கு தேவையானதை சரியாக எடுத்துவைத்துவிட்டு உறங்கபோனோம்.