Monday, July 13, 2009

இமயம் - கங்கோத்திரி - கேதார்தல் பயணம் - ஆ


(பகுதி அ )

மறுநாள் காலை எட்டு மணியளவில் எங்கள் நடைபயணத்தை துவங்கினோம். முதல் நாள் கால்நனைத்த கங்கையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலத்தை தாண்டிய சிறு நிமிடங்களிலெல்லாம் மனித நடமாட்டத்தை விட்டுச்செல்ல ஆரம்பித்தோம். இதுநாள்வரை காணாத இடம் நோக்கி, வழியில் என்னவெல்லாம் ஆச்சிரியங்கள் இருக்குமோ என்றறியாமல் எங்கள் பயணத்தை நம்பிக்கையுடனும், மகிழ்வுடனும் துவங்கினோம். ஏற்கனவே மக்கள் சென்று வந்த தடங்களாக ஒற்றை அடிபாதை இருந்தது. அதிலேயே நடந்து கொண்டிருந்த எங்களுக்கு முதல் தடைக்கல்லாக நின்றது சிறிய மலைக்குன்று. அந்த இடத்தில் பாதை முடிந்து அதன் பின்னர் எப்படி செல்வது என்று தெரியவில்லை. பின்னர் எங்கள் நண்பர்கள் குன்றின் மேலேறி சென்றால்தான் வழியிருக்கும் என்று கூற சிறிது யோசனையுடன் அந்த குன்றினில் ஏறி தாண்டினோம். எதிர்பார்த்தபடியே அதன் பிறகு பாதை தொடர்ந்து கொண்டிருந்தது. அந்த பாதையிலேயே பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தோம்.



வழியெங்கும் ஏற்ற இறக்கங்களாக மாறிமாறி வந்துகொண்டிருந்தது. எங்கள் பின்னால் இருந்த மலைத்தொடர்கள் சிறிது சிறிதாக எங்களை விட்டு விலகி சென்றுகொண்டிருந்தது. எங்களின் இடப்புறம் ஆறு எதிர்திசையில் ஓடிக்கொண்டிருந்தது. அதற்கு மறுபக்கமும் தொடர்ச்சியாக மலைத்தொடர்கள்தான். எங்களுக்கு பல ஆச்சரியங்கள் அளிக்க காத்துக்கொண்டிருப்பதாக கூறி நீண்டுகொண்டே சென்றுகொண்டிருந்தன. நாங்கள் நடந்து கொண்டிருந்த ஒற்றையடி பாதையின் இடப்புறம் பெரும்சரிவு மட்டுமே இருந்தது. அதாவது, வலப்புறம் அதிகம் ஏற முடியாதவாறு சரிவான மலைத்தொடரும், பாதைக்கு இடப்புறம் ஆற்றை நோக்கிய சரிவும் இருந்தது. கீழே போய்விட்டால் மேலே வருவது மிகவும் கடினம். ஆகையால், மிகுந்த கவனத்தோடு அந்த பாதையில் ஒருவர் பின் ஒருவராக சென்று கொண்டிருந்தோம்.


தொடர்ந்து சென்று கொண்டிருந்த எங்களுக்கு அடுத்த முட்டுக்கட்டையாக வந்தது பாதையை மறைத்து மேலிருந்து கீழ்வரை சென்ற ஒரு நிலச்சரிவு. சுமார் ஐந்து அடிகள்தான் இருக்கும்; எனினும் அதனை கடப்பது அவ்வளவு எளிதாக இல்லை. என்னதான் எளிதில் தாண்டிவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தாலும், மனதில் ஒரு பயம் குடிகொண்டு ஒவ்வொரு அடியையும் அதிக கவனத்துடன் வைக்கச்சொல்லி, நம் நம்பிக்கையை குலைத்துவிடும். அதுவே அப்போதும் நடந்தது. நான் அதனை தாண்ட தடுமாறினேன் என்று சொல்லவேண்டும். அந்த இடத்தில் உதவிய என் நண்பரை மிகவும் சிரமப்படுத்திவிட்டேன். மற்றவர்கள் அவ்வளவு தடுமாறவில்லை. அந்த இடத்தை தாண்டி சிறிதுதூரம் சென்று பார்த்தால் எங்கள் முன்னர் தெரிந்தது சிறிது காலத்திற்கு முன்னர் ஏற்பட்டிருந்த நிலச்சரிவு. எப்படி அந்த இடத்தை கடப்பது என்று யோசித்து கொண்டிருந்தபோது எங்கள் கண்ணில் பட்டது சரிவினை ஒட்டிய ஒரு பாதை. மிக மிக கவனத்துடன் செல்ல வேண்டியிருந்தது. சிறிது காலினை மாற்றி வைத்தாலும் ஆற்றுபடுகைக்கு போக வேண்டியதுதான். ஒருவர் மற்றவருக்கு துணையென மிகுந்த கவனத்துடன் அந்த இடத்தை தாண்டினோம். எங்களுக்கான ஆச்சரியங்கள் அப்போதுதான் தொடங்கியிருந்தது என்பதை நாங்கள் முழுமையாக அறியவில்லை.


நிலச்சரிவினை கடந்து வந்துவிட்டோமென மகிழ்வாக நடந்து கொண்டிருந்தோம். அது அதிக நேரம் நீடிக்காது என்று எங்களுக்கு அப்போது தெரியாது. ஒரு மேட்டினை தாண்டி சென்று பார்த்தபோது எங்களுக்கான அதிர்ச்சி காத்திருந்தது. நாங்கள் கண்டது சுமார் இருபது அடி நீலமுள்ள பாதையை வெட்டிச்சென்ற செங்குத்தான சரிவை. வெறும் சரிவாக இருந்தாலே தாண்டுவது சிரமமாக இருக்கும். ஆனால் இதுவோ முழுதுமாக பனியினால் மூடப்பட்டிருந்தது. எனது கனவில் இருந்த பஞ்சுபோன்ற பளீர் வெண்மைநிற பனியாக அது இல்லை. மாறாக நமது குளிர்சாதனபெட்டியில் இருக்கும் அழுத்தமான பனிக்கட்டி போல அது இருந்தது. கால்களை வைத்து சோதித்து பார்த்தபோது மிகவும் வழுக்கும் தன்மை வாய்ந்ததாக இருந்தது. சிறிது தவறுதலாக வைத்தால் சுமார் இருபது அடிக்கும் மேலான ஆழத்திலுள்ள ஆற்றுப்படுகையில் சென்று விழவேண்டியதுதான்.


இங்கேதான் எங்களை வழிநடத்திச்சென்ற எங்கள் நண்பரின் முன்னனுபவம் கைகொடுத்தது. அவரது யோசனையின்படி முதலில் பாதையை காலால் ஏற்படுத்திக்கொண்டு அவர் செல்வது என்றும் நாங்கள் அனைவரும் ஒவ்வொருவராக அவரை சரியாக பின்தொடர்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படியே முதலில் அவர் செல்ல ஆரம்பித்தார். அது அவ்வளவு எளிதாக இல்லை. ஒரு காலால் வழி ஏற்படுத்த முயலும்போது மறுகாலால் பனிக்கட்டியை அழுத்தி நின்றிருக்க வேண்டும். சிறிது தவறு செய்தாலும் அடிபடுவது உறுதி. மேலும் கைகளில் பிடிக்க நாங்கள் வைத்திருந்த கோல்தான் துணை. வேறு எதனையும் பிடிக்க முடியாது. பனிக்கட்டிக்குள் கோல் எவ்வளவு வலுவாக சென்று பிடித்துக்கொள்கின்றதோ அவ்வளவு பிடிமானம் நமக்கு. கைகளும், கால்களும் மிகவும் ஒத்துழைத்து செல்லவேண்டிய பாதை. மெதுவாக முதல் நண்பர் சென்றுவிட நாங்கள் அனைவரும் ஒவ்வொருவராக செல்ல ஆரம்பித்தோம். கீழே பார்க்கவும் மனதில் பயம். கண்கள் நேரே பாதையை மட்டுமே பார்த்து கொண்டிருந்தது. எப்போது அந்த தூரத்தை கடப்போம் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. வெற்றிகரமாக அந்த இடத்தை தாண்டி முடித்தபோது ஏற்பட்ட நிம்மதிக்கு அளவே கிடையாது. இனி எப்படிப்பட்ட இடத்தையும் தாண்டிவிடலாம் என்ற அசட்டு தைரியமும் வந்துவிட்டது. எங்களுக்கு இந்த இடத்தை தாண்டதான் அதிக நேரம் பிடித்துக்கொண்டது. தாண்டும்போது எங்கள் நண்பர்கள் தங்கள் கையிலிருந்த ஒரு கழியையும், ஒரு உறங்கும் பையையும் பனிசருக்கிலும், பல்லத்திலும் தவறுதலாக போட்டுவிட்டனர். கழி போனால் பரவாயில்லை; ஆனால் உறங்கும் பை இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. ஆகையால் முதலில் வழி காட்டிய நண்பரே கயிற்றின் துணைக்கொண்டு கீழிறங்கி அவற்றை எடுத்து வந்தார்.


எங்களின் கண்களின் பசிக்கு தீனியாக பலவற்றை இயற்கை விருந்தாக்கி படைத்துக்கொண்டிருந்தது. கண்களின் பசி தீர்ந்துகொண்டேயிருந்தது. ஆனால் வயிற்று பசி எட்டிப்பார்த்தது. அமர்ந்து விருந்து சாப்பாடெல்லாம் சாப்பிட முடியாது. அதற்கு பதிலாக, சில இடங்களில் நின்று கடலை உருண்டையும், ரொட்டிகளும், மிட்டாய்களும், ஊறவைத்த அவலுமாக வயிற்று பசியை போக்கிக்கொண்டோம். இவையெல்லாம் உண்மையிலேயே பசி தாங்கியதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து நடக்க உடலுக்கு தேவையான சக்தியையும் அளித்தது. அதற்கு பின்னும் எங்கள் நடை தொடர்ந்தது. அந்த வழியில் திடீரென்று மலைமீது பார்த்தபோது ஏதோ சில உயிரினங்கள் மேய்ந்து கொண்டிருந்தன. என்னவென்று உற்றுநோக்கியபோது ஒருசில மான்கள் இருந்ததை கண்டோம். அந்த நேரம்வரை எங்களை தவிர வேறெந்த நடக்கும்/பறக்கும் உயிரினங்களையும் காணவில்லை. சிறிது ஆச்சிரியமாகவும், மகிழ்வாகவும் இருந்தது. நாங்கள் சென்ற வழியில் சில இடங்களில் பாதை நன்றாகவும், சில இடங்களில் அச்சம் அளிக்கும் வகையிலும் இருந்தது. ஆற்றின் அந்த பக்கம் பார்த்தபோது பல இடங்களில் மலை செங்குத்தாக இறங்கியிருந்தது. அதாகப்பட்டது பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டிருந்தது.


சுமார் ஐந்தரை மணியளவில் நாங்கள் எதிர்கொண்டது எங்கள் வழியில் இருந்த பெரும் நிலச்சரிவை. அதனை தாண்டுவது அவ்வளவு எளிதாக இருக்காது என்றும் அதற்கு பல மணி நேரங்கள் பிடிக்கும் என்றும் உணர்ந்தோம். ஆகையால் அதற்கு முன்னர் இருந்த ஒரு சமதரையில் தங்கி, மறுநாள் காலை பயணத்தை தொடர்வது என்று முடிவுசெய்தோம். நாங்கள் எங்களுடன் கூடாரம் அமைக்க தேவையானவற்றை எடுத்து சென்றிருந்தபடியால் அதனை அமைக்கும் பணி கூட்டுமுயற்சியில் நடந்துகொண்டிருந்தது. அதுவரை ஓரளவு நன்றாக இருந்த வானிலை சிறிதுமாறி மழை தூறல் ஆரம்பித்துவிட்டது. மழை சிறிது வலுபெற ஆரம்பித்துவிட்டதால், வேகவேகமாக கூடாரத்தை முடிந்தவரை அமைத்துக்கொண்டு எங்கள் படுக்கை பையினுள் எங்கள் உடல்களை சிக்கவைத்துக்கொண்டோம். மணியோ மாலை ஆறரைதான் ஆகியிருந்தது. வானிலை நன்றாக இருந்திருந்தால் வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்திருக்கலாம். ஆனால் மழையின் வேகம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. மழையை ரசித்துக்கொண்டே உறக்கம் எப்போது வரும் என்று காத்துகொண்டிருந்தோம். சில நேரங்களில் ஏதோ சரிந்துஓடுவது போன்ற சப்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. மனதினுள் ஏற்பட்ட சிறிது பயத்தினை ஏதோ நம்பிக்கையில் அடக்கிக்கொண்டே எப்படியோ உறங்கிப்போனோம்.

4 comments:

கையேடு said...

திகில் படம் பார்ப்பதுபோல் விறுவிறுப்பாக இருந்தது மணி.. விரைவில் அடுத்த பகுதியையும் வெளியிடு.

முதல் பகுதியின் சுட்டியை இந்த இடுகையின் துவக்கத்தில் கொடுத்தால் புதிய வாசகருக்கு எளிதாகயிருக்கும்.

பழமைபேசி said...

அருமைங்க.... சபாசு!

மணிநரேன் said...

நன்றி இரஞ்சித் மற்றும் பழமை.

சந்தனமுல்லை said...

விறுவிறுப்பாக இருக்கிறது! ரொம்ப த்ரில்லிங்கான பயணம் அனுபவம் இல்லையா!