Thursday, October 29, 2009

ஐரோப்பாவில் கோடை விடுமுறை - ஆ

கொலோன் நகரிலிருந்து போன் நகரையடுத்த பேட்ஹானாப் என்னும் இடத்திலுள்ள நண்பனை காண சென்றேன். அந்த நகரை சுற்றிப்பார்க்க அடுத்த நாள் கிளம்பிப்போனோம். அந்த ஊரின் வழியே ரைன் நதி ஓடிக்கொண்டிருக்கின்றது. நதியின் இக்கரைக்கும் அக்கரைக்கும் நடுவே பாலம் எதுவும் கண்ணில்படவில்லை. மாறாக படகுகளையே மக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்றனர். மக்கள் பெரும்பாலும் மகிழுந்து வைத்துள்ளனர். கரை தாண்டி செல்ல விரும்புவோர் தங்கள் மகிழுந்துகளை எப்படி எடுத்து செல்வார்கள் என்று யோசிக்கும்போதுதான் அந்த படகின் தன்மை புரிந்தது. வாகனங்கள் வைத்திருப்போர் தங்கள் வாகனத்தினூடேயே படகுகளில் சவாரி செய்கின்றனர். படகு ரொம்ப பெரிசுதான். பாலம் கட்டி பணத்தை செலவுசெய்யாமல் ஒருவித வருமானமாக இதனை பார்க்கிறார்களோ என்று தோன்றியது.



கரையையொட்டியே நடந்துகொண்டிருந்தோம். மறுகரையிலிருந்தே ஒரு பாழடைந்த கோட்டைசுவற்றை கண்டிருந்ததால் அதனை நோக்கி நடந்து கொண்டிருந்தோம். அதற்கு செல்லும் வழியை கண்டுபிடிக்க சிறிது சிரமப்படவேண்டியிருந்தது.ஒருவழியாக அது அமைந்திருந்த சிறுகுன்றின் அடிவாரத்தை கண்டுபிடித்துவிட்டோம்.


அங்கிருந்து பார்த்தபோது அது ஏதோ ஒரு தோட்டத்திற்குள் செல்வதுபோல இருந்தது. எனினும் வேலிகள் எதுவும் இல்லை.அந்த இடத்தில் எந்தவொரு சரியான அறிவிப்பு பலகையோ அல்லது கேட்டுச்செல்ல மனிதர்களோ இல்லை. தொடர்ந்து செல்வதா வேண்டாமா என்ற குழப்பம் சிறிது நேரம். பின்னர் போய்தான் பார்ப்போமே என்று அந்த பாதைவழி ஏற ஆரம்பித்தோம். அருகில் சென்றபோதுதான் அங்கே இருபுறமும் திராட்சை பயிரிடப்பட்டுள்ளது என்பதை கண்டோம்; அது ஒரு வைன்யார்ட் என்று புரிந்தது.





ஓரளவு தூரம் சென்றதும் ஒரு பாதை காட்டுக்குள் செல்வதாக விளம்பரப்பலகை வைக்கப்பட்டிருந்தது. ஆகையால் அந்த பாதையை தவிர்த்து மற்ற பாதையில் சிறிதுதூரம் சென்றோம். கோட்டைக்கு செல்லும் வழி சரியாக புலப்படவில்லை. ஆகையால் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குமேல் செல்லாமல் நின்றுவிட்டோம். அங்கிருந்து கண்ட காட்சிகள் கண்களுக்கு விருந்தாக இருந்தன. சிறிது நேரம் அங்கிருந்து அந்த காட்சிகளை கண்டுரசித்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அடிவாரம் நோக்கி திரும்பிவிட்டோம்.



அடுத்த நாள் போன் நகரை சுற்றிப்பார்க்க சென்றோம். முதலில் சென்றது இசைமேதை பீத்தோவனின் இல்லம். அவர் பிறந்து வளர்ந்த வீட்டை அருங்காட்சியகமாக பராமரித்து வருகின்றனர். அவர் வாழ்க்கை வரலாற்றை அங்கே பார்த்தபோது மிகவும் மகிழ்வாகவும் பிரமிப்பாகவும் இருந்தது. இசைக்கு மயங்காதவர் எவரும் உண்டோ?அவரது இசையை அங்கே கேட்கும் வாய்ப்பும் அமைந்தது. ஒலி ஒளி காட்சிகளாக குறிப்பிட்ட நேரங்களில் அங்கேயே உள்ள ஒரு காட்சியரங்கில் திரையிடுகிறார்கள். முதல்முறையாக அவரது இசையை கேட்டேன். எனினும் என்னை அதனுள் இழுத்துக்கொண்டது என்றால் மிகையாகாது.அவர் இயற்றியிருந்த இசைதொகுதியொன்றிற்கு லேசர் மூலம் ஒளி வடிவம் கொடுத்து நன்றாக செய்திருந்தனர். நான் ரசித்து அமர்ந்திருந்த அந்த இருபது நிமிடங்கள் என்னை எங்கோ இழுத்துச்சென்றது எனலாம்.இசை செய்யும் மாயங்களே கணக்கிட முடியாதது.



உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதியில்லாததால் அங்கே சென்றுவந்ததை பறைசாற்றும் வகையில் அந்த இல்லத்தின் வெளியே புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.




அதன் பின்னர் அந்த நகரில் ஒரு பூங்காவை மட்டும் சுற்றிவிட்டு பல மலர்களை ரசித்துவிட்டு மனை வந்து சேர்ந்தோம். மறுநாள் மறுபடி சூளிச் பயணம்.

Friday, October 23, 2009

ஐரோப்பாவில் கோடை விடுமுறை - அ

மூன்று வார விடுமுறையில் மூயிரண்டு நட்புக்களை காண முடிவெடுத்து மேற்கொண்ட மூன்று நாடுகள் பயணம் முத்தாய்ப்பாய் அமைந்தது. ஐரோப்பாவில் இருப்பதில் ஒரு முக்கிய வசதி ஒரு நுழைவிசைவு (Visa) வைத்துக்கொண்டு மனிதனால் வரைப்படங்களில் வரையப்பட்ட பல கோடுகளை தாண்டிச்செல்ல முடியும். செர்மனியில் மேற்கு பகுதியிலுள்ள சூளிச் (Juelich) என்னும் இடத்தில் உள்ள நண்பன் வீட்டினை அடித்தளமாக முடிவு செய்து அங்கு செல்வதற்காக ஏற்பாடுகளை செய்து முடித்தேன்.

திசான் – பாரி – ஆகன் – தியூரன் - சூளிச் (Dijon-Paris-Aachen-Duren-Juelich) என்பது இரயில் பயண பாதையானது. பயணங்களில்தான் எத்தனை விதமான அனுபவங்கள் நமக்கு கிடைக்கின்றன. இங்கே காணும் சில விடயங்கள் நமக்கு ஆச்சிரியத்தையும், ஆனந்தத்தையும் அளிக்கும். பயணச்சீட்டு பரிசோதகர்கள் ஒவ்வொரு பயணியிடமும் பயணச்சீட்டு வாங்கிப்பார்ப்பதற்கு முன்னர் ஒரு வணக்கத்தையும் பின்னர் நன்றியையும் கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். நான் இதுவரை பார்த்த அனைத்து பரிசோதகர்களும் அனைத்து பயணிகளிடமும் இந்த பழக்கத்தை கடைப்பிடிப்பது ஆச்சிரியம்தான். நமது ஊரிலும் பலமுறை பயணித்துள்ளேன். இவ்வாறான நடவடிக்கைகளை பார்ப்பது மிக மிக அரிது. இங்கே இதனை ஒப்பிட்டு பார்த்தலில் உள்ள ஒரே நோக்கம், நாம் இவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வதாக கூறுவது இவ்வாறான நல்ல பண்புகளை விடுத்து மற்றவற்றை கற்றுக்கொள்வதால் ஏற்படும் கோபமும், வருத்தமுமே. முதல் வகுப்பில் சென்றதால் உணவும் பரிமாறப்பட்டது. அதனை செய்த அந்த நபரின் கவனிப்பும் கவர்ந்தது. என்னதான் அது அவர் வேலையென்றாலும் அந்த வேலை மீது அவர் காட்டிய ஒரு ஈடுபாடு இன்றும் அவரை மறவாமல் இருக்கச்செய்கிறது. அவரது பெயர் அந்தோனி என்று அவரது முத்திரையில் பார்த்த நியாபகம்.

பயணம் நல்லவிதமாக அமைந்தது. என்னை அழைத்துச்செல்ல இரண்டு நட்புக்கள் ஆகன் வந்து காத்துக்கொண்டிருந்தனர். சிறிதுநேரம் ஆகன் நகரை சுற்றிவிட்டு சூளிச் நோக்கி புறப்பட்டோம். சூளிச் ஒரு கிராமம் என்று முன்னரே நண்பன் கூறியிருந்தான். தியூரன் – சூளிச் இரயில் பயணம் சுமார் 25 நிமிடங்கள்.





அந்த வழி நெடுகவும் விளை நிலங்கள்தான் காட்சியளித்தன. வரப்புகளை எளிதில் பார்க்க முடியவில்லை. ஒவ்வொருவரும் பெருவாரியான நிலங்களை வைத்துள்ளனர். பலவற்றில் கோதுமை சாகுபடி முடியும் தருவாயில் இருந்தது. சிலவற்றில் கிழங்குகள் சாகுபடியும் நடந்து கொண்டிருந்தது. இவ்வாறான காட்சிகள் நம் ஊரில் திருச்சி-தஞ்சை-குடந்தை வழியிலும், திருச்சி-கோவை வழியிலும் கண்ட நியாபகம். அங்குகூட இப்போதெல்லாம் அவ்வளவு தெடர்ச்சியாக விளை நிலங்களை காண முடிவதில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கும் விடயம்.

அடுத்த நாள் கலோன் நகர் சென்றோம். இரயில் நிலையத்திலிலிருந்து வெளியில் வந்ததும் கண்டது ஒரு தேவாலயம். UNESCO அமைப்பினால் பாரம்பரிய சின்னமாக மதிப்பிடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது அந்த தேவாலயம். உள்ளே சென்று பார்க்க அப்போது தருணம் அமையவில்லை. எனினும், செர்மனியிலிருந்து பிரான்சு திரும்பும்போது உள்ளே சென்று பார்க்க வாய்ப்பு கிடைத்தது.




அன்று பின்னர் சென்று பார்த்த இடம் உயிரியல் பூங்கா. நன்றாக அமைத்திருந்தனர். சில மணி நேரங்கள் அங்கே செலவழித்தோம்.



(உயிரியல் பூங்காவில் யானைகள் கூடாரத்தில் நேபாள நாட்டு அரசு சார்பில் அளிக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது)

எப்போதுமே நமக்கு அருகில் இருப்பதை பார்க்க நேரம் ஒதுக்குவது கிடையாது. சென்னையில் தாம்பரத்தை சுற்றியே வாழ்ந்து வந்திருந்தாலும் இதுவரை வண்டலூர் பூங்கா சென்றதில்லை. பலமுறை அதன் வழியே சென்றதுண்டு; எனினும் உள்ளே சென்றதில்லை. எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் சிறு வயதில் இருந்ததால் இதுவரையிலும் அங்கே செல்லாமலேயே காலம் சென்றுவிட்டது. இன்றோ அயல்நாட்டிற்கு வந்து சென்றது உயிரியல் பூங்கா. நினைக்கையில் சிரிப்பாகதான் வருகிறது.

அங்கிருந்து வெளியே வரவே மதியம் இரண்டு மணியாகிவிட்டது. எங்களின் திட்டம் ரைன் நதியில் படகு சவாரி செல்வதாகும். சவாரி 3.30 மணியளவில் இருந்ததால் பூங்காவிலிருந்து நேரே படகுத்துறைக்கு வந்துவிட்டோம். ஒரு மணிநேரம் செல்லவும் அதே நேரம் திரும்பி வரவும் என மொத்தம் இரண்டு மணி நேரங்கள் அழகான அனுபவமாக இருந்தது. சிறிது தூரம் சென்றவுடனேயே இரண்டு கரைகளிலும் பசுமையான மரங்களை காண முடிந்தது. ஆங்காங்கே வயது வரம்பின்றி மக்களையும் கூட்டம் கூட்டமாக அமர்ந்து, படுத்து, சாய்ந்து என தங்களுக்கு விருப்பமான முறைகளில் கரைகளில் பொழுதினை அனுபவிப்பதை காணமுடிந்தது. நீர் விளையாட்டுகளிலும் சிலர் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.





சாந்தமாக ஓடிக்கொண்டிருக்கும் நதியால் அந்த பூமி செழிப்புடன் இருப்பதை காணமுடிகின்றது. ஏனோ நம் நாட்டில் அனைத்தையும் இழந்து கொண்டிருக்கின்றோம் என்ற எண்ணம் சங்கடத்தை அளிக்காமல் இல்லை. அயல்நாட்டினர் தங்களின் வளங்களை பாதுகாத்து வருகின்றனர். ஆனால் அவர்களை பார்த்து ஆச்சிரியப்படும் நாமோ இருப்பதை அழித்துக்கொண்டிருக்கின்றோம். அது என்னமோ தெரியவில்லை, நம் மக்களில் பலருக்கு மேலை நாட்டு மோகமும், அவர்களின் வாழ்வியல் முறை மீதும் ஒரு இனம் புரியாத ஈடுபாடு உள்ளது. ஆனால் அவர்களிடம் உள்ள நல்ல விடயங்களை எடுத்துக்கொள்வதில் மட்டும் ஒருவித தடுமாற்றம், பிற்போக்குத்தனம் உள்ளது என்பதை மறுக்க முடியாது. அந்த நாள் அங்கிருந்த இயற்கை அழகை ரசிப்பதில் சென்றது.

Wednesday, October 7, 2009

அடப்போங்க மக்கா....

காட்சி 1

எங்காளு ஐம்பத்தைந்து சதவிகிதம்தான் எடுத்திருக்கான், என்றேன்.

இரண்டாம் ஆண்டு மதிப்பெண்களா? என்றார் அவர்.

ஆமாம்.

அடப்போடா! கல்லூரி வந்தாச்சு. சும்மா மதிப்பெண் வாங்கலைனு இன்னமும் அவனை போட்டு இம்சை பண்ணாதீங்கடா. இப்ப இது ஓக்கே. எல்லாம் வாங்கிடுவான். அவனை நிம்மதியா விடுங்கடா.

எனக்கு அறிவுரை கூறிவிட்டு சென்றார்.


காட்சி 2

என்ன தம்பி, பரிட்சை மதிப்பெண்கள் வந்துடுச்சா? என்றார் தன் பிள்ளையிடம்.

இன்னைக்குதான் கொடுத்தார்கள்; இந்தாங்க விடைத்தாள்கள்.

பார்த்த நொடியில் அவருக்குள் கோபம்பொங்கி அவனை கரித்துக்கொட்டிக்கொண்டிருந்தார். எனக்கோ அதிர்ச்சி. அந்த பிள்ளை மிகவும் நன்றாக படிப்பவன். எதுக்குடா அவங்க இப்படி திட்டிக்கொண்டிருக்கின்றார்கள் என்று அவனது விடைத்தாள்களை வாங்கி பார்த்தபோது அவனது மதிப்பெண்கள் அறிவியலில் தொண்ணூற்றி ஐந்து என்று இருந்தது.

அடிப்பாவி பெண்ணே என்று மனதில் நினைத்துக்கொண்டு, இவ்வளவு மதிப்பெண்கள் வாங்கியிருக்கான், எதுக்கு அவனை திட்டிக்கிட்டிருக்கீங்க?

ஐந்து மதிப்பெண்களை கோட்டை விட்டுட்டு வந்துள்ளான். இவன் வகுப்பு தோழிகளெல்லாம் இவனைவிட அதிக மதிப்பெண்கள் எடுத்திருப்பார்கள். இவன் பாரு என்ன பண்ணியிருக்கானு. இப்பவே இப்படினா போக போக படிப்பிலே நாட்டமே போய் பத்தாவதுலே நல்ல மதிப்பெண்கள் வாங்க மாட்டான் என்றும் உருப்பிட மாட்டான் என்றும் ஒரே புலம்பல். அவன் அப்போது ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். கொஞ்சம் நியாயமாக யோசிக்க சொல்லி பார்த்தேன். பயன் இல்லை. நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா என்று கேட்க வேண்டும் போல இருந்தது. என்னைவிடவும் வயதில் பெரியவர்கள்; ஆகையால் அவ்வாறு கேட்க முடியவில்லை. சில பெற்றோர்கள் சிறிதும் யோசிக்கமாட்டார்கள் என்று நன்றாக புரிந்தது. அந்த பிள்ளையின் நிலை கண்டு வருத்தப்பட்டுக்கொண்டு அங்கிருந்து வந்துவிட்டேன்.

மனதில் அவர்கள் என்னிடம் முன்னர் கூறிய சொற்கள் வந்துபோனது. கல்லூரி ஐம்பத்தைந்தை விட ஏழாம் வகுப்பின் காலாண்டுத்தேர்வின் தொண்ணூற்றி ஐந்து குறைவான மதிப்பெண் என்று எனக்கு அதுவரை தெரியாமல் போயிற்று. அடப்போங்க மக்கா....


பி.கு: பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையும்,பொதுநல நோக்கும் இருக்கும் சில மக்களிடமும் ஒரு சிறு அளவாவது தன்னலம் இருக்கின்றதோ என்று யோசிக்க வைத்த சில நிகழ்வுகளை இந்த வரிசையில் பதிய முயல்கிறேன்.