மூன்று வார விடுமுறையில் மூயிரண்டு நட்புக்களை காண முடிவெடுத்து மேற்கொண்ட மூன்று நாடுகள் பயணம் முத்தாய்ப்பாய் அமைந்தது. ஐரோப்பாவில் இருப்பதில் ஒரு முக்கிய வசதி ஒரு நுழைவிசைவு (Visa) வைத்துக்கொண்டு மனிதனால் வரைப்படங்களில் வரையப்பட்ட பல கோடுகளை தாண்டிச்செல்ல முடியும். செர்மனியில் மேற்கு பகுதியிலுள்ள சூளிச் (Juelich) என்னும் இடத்தில் உள்ள நண்பன் வீட்டினை அடித்தளமாக முடிவு செய்து அங்கு செல்வதற்காக ஏற்பாடுகளை செய்து முடித்தேன்.
திசான் – பாரி – ஆகன் – தியூரன் - சூளிச் (Dijon-Paris-Aachen-Duren-Juelich) என்பது இரயில் பயண பாதையானது. பயணங்களில்தான் எத்தனை விதமான அனுபவங்கள் நமக்கு கிடைக்கின்றன. இங்கே காணும் சில விடயங்கள் நமக்கு ஆச்சிரியத்தையும், ஆனந்தத்தையும் அளிக்கும். பயணச்சீட்டு பரிசோதகர்கள் ஒவ்வொரு பயணியிடமும் பயணச்சீட்டு வாங்கிப்பார்ப்பதற்கு முன்னர் ஒரு வணக்கத்தையும் பின்னர் நன்றியையும் கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். நான் இதுவரை பார்த்த அனைத்து பரிசோதகர்களும் அனைத்து பயணிகளிடமும் இந்த பழக்கத்தை கடைப்பிடிப்பது ஆச்சிரியம்தான். நமது ஊரிலும் பலமுறை பயணித்துள்ளேன். இவ்வாறான நடவடிக்கைகளை பார்ப்பது மிக மிக அரிது. இங்கே இதனை ஒப்பிட்டு பார்த்தலில் உள்ள ஒரே நோக்கம், நாம் இவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வதாக கூறுவது இவ்வாறான நல்ல பண்புகளை விடுத்து மற்றவற்றை கற்றுக்கொள்வதால் ஏற்படும் கோபமும், வருத்தமுமே. முதல் வகுப்பில் சென்றதால் உணவும் பரிமாறப்பட்டது. அதனை செய்த அந்த நபரின் கவனிப்பும் கவர்ந்தது. என்னதான் அது அவர் வேலையென்றாலும் அந்த வேலை மீது அவர் காட்டிய ஒரு ஈடுபாடு இன்றும் அவரை மறவாமல் இருக்கச்செய்கிறது. அவரது பெயர் அந்தோனி என்று அவரது முத்திரையில் பார்த்த நியாபகம்.
பயணம் நல்லவிதமாக அமைந்தது. என்னை அழைத்துச்செல்ல இரண்டு நட்புக்கள் ஆகன் வந்து காத்துக்கொண்டிருந்தனர். சிறிதுநேரம் ஆகன் நகரை சுற்றிவிட்டு சூளிச் நோக்கி புறப்பட்டோம். சூளிச் ஒரு கிராமம் என்று முன்னரே நண்பன் கூறியிருந்தான். தியூரன் – சூளிச் இரயில் பயணம் சுமார் 25 நிமிடங்கள்.
அந்த வழி நெடுகவும் விளை நிலங்கள்தான் காட்சியளித்தன. வரப்புகளை எளிதில் பார்க்க முடியவில்லை. ஒவ்வொருவரும் பெருவாரியான நிலங்களை வைத்துள்ளனர். பலவற்றில் கோதுமை சாகுபடி முடியும் தருவாயில் இருந்தது. சிலவற்றில் கிழங்குகள் சாகுபடியும் நடந்து கொண்டிருந்தது. இவ்வாறான காட்சிகள் நம் ஊரில் திருச்சி-தஞ்சை-குடந்தை வழியிலும், திருச்சி-கோவை வழியிலும் கண்ட நியாபகம். அங்குகூட இப்போதெல்லாம் அவ்வளவு தெடர்ச்சியாக விளை நிலங்களை காண முடிவதில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கும் விடயம்.
அடுத்த நாள் கலோன் நகர் சென்றோம். இரயில் நிலையத்திலிலிருந்து வெளியில் வந்ததும் கண்டது ஒரு தேவாலயம். UNESCO அமைப்பினால் பாரம்பரிய சின்னமாக மதிப்பிடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது அந்த தேவாலயம். உள்ளே சென்று பார்க்க அப்போது தருணம் அமையவில்லை. எனினும், செர்மனியிலிருந்து பிரான்சு திரும்பும்போது உள்ளே சென்று பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
அன்று பின்னர் சென்று பார்த்த இடம் உயிரியல் பூங்கா. நன்றாக அமைத்திருந்தனர். சில மணி நேரங்கள் அங்கே செலவழித்தோம்.
(உயிரியல் பூங்காவில் யானைகள் கூடாரத்தில் நேபாள நாட்டு அரசு சார்பில் அளிக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது)
எப்போதுமே நமக்கு அருகில் இருப்பதை பார்க்க நேரம் ஒதுக்குவது கிடையாது. சென்னையில் தாம்பரத்தை சுற்றியே வாழ்ந்து வந்திருந்தாலும் இதுவரை வண்டலூர் பூங்கா சென்றதில்லை. பலமுறை அதன் வழியே சென்றதுண்டு; எனினும் உள்ளே சென்றதில்லை. எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் சிறு வயதில் இருந்ததால் இதுவரையிலும் அங்கே செல்லாமலேயே காலம் சென்றுவிட்டது. இன்றோ அயல்நாட்டிற்கு வந்து சென்றது உயிரியல் பூங்கா. நினைக்கையில் சிரிப்பாகதான் வருகிறது.
அங்கிருந்து வெளியே வரவே மதியம் இரண்டு மணியாகிவிட்டது. எங்களின் திட்டம் ரைன் நதியில் படகு சவாரி செல்வதாகும். சவாரி 3.30 மணியளவில் இருந்ததால் பூங்காவிலிருந்து நேரே படகுத்துறைக்கு வந்துவிட்டோம். ஒரு மணிநேரம் செல்லவும் அதே நேரம் திரும்பி வரவும் என மொத்தம் இரண்டு மணி நேரங்கள் அழகான அனுபவமாக இருந்தது. சிறிது தூரம் சென்றவுடனேயே இரண்டு கரைகளிலும் பசுமையான மரங்களை காண முடிந்தது. ஆங்காங்கே வயது வரம்பின்றி மக்களையும் கூட்டம் கூட்டமாக அமர்ந்து, படுத்து, சாய்ந்து என தங்களுக்கு விருப்பமான முறைகளில் கரைகளில் பொழுதினை அனுபவிப்பதை காணமுடிந்தது. நீர் விளையாட்டுகளிலும் சிலர் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
சாந்தமாக ஓடிக்கொண்டிருக்கும் நதியால் அந்த பூமி செழிப்புடன் இருப்பதை காணமுடிகின்றது. ஏனோ நம் நாட்டில் அனைத்தையும் இழந்து கொண்டிருக்கின்றோம் என்ற எண்ணம் சங்கடத்தை அளிக்காமல் இல்லை. அயல்நாட்டினர் தங்களின் வளங்களை பாதுகாத்து வருகின்றனர். ஆனால் அவர்களை பார்த்து ஆச்சிரியப்படும் நாமோ இருப்பதை அழித்துக்கொண்டிருக்கின்றோம். அது என்னமோ தெரியவில்லை, நம் மக்களில் பலருக்கு மேலை நாட்டு மோகமும், அவர்களின் வாழ்வியல் முறை மீதும் ஒரு இனம் புரியாத ஈடுபாடு உள்ளது. ஆனால் அவர்களிடம் உள்ள நல்ல விடயங்களை எடுத்துக்கொள்வதில் மட்டும் ஒருவித தடுமாற்றம், பிற்போக்குத்தனம் உள்ளது என்பதை மறுக்க முடியாது. அந்த நாள் அங்கிருந்த இயற்கை அழகை ரசிப்பதில் சென்றது.
6 comments:
//நம் மக்களில் பலருக்கு மேலை நாட்டு மோகமும், அவர்களின் வாழ்வியல் முறை மீதும் ஒரு இனம் புரியாத ஈடுபாடு உள்ளது. ஆனால் அவர்களிடம் உள்ள நல்ல விடயங்களை எடுத்துக்கொள்வதில் மட்டும் ஒருவித தடுமாற்றம், பிற்போக்குத்தனம் உள்ளது என்பதை மறுக்க முடியாது.//
என் எண்ணத்தில் நெருடுவதும் இவ்வரிகளே!
அருமையான பயணக் கட்டுரையை ஆழமான ஒரு முத்தாய்புடன் முடித்துள்ளீர்கள்.
அருமையானக் கட்டுரை
தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி யோகன் பாரிஸ்.
கருத்திற்கு மிக்க நன்றி ராப்.
//எப்போதுமே நமக்கு அருகில் இருப்பதை பார்க்க நேரம் ஒதுக்குவது கிடையாது.//
அக்கரை எப்போது பச்சையா இருக்கறதுனாலயோ..
படங்கள் அருமை மணி.. அடுத்த பகுதிகளையும் விரைவில் வெளியிடவும்.. :)
மிக அருமையான கட்டுரை! அழகான படங்கள்!!
நன்றி இரஞ்சித்.
நன்றி சந்தனமுல்லை.
Post a Comment