Monday, April 20, 2009

இரு படங்களும் பல கேள்விகளும்

இந்த இரண்டு படங்களை பற்றி எழுத வேண்டும் என பல நாட்களாக எண்ணிக்கொண்டிருந்தேன். நான் முழுமையாக அமர்ந்து பார்த்து, என்னுள் பல கேள்விகளை எழுப்பிய படங்கள். ஒன்று ஹிந்தி மொழி படமான தாரே சமீன் பர். மற்றொன்று தமிழில் நவரசம். இவற்றைப்பற்றி எனது எண்ணங்களை மட்டுமே எழுதுகிறேன்.

அமீர் கானின் “தாரே சமீன் பர்” பலராலும் புகழப்பட்டு வர்த்தகரீதியாகவும் வெற்றி பெற்ற படம். டிஸ்லெக்சியா நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் கதையை கூறியிருப்பார்கள். அவனுடைய உலகம் எப்படிப்பட்டது, அதனை புரிந்துகொள்ளாத பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களினால் அவன் படும் சங்கடங்கள் என பல விவரங்களை காண்பித்திருப்பார்கள். அவனது நோயினை புரிந்துகொண்டு, அந்த சிறுவனை மெல்ல மெல்ல இயல்பான வாழ்க்கைக்கு கொண்டுவந்து, அவனது திறமையை வெளிக்கொண்டு வரும் ஆசிரியராக அமீர் கான் நடித்திருப்பார். ஒரு அழகான ஓவியன் அந்த சிறுவனுள் புதைந்து இருப்பான். அந்த ஒரு ஆசிரியர் இல்லாவிடில் அந்த ஓவியன் யாருக்கும் தெரியாமல் சென்றிருக்க வாய்ப்பு உள்ளது.

இந்த படத்தில் வரும் பெற்றோர், ஆசிரியர்கள் செயல்கள் பெருவாரியான மக்கள் செய்யும் தவறை காண்பிக்கின்றது. பொதுவாக அனைத்து குழந்தைகளிடமும் பெரியவர்கள் இப்படிதான் நடந்துகொள்கிறார்கள். கல்வி மிகவும் அவசியம்; அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் ஏட்டுக்கல்வி மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை பலரும் புரிந்து கொள்வதில்லை. ஒவ்வொருவருக்குமுள்ள தனித்திறமையை, விருப்பத்தை பெரும்பாலும் அறிந்துகொள்வதும் இல்லை; அப்படியே அறிந்து கொண்டாலும் அதனை ஊக்குவிப்பதில்லை. கல்வி என்பது மதிப்பெண் மட்டுமே என்று நினைக்கின்றனர். அனைவருடைய குறிக்கோளும் மதிப்பெண், அதிக மதிப்பெண் என்பதிலேயே நிற்கிறது. நன்றாக படிக்கும் குழந்தை முதல் மதிப்பெண் பெறுபவராக வரவேண்டும், சுமாராக படிக்கும் குழந்தை அதிக மதிப்பெண் பெறுபவராக வரவேண்டும் என்றே அறிவுறித்தி வழிகாட்டப்படுகின்றனர். சரியாக படிக்காத குழந்தைகளை மக்கு, மரமண்டை என ஏசி அவர்களின் தன்னம்பிக்கையை கொன்றுவிடுகின்றனர். இல்லாவிடில் சிறப்பு வகுப்பில் சேர்த்து எந்நேரமும் புத்தகமும் கையுமாய் அலையவைத்து எப்படியாவது தேர்ச்சிபெறுவதற்கு முயல்வது. இவ்வாறெல்லாம் செய்தால் அந்த குழந்தை வெறும் மதிப்பெண் வாங்கும் இயந்திரமாகதான் வளருமே அன்றி கல்விகற்ற ஒரு மனிதராக வளராது. படிக்கும் விடயங்களிலும் புரிதல் இருக்காது; புரிதலின்றி படிப்பதால் பயனும் இருக்காது.

எந்த ஒரு செயலை செய்வதற்கும் அதன் மீது ஈடுபாடு இருக்கவேண்டும். அந்த செயலை நேசிக்க வேண்டும். அந்த செயலின் மீது நாட்டம் வரவேண்டும். அப்படி ஒரு நாட்டம், ஆசை வந்துவிட்டால் அதில் சோடை போகமாட்டார்கள். வளர்ந்த கல்லூரி மாணவர்களே தங்களுக்கு ஈடுபாடு ஏற்படுத்தாத ஆசிரியரின் வகுப்பில் சரியாக கவனிக்காமல் புறக்கனிப்பார்கள்; அப்படியிருக்க விளையாட்டுத்தனம் அதிகமாக இருக்கும் குழந்தை பருவத்தில், அவர்களுக்கு கல்வியின் மீது ஈடுபாட்டை ஏற்படுத்தாமல் வற்புறுத்தி மட்டும் படிக்கவைக்க முயல்வது எப்படி நியாயமாகும். குழந்தைகள் படிக்க தடுமாறுகிறார்கள் என்றால் அதன் காரணத்தை அறிய முற்படவேண்டும். காரணத்தை கண்டுபிடித்து அதனை நிவர்த்தி செய்ய வேண்டும். உலகிலுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் கண்டிப்பாக ஒரு தீர்வு உள்ளது. பிரச்சினையின் மூலகாரணத்தை அறிய முற்பட வேண்டும். பெரும்பாலான நேரங்களில் அதனை கவனிக்க மறந்துவிடுகிறோம். பெரியவர்கள் செய்யும் தவறினால் பாதிக்கப்படுவது தங்கள் குழந்தைகள்தான் என்பதை பலரும் உணருவதில்லை. பிள்ளைகளை கரித்துக்கொட்டுவதில் பயனில்லை; மாறாக அவர்களின் திறமையை பெரியவர்கள் அறிந்துகொண்டு அவர்களுக்கு சரியான வழியினை காண்பித்தால் அவர்களின் வாழ்வும் சிறக்கும். அனைவரும் புகழும் பிள்ளைகளாக அவர்கள் வளருவார்கள்.

இந்த படத்திலேயே பார்க்கும் மற்றொரு விடயம் ஒப்பீடு செய்வது. சகோதர-சகோதரிக்குள், தோழர்களுக்குள் என் ஒப்பீடு செய்து சரியாக படிக்காத பிள்ளைகளை மட்டம் தட்டுவது, இது எவ்வளவு பெரிய தவறு. பெற்றோர் பெரும்பாலும் சொல்வது இருவருக்கும் ஒரேமாதிரிதான் வசதிகள் செய்து கொடுத்துள்ளோம்; ஆனால் இருவரும் ஒரேமாதிரி நன்றாக படிப்பதில்லை. இதில் யோசிக்க வேண்டியது வசதிகள் இல்லை. மாறாக குழந்தைகளிடம் உள்ள குறைபாடுகள். எதனால் ஒருவன் நன்றாக படிப்பதில்லை என்பதை ஆராயவேண்டும். அதற்கு ஒரு சரியான தீர்வு காணவேண்டும். அதனை விடுத்து ஒப்பிட்டுகொண்டே இருந்தால் அங்கே பொறாமை வளருமேயன்றி ஆரோக்கியமான போட்டி வளராது. இதனால் விட்டுக்கொடுத்தல், சகோதரத்துவம் போன்ற நல்ல பண்புகளுடன் வளரக்கூடிய ஒரு சமூகத்தை அழிப்பதுபோல தெரிகிறது. நம்மால் முடிந்தவரை பொறாமைகளற்ற வளமான போட்டிகளை வளர்ப்போம்,


மற்றொரு படம் நவரசம். இந்த படத்தை நான் பார்க்கவேண்டும் என என் நண்பன் கையேடு கூறியபோதே அது சராசரி படமில்லை என்று புரிந்துவிட்டது. அவன் அறிமுகப்படுத்தும் பல விடயங்கள் ஒரு தனி பரிமானத்துடன்தான் இருக்கும், அந்த படம் திருநங்கைகளை பற்றிய படம். சந்தோஷ்சிவன் இயக்கத்தில் உருவான படம். திருநங்கைகள் என்றாலே ஒருவித அருவெறுப்பு, பயம் என்றே பழக்கப்பட்டுவிட்டோம். ஒருசில ஆண்டுகளாகதான் அவர்களை பற்றிய சிறு புரிதல் வந்துள்ளது. சென்ற ஆண்டு சி என் என் தொலைக்காட்சியில் அவர்களைப்பற்றி ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பினார்கள். அதுவும் எனது பார்வையை மாற்ற வழிசெய்தது என்றே சொல்லவேண்டும்.

இந்த படத்தில் தான் திருநங்கை என்பதை காட்டிக்கொள்ளாத தனது சிற்றப்பாவை வெளிக்கொணர பாடுபடும் ஒரு பெண் குழந்தையின் கண்ணோட்டத்தில் காண்பித்திருப்பார் இயக்குனர். அண்ணனுக்கும், சமூகத்துக்கும் பயந்து ஆண் வேடத்திலேயே அந்த திருநங்கை இருப்பார். எனினும் அவருக்குள் கூவாகம் செல்லவேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருக்கும். அந்த பெண் குழந்தையின் பெற்றோர் தங்கள் மகளை தன் தம்பியின் பொறுப்பில் விட்டுவிட்டு மூன்று நாட்கள் வெளியூர் சென்றுவிடுவார்கள். அந்த திருநங்கை தன் அண்ணன் மகளுக்கு தெரியாமல் எப்படியோ கூவாகம் சென்றுவிடுவார். அவரை தேடி அந்த பெண் குழந்தை சென்று யாருமே தெரியாத ஊரில் எப்படி தன் சிற்றப்பாவை கண்டுபிடித்து திரும்ப அழைத்துக்கொண்டு வருகிறார் என்று காண்பித்திருப்பார்கள். இறுதியில் அவர் மற்றவர் நலனுக்காக என்றென்னி வீட்டைவிட்டு சென்றுவிடுவார். இந்த படத்தில் திருநங்கைகளின் மனநிலை, சமூகத்தில் அவர்கள் அனுபவிக்கும் சங்கடங்கள், கூவாகத்தில் நடைப்பெறும் நிகழ்ச்சிகள், சடங்குகள் என பலவற்றை காண்பித்திருப்பார்கள். அந்த நிகழ்ச்சிகளே நம்மை பாதிக்கும். அவர்கள் அனுபவிக்கும் இன்னல்களோ அதிகம். அவர்களைபற்றி எழுதும் சக்தி எனக்கில்லை; எனவே இங்கே அவர்களைப்பற்றி எழுதப்போவதில்லை.

இங்கே என்னை அவர்களை போலவே சரியளவு பாதித்தது அந்த பெண் குழந்தை சந்தித்திடும் அனுபவங்கள். முகவரி தேடிச்செல்லும் இடத்தில் தவறான இடத்தின் முகவரி அளித்து பெண்மையை சூறையாட பார்க்கும் ஆண் மாக்கள் பல இடங்களிலும் உள்ளனரே என எண்ணும்போது மனம் மிகவும் வேதனையடைகிறது. அவர்களிடமிருந்து அந்த குழந்தையை காப்பவறாக மற்றொரு திருநங்கையை காண்பித்திருப்பார்கள். அவரிடமும் தவறாக நடக்க முற்படும் சில மாக்களும் காண்பிக்கப்பட்டிருப்பார்கள். அந்த பெண்குழந்தையை நல்லவிதமாக கடைசியில் தன் வீட்டில் பார்க்கும்வரை மனதினுள் நிம்மதியில்லை.

ஏனோ பாதிக்கப்படுபவர்களை காணவே மனதினுள் அச்சம் எழுகிறது. அதிலும் பெண்கள் என்றால் கூடுதல் பயம். ஏனெனில் அவர்களை பாதிப்பிற்கு உள்ளாக்க சமுதாயத்தில் ஒரு கும்பல் எப்போதும் சுற்றிக்கொண்டே இருக்கிறது. ஒரு சிலரின் தவறான இன்பத்திற்காக மற்றவர்கள் பாதிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் என தெரியவில்லை. பெண்களே இவ்வாறான ஒன்றிற்கு ஊக்குவிப்பதாக சிலர் கூறிக்கொண்டு சமுதாயத்தை காப்பாற்றுவதற்காக கிளம்பியுள்ளனர். அவ்வாறாக இருப்பின் பெண்குழந்தைகள் ஏன் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். நொய்டா, நித்தாரி படுகொலைகள், வடமாநிலங்களில் நடக்கும் பால்ய விவாகங்கள் என்று பாதிக்கப்பட்ட குழந்தைகளா அதற்கு பொறுப்பானவர்கள்? என்னவென்று சொல்ல நமது மக்களின் பழிசுமத்தும் மனப்பான்மையை...இதுதான் ஆங்கிலத்தில் எஸ்கேபிசம் என்பர்.

என்னதான் பெண்விடுதலை, பெண்முன்னேற்றம் என்று நாம் பேசிக்கொண்டிருந்தாலும் அவர்களுக்குரிய மரியாதையை சமூகம் சரியாக வழங்கவில்லையோ என்றே தோன்றுகிறது. பத்து வயது சிறுமியானாலும் சரி அய்ம்பது வயது பெண்ணாலும் சரி அவர்களின் தன்மானத்திற்கு, பெண்மைக்கு ஒரு மரியாதை இல்லையோ என்றே தோன்றுகிறது. படத்தில் ஏதும் மிகைப்படுத்தி காட்டவில்லை என்பதற்கு செய்திதாள்களில் நிதமும் வந்து கொண்டிருக்கும் செய்திகளே சாட்சி. பலாத்காரம், கற்பழிப்பு போன்ற செய்திகள் இல்லாத நாட்கள் என்று விடியும் என்றே தெரியவில்லை. இவ்வாறு நினைக்கையிலேயே வேதனையும், விரக்தியும், இந்த செய்கைகளை செய்யும் மனிதர்கள் மீது தீராத கோபமும்தான் வருகிறது.

மனிதர்கள் மாறுவார்களா? மனிதராக வாழ்வார்களா? சகமனிதரை மனிதராக பாவிக்கும், நடத்தும் மனப்பான்மை அனைவருக்குள்ளும் வளருமா என்பது கேள்வியாகவே உள்ளது. கேள்விக்கான பதில் ஆம் என்றால் மிகவும் நன்றாக இருக்கும். இந்த ஒரு மனமாற்றம் வந்தால் நல்லதொரு சமுதாயத்தை உருவாக்குகிறோம் என்ற நிம்மதி மனதில் இருக்கும்.

7 comments:

என்.இனியவன் said...

தாரே சமீன் பர் பார்த்துவிட்டேன்.
கட்டாயம் பெற்றோர் அனைவரும் பார்க்க வெண்டும்.

நவரசம் இப்போது தான் கேள்விப்படுகிறேன்.
//ஏனோ பாதிக்கப்படுபவர்களை காணவே மனதினுள் அச்சம் எழுகிறது.
அதிலும் பெண்கள் என்றால் கூடுதல் பயம். //
எனக்கும் அப்படித்தான்.

தேவன் மாயம் said...

அவனது திறமையை வெளிக்கொண்டு வரும் ஆசிரியராக அமீர் கான் நடித்திருப்பார். ஒரு அழகான ஓவியன் அந்த சிறுவனுள் புதைந்து இருப்பான். அந்த ஒரு ஆசிரியர் இல்லாவிடில் அந்த ஓவியன் யாருக்கும் தெரியாமல் சென்றிருக்க வாய்ப்பு உள்ளது.///

டிஸ்லெக்ஸியா குழந்தைகளுக்கு ஓவியம் போன்ற கலைகளில் திறமை இருக்கும் என்பது உண்மை!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சினிமாவைப் பற்றி மிக நீண்ட பதிவு என்றாலும் அலசியது சமுதாயப் பிரச்சனைகள் பற்றியது தானே தல.........

அதனால் குறிச்சொல்களில் சினிமா சேர்க்காதீர்கள்..

சேர்த்தால் சினிமாவுக்கான பக்கத்திற்கு தமிழ்மணத்தில் தள்ளிவிடுவார்கள்...

கையேடு said...

மணி சிறப்பாக வந்திருக்கிறது இரண்டு விமர்சனங்களும்.. மேலும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

//மாற்றம் ஒன்றே மாறுதலுக்குரியது என்பர்.//
மாற்றம் ஒன்றே மாறாதது என்று நினைக்கிறேன். இதைச் சரி பார்க்கவும்.

மணிநரேன் said...

நன்றி திரு.இனியவன், திரு.தேவன், திரு.சுரேஷ், கையேடு...

திரு.சுரேஷ்... சமுதாய பிரச்சனை என்றாலும் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் அதிகமென்பதால் குறிச்சொல்லில் அதனை சேர்த்துள்ளேன்.

இரஞ்சித்...நீ குறிப்பிட்ட விடயம் சரிதான். அந்த வாக்கியம் முடிவிற்கு சரியாக வராததுபோல தோன்றியதால் அதனை நீக்கிவிட்டேன்.

விக்னேஷ்வரி said...

மிக மிக அழகாக தெளிவாக அலசி இருக்கிறீர்கள் மணிநரேன். இவ்வளவு தெளிவான பார்வை, சிந்தனை உடைய உங்கள் போன்ற இளைஞர்களால் தான் நம் சமுதாயத்தை மாற்ற முடியும். கனவுகள் மெய்ப்படும். காலம் கைக்கூடும். காத்திருங்கள்.

மணிநரேன் said...

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி விக்னேஷ்வரி.
மனதின் நம்பிக்கை கண்முன்னே உண்மைநிலையாக மாறும் காலம் விரைவில் வரவேண்டும்.