Friday, April 24, 2009

இந்தியர் எனில் ஹிந்தி தெரியவேண்டுமா?

இந்த விடயம் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடந்தது. தஞ்சையிலிருந்து பாரி மாநகர் வந்துள்ள எனது நண்பனின் பெற்றோருடன் பாரியிலுள்ள ஓர்சே அருங்காட்சியகத்திற்கு சென்றிருந்தோம். அங்கே சந்தித்த இரண்டு விதமான நபர்களை பற்றி எழுதவேண்டும் என தோன்றியது.

உள்வாயிலில் ஒருவர் நின்றுகொண்டு புதிதாக வருவோர்க்கு வழிகாட்டிக்கொண்டிருந்தார். அவரை பார்த்தபோதே தமிழர் என்று தெரிந்தது. சிறிது தள்ளி நின்ற நாங்களும் தமிழிலேயே பேசிக்கொண்டு உள்ளே செல்வதற்கு தயார் செய்து கொண்டிருந்தோம். அவர் எங்களுக்கு வழிகாட்டுவதற்காக எங்களிடம் வந்து நாங்கள் எந்த ஊர், என்ன மொழி என்று ஆங்கிலத்தில் வினவினார். தமிழ் என்று உறுதிபடுத்திக்கொண்ட பின்னரே எங்களோடு தமிழில் சரளமாக பேச ஆரம்பித்து, நாங்கள் எவ்வாறு செல்லவேண்டும், என்னவெல்லாம் உள்ளன என்று விளக்கினார். பாண்டிச்சேரியை சேர்ந்த அவர், இந்த நாட்டில் குடியேறி பல ஆண்டுகள் ஆகிவிட்டதாக கூறினார். நம்மால் ஓரளவு நம் தமிழ் மக்களை அடையாளம் கண்டுகொண்டுவிட முடியும். அப்படியிருந்தும் அவர் எங்களிடம் மொழி யாது என்று அறிந்துகொண்ட பின்னரே இருவருக்கும் தாய்மொழியான தமிழில் பேசளாயினார். இவரைப்பற்றி எழுத காரணம் அடுத்த இரண்டு மணிநேரத்திற்குள் நாங்கள் சந்தித்த வடநாட்டு இந்தியரின் நேர்மாறான செயலே.

நாங்கள் ஒருபகுதியை பார்த்துவிட்டு சிறிது ஓய்வெடுக்க அமர்ந்தோம். நண்பனும் அவன் பெற்றோரும் ஒரு பக்கமும், அங்கு இடமில்லாததால் அவர்களுக்கு நேரெதிரே நானும் அமர்ந்தேன். இதற்கு சற்றுமுன்பே எங்களை கடந்து சென்ற அந்த மனிதரை கவனித்தேன். இந்தியர் என்று தெரிந்தது. நான் அமர்ந்தபின் என் பின்புறத்திலிருந்து “ க்யா பாய்” என்று ஹிந்தியில் ஒரு குரல். எனக்கு அந்த மனிதராகதான் இருக்கவேண்டும் என்றுபட்டது. ஆனால் திரும்பி பதிலளிக்க மனமில்லை. வெளிநாட்டில், யார் என்றே தெரியாத ஒருவரிடத்தில் இந்தியர் என்ற ஒரு காரணத்திற்காக ஹிந்தியில் பேச ஆரம்பித்தது எனக்கு சரியாகபடவில்லை. எனது பதில் இல்லாததால் ஆங்கிலத்தில் கேட்க ஆரம்பித்தார். லேசாக பேச்சு கொடுத்துவிட்டு எனக்கு ஹிந்தி தெரியாதா என்றார். அவ்வளவு தெரியாது என்றேன். அப்படியானால் பிரான்ஸ் நாட்டிலேயே பிறந்துவளர்ந்தாயா என்றார். இல்லை, நான் சென்னைவாசி; இங்கு வந்து நான்கு மாதங்கள்தான் ஆகின்றது என்றேன். உடனே இந்தியாவில் பிறந்து வளர்ந்துவிட்டு ஹிந்தி தெரியாமல் எப்படி இருக்கலாம் என கேள்வி எழுப்ப எனக்கு கோபம் அதிகரித்து. இந்த கேள்வியை எதிர்பார்த்தேன் என்றே சொல்லவேண்டும். இவ்வாறான மக்களை நமது நாட்டிலேயே நாம் பார்த்திருப்போம். சாதாரணமாக எனக்கு யாருடனும் சண்டையிட பிடிக்காததால், இந்தியர் என்றால் ஹிந்தி தெரியவேண்டியது அவசியம் இல்லை என்று அந்த நொடிக்கு பேச்சை முடித்தேன்.

இவர்கள் எல்லாம் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என எனக்கு புரியவில்லை. இவர்களுக்கு யார் சொல்லிக்கொடுத்தது இந்தியன் என்றால் ஹிந்தி தெரியவேண்டும் என்று. யார் போட்ட சட்டம் என்று தெரியவில்லை. சிலர் அது தேசிய மொழி என்று வாதிடுவர். அது அலுவல் மொழியே தவிர தேசிய மொழி கிடையாது. இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை அறியாமல் நம்மிடம் விவாதிக்கும்போது கண்டிப்பாக கோபம்தான் வரும். அவர் பற்றிய விவரம் விசாரித்தபோது இரசாயன பொறியாளர் எனவும், மத்திய பிரதேசத்துக்காரர் என்றும், செர்மனி நாட்டிற்கு ஒரு குழுவுடன் அலுவல் சந்திப்பிற்கு வந்துவிட்டு, பாரி மாநகர் பார்க்க இரண்டு நாட்கள் வந்ததாகவும் கூறினார். அலுவல் அதிகாரிகளிடம் பொதுமொழியான ஆங்கிலத்தில்தானே பேசுவார்கள், பேசியாகவேண்டும்; அப்படியிருக்க இவர்கள் மற்ற இடங்களில் தம் நாட்டினர் எல்லோரிடமும் ஹிந்தியில் பேச முற்படுவது என்ன நியாயம் என்றே தெரியவில்லை.

அதோடு விட்டாரா அவர். வாழ்வதற்கு எந்த நாடு (இந்தியா / பிரான்ஸ்) சிறந்தது என்றார். ஒப்பிடுவதில் எனக்கு விருப்பமும் இல்லை, அது சரியும் இல்லை. எனவே, இரண்டிலும் பல நல்லது- கெட்டது உள்ளது, அது தனிப்பட்டவர் விருப்பம் என நான் கூற, உனது விருப்பத்தைதான் கேட்டேன், நீ எதை விரும்புகிறாய் என்று ஆரம்பித்தார். இங்கே இருக்கும் நல்லதை எடுத்துக்கொண்டு நீ நமது நாட்டில் பயன்படுத்தலாமே என்றும் கூற, எனக்குள் ஏற்கனவே இருந்த என் கோபம் அதிகமானது. என்னைப்பற்றி ஒன்றுமே தெரியாத ஒருவர் இவ்வாறான அறிவுரைகள் கூறவேண்டிய அவசியமேயில்லை. அதோடு ஒருவர் கேட்கும்/சொல்லும் விதத்திலேயே எந்த மனநிலையிலிருந்து கேட்கிறார்/சொல்கிறார் என நம்மால் பெருமளவு யூகித்துவிட முடியும். ஏற்கனவே மொழி விடயத்தில் அவரின் பரந்த மனப்பான்மையை புரிந்துகொண்டதால், நான் எப்போதுமே நல்ல விடயங்களை கண்டு அவற்றைதான் செய்கிறேன் என்றும், விதிப்படிதான் எப்போதும் நடக்கிறேன் என்றும் வந்த கோபத்தை காட்டிக்கொள்ளாமல் சொல்லிமுடித்தேன். அப்போதே சரியாக என் நண்பன் வந்து அடுத்த இடம் செல்ல அழைத்துக்கொண்டு போய்விட்டான்.

அவன் பின்னர் என்ன சண்டைபோட்டுக்கொண்டிருந்தாய் என வினவ, நான் இந்த ஹிந்தி மொழி பிரச்சினையை கூறினேன். அவனது ஒரே பதில் அந்த வகையான மனிதர்கள் என்னிடம் பேசியிருக்கவேண்டும், சரியான பதில் கொடுத்திருப்பேன் என்றான். அது உண்மைதான். என்னைவிட அதிக மொழிப்பற்றும், மொழி அறிவும் உடையவன். அந்த மனிதர் தப்பித்தார் என்றே சொல்லவேண்டும்.

------------------------------------------------------------------------------------------------

இது சென்ற ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று நடந்தது. நாங்கள் நண்பர்கள் மூவர் சேர்ந்து இந்த பல்கலைகழகத்தில் உள்ள ஒருசில இந்திய மாணவர்களை இரவு விருந்து உணவிற்கு அழைத்திருந்தோம். பலரை நாங்கள் முதல்முறையாக பார்கிறோம். அங்கு இருந்த எங்களில் மூவர் தமிழ்; மற்ற ஆறு பேரும் ஆந்திரா, மும்பை மற்றும் வடமாநிலத்தவர்கள். பரஸ்பரம் அறிமுகம் செய்துகொண்டு பேசிக்கொண்டிருந்தோம். அனைவரும் இருப்பதால் நாங்கள் மட்டும் ஒரு மொழியில் பேசினால் சங்கடப்படுவார்களோ என்றென்னி தமிழ் நண்பரிடம் ஆங்கிலத்தில் ஏதோ பேசிக்கொண்டிருந்தேன். ஒருவன் வந்து அனைவரும் இருப்பதால் பொது மொழியாம் ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்றான். அவன் நாங்கள் தமிழில் பேசிக்கொண்டிருந்ததாக கற்பனை செய்துகொண்டு அறிவுறித்தினான். வந்த கோபத்தை காட்டிக்கொள்ளாமல் நாங்கள் இதுவரை ஆங்கிலத்தில்தான் பேசிக்கொண்டிருந்தோம், அனைவரோடும் இருப்பதாலும், அனைவருக்கும் புரியவேண்டும் என்பதாலும் தமிழில் அங்கே பேசிக்கொள்ளவது நன்றாக இருக்காது என்பது எங்களுக்கு தெரியும் என்றும் எடுத்துரைத்தேன். சிரித்துக்கொண்டான்.

அவர்களின் செய்கையோ மாறுபட்டது. அவர்களின் அறிமுகம் மட்டுமே ஆங்கிலத்தில்; பிறகு அவர்கள் ஹிந்தியில் பேசிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கு அவர்கள் சொன்ன விளக்கம் ஆங்கிலத்தில் சொன்னால் அவர்கள் சொல்ல விரும்பிய துணுக்குகள், நகைச்சுவைகளின் சாராம்சம் வெளிப்படாது என்பதாகும். இது எந்த ஊரின் நியாயம் என தெரியவில்லை. ஆங்கிலம் தெரிந்த அவர்களுக்கு அயல்நாட்டிலும் பிற மாநிலத்தவர்கள் இருந்தாலும் ஆங்கிலத்தைவிடவும் ஹிந்தி பொதுமொழியாகிவிட்டது. மற்றவர்கள் அவர்கள் மொழியில் பொது இடத்தில் பேசிக்கொண்டால் தவறு; ஆனால் ஹிந்தி மொழிக்காரர்கள் மட்டும் அப்படி பேசிக்கொள்ளலாம்.

எனக்கு ஹிந்திமொழி மீது வெறுப்பு இல்லை. நானும் சிறிய வயதில் படித்துள்ளேன். ஆனால் அந்த மொழி பேசும் இப்படிப்பட்ட மக்களின் செய்கைதான் அந்த மொழியை அவர்களிடம் பேசக்கூடாது என்ற நிலைக்கு என்னை தள்ளிவிட்டுள்ளது. ஹிந்தி தவிர மற்ற மொழியே தெரியாதவர்கள் பேசினால் முடிந்தவரை எனக்கு தெரிந்த ஹிந்தியில் பதில் கூற முயற்சிப்பேன். ஆனால் மற்ற நாட்டவரிடம் ஆங்கிலம் பேச முடியும்; மற்ற மாநிலத்தவரிடம் ஹிந்தியில்தான் பேச முடியும் எனில் அவ்வாறான நட்போ, உறவோ தேவையேயில்லை என நினைக்கிறேன். மொழி என்பதே நமது கருத்துக்களை மற்றவர்களிடம் எடுத்து செல்ல பயன்படும் ஒரு சாதனம். அப்படியிருக்க அனைவருக்கும் தெரிந்த, புரிந்த மொழியை உபயோகிக்காது தம் மொழியை திணிப்பது சரியாகபடவில்லை. பல மொழிகளை கற்றுக்கொள்ளலாம், கையாளலாம்; ஆனால் தம் மொழியை மற்றவர் மீது யாரும் திணிக்கக்கூடாது என்பது என் கருத்து.

7 comments:

பதி said...

எனக்கும் இது போல ஏராளமான அனுபவங்கள்...

//உடனே இந்தியாவில் பிறந்து வளர்ந்துவிட்டு ஹிந்தி தெரியாமல் எப்படி இருக்கலாம் என கேள்வி//
இது போன்ற கேள்விகளுக்கு இருக்கும் மனநிலையை பொறுத்து பதிலளிப்பேன்..

இது போன்ற அறைகுறைகளுக்காகவே ஒரு குட்டி பிரசங்கம் வைத்துள்ளேன்... அது நல்ல மனநிலையில் இருந்தால்... இல்லை எனில் அடுத்தமுறை இந்த கேள்வியை வேறு யாரிடமும் கேட்க தோண வண்ணம் எனது பாணியில் பதிலளிப்பேன் !!!!

//எனக்கு ஹிந்திமொழி மீது வெறுப்பு இல்லை. நானும் சிறிய வயதில் படித்துள்ளேன். ஆனால் அந்த மொழி பேசும் இப்படிப்பட்ட மக்களின் செய்கைதான் அந்த மொழியை அவர்களிடம் பேசக்கூடாது என்ற நிலைக்கு என்னை தள்ளிவிட்டுள்ளது.//

அதே !!!!!

விக்னேஷ்வரி said...

நான் டெல்லி வந்த பொழுதில் எனக்கு ஒரு ராங் கால் வந்தது. அந்த அம்மணி ஏதோ ஹிந்தியில் கேட்டார். அப்போது எனக்கு பள்ளியில் படித்த ஹிந்தி மட்டுமே தெரியுமென்பதால் எனக்கு ஹிந்தி தெரியாது என ஹிந்தியில் கூறினேன். உடனே ஹிந்துஸ்தானில் இருந்துட்டு ஹிந்தி தெரியாம ஏன் இருக்க என ஏடாகூடமாக திட்டி விட்டார். அதற்குப் பிறகு நல்ல ஹிந்தி கற்றுக் கொண்டு விட்டாலும், இது போன்ற வெறியாளர்களைப் பார்க்கும் போது கோபம் வருகிறது. இப்போதெல்லாம் யாராவது ஹிந்தி வெறியர்களைப் பார்த்தால், ஹிந்தியிலேயே திட்டி விடுகிறேன்.

DHANS said...

wonderfull even myself felt the same when i was in such situation. i am very tired to explain the difference between admistrative language and national language.

Anonymous said...

எனக்கு இந்த மாதிரி நிறைய அனுபவங்கள்... எல்லோருக்கும் பதில் சொல்லி சொல்லி ஹிந்தி மேல் ஒரு வகையான வெறுப்பை உண்டாக்கி விட்டார்கள்... ஆகவே ஏளனம் செய்யும் வடவர்களிடம் ஆங்கிலத்திலும், அமைதியான அடுத்தவரின் மொழியை மதிக்கும் வடவரிடத்தில் ஹிந்தியிலும் பேசுவது என் வழக்கம்.

மணிநரேன் said...

பதி, விக்னேஷ்வரி, DHANS, Raja -தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

RAMYA said...

உங்களின் அனுபவங்கள் படிக்கும்போது உங்களின் உணர்வுகள் என்னால் உணர முடிகின்றது.

பலரை எப்படி handle பண்ணறதுன்னே தெரியாமல் நடந்து கொள்ளுவார்கள்.

தெரியாத ஒருவர் நமக்கு அறிவுரை கூறினால் எப்படி ஏற்றுக் கொள்வது.

மொழிகள் தெரிந்து கொள்வது என்பது தனி மனிதனின் விருப்பமே

முதலாமவர் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார்.

ரெண்டாமவர் மனதை ரொம்ப நோக வைத்து விட்டார்.

மணிநரேன் said...

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி ரம்யா.