Monday, November 22, 2010

தலைக்கவசம் அழகிற்கல்ல - ஆபத்தை தடுக்க

சில வாரங்களுக்கு முன்னர் எப்பொழுதும் போல வீட்டிற்கு தொலைபேசியபோது காலையிலேயே அவர்கள் ஒரு துக்க நிகழ்விற்கு செல்வதாக கூறினர். ஒரு உறவினர் அதற்கு முந்தைய நாள் தவறிவிட்டதாகவும் அதற்கு செல்வதாகவும் கூறினர். இங்கு நான் வந்தபிறகு இந்த ஒன்பது மாதத்தில் எனக்கு அறிவிக்கப்படும் நான்காவது உறவின் மரணம். சிறிது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. காரணம், மிகவும் அதிக வயதாகாதவர்; நோயினால் அவதிப்படுவதாக அறியப்படாதவர். இறப்பின் காரணம் கேட்டபோது சாலை விபத்து என்று கூறினர். நமது ஊரை பொறுத்தவரை மிகவும் சாதாரணமாகிப்போன விடயமாகிவிட்டது இந்த விபத்துக்கள். இருசக்கர வாகனத்தில் இவரது நண்பருடன் சென்னை அன்னனூர் அருகே சென்றபோது வாகனத்தின் முன்சக்கரம் வெடித்துசிதறியதால் சாலையில் விழுந்து தலையில் அடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலில் பிழைத்துவிடுவார் என்று நம்பிக்கையளித்து இரண்டு நாட்கள் சிகிச்சையில் பயனின்றி மூளைச்சாவு ஏற்பட்டு உயிர் நீத்துள்ளார். வாகனத்தை ஓட்டிச்சென்றவர் அதிர்ஷ்டவசமாக கைமுறிவுடன் உயிர் தப்பியுள்ளார்.

இவர்கள் இருவரின் தலைக்கவசமும் வாகனத்தின் பக்கவாட்டில் மாட்டிவிடப்பட்டிருந்தது. இவரது மரணத்தை பொறுத்தவரை அதிர்ச்சியையும் மீறி அவர்மீது கோபம் அதிகமானது. என்னை பொறுத்தவரை தானே சென்று தேடிக்கொண்டதாகவே இது படுகின்றது. தலைக்கவசம் தன்னை பாதுகாத்துக்கொள்ள அணிந்துகொள்வதற்கா இல்லை ஏதோ அழகுபொருள் போல தொங்கவிடுவதற்கா? அவர்கள் தலைக்கவசத்தை அணிந்து சென்றிருந்தால் உயிர் தப்பியிருக்க வாய்ப்புகள் நிறைய உள்ளது.

பலரும் இவ்வாறு தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவதை பார்க்கிறோம். சென்னை போன்ற பெருநகரங்களிலேயே இவ்வாறென்றால் பிற சிறு நகரங்களில் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது. அங்கெல்லாம் தலைக்கவசம் என்றால் நம்மை ஏளனமாக பார்க்கின்றனர். நம் மக்களை பொறுத்தவரை எதுவுமே கடுமையான சட்டமாக இல்லாதவரை அதற்கு மதிப்பு கொடுத்து பின்பற்றுவது என்பதை தேவையற்ற ஒன்றாகவே நினைக்கிறார்கள். சில நாட்கள் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டம் இருந்தது. பின்னர் என்ன ஆனதோ தெரியவில்லை, அந்த சட்டம் திரும்ப பெறப்பட்டது. சட்டம் அமலில் இருந்தபோது பலரும் காவலருக்கு பணம் அழவேண்டுமே என்ற நோக்கிலாவது தலைக்கவசத்தை அணிந்து சென்றனர். நல்ல விடயங்கள் எல்லாம் சட்டமாகி அமலில் இருக்காது. எவராவது செல்வாக்குள்ளவர் மக்கள் அவதிப்படுகின்றனர் என்று தவறான உதாரணம் கூறியிருப்பாரோ என்று தெரியவில்லை, அரசு சட்டத்தை ரத்து செய்துவிட்டது. இதில் என்ன அவதி என்று புரியவில்லை. நிதிநிலை என்றால், அவ்வளவு செலவுசெய்து வாகனம் வாங்கும்போது, அதன் சிறுபகுதியில் தலைக்கவசம் வாங்குவது என்பது சிரமமாக இருக்காது. சிலரோ அதனை அணிவதால் தலைவலி, கழுத்துவலி போன்ற உடல் உபாதைகள் வருவதாக கூறுகின்றனர். சிறு பிரச்சனைகளுக்காக எவரேனும் உயிரை பணயம் வைப்பார்களா? அவ்வாறு இருப்பின் அவர்கள் வாகனங்களையே செலுத்தாமல் இருக்கலாம்.

இதற்கு எப்படி வேண்டுமானாலும் (எதிர்)விதண்டாவாதம் செய்யலாம். ஆனால், அவ்வாறு செய்பவர்கள், தங்களையும் மீறி தங்களுக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால், தங்களின் குடும்பத்தின் கதி என்னவாகும் என்று நினைத்துப்பார்பார்களா? எனது உறவினர் தன்னுடைய உடலின் பாகங்களை தானமளித்து சிலருக்கு வாழ்வளித்து சென்றுள்ளார். ஆனால், அவரின் மறைவால் வாடும் அவரின் மனைவிக்கும், இரண்டு சிறு பிள்ளைகளுக்கும் அவர்களின் வாழ்வில் நீங்காத சோகத்தையும், கேள்விகளையும் அல்லவா விட்டுச்சென்றுள்ளார். எவரும் தனிமனிதர்கள் இல்லை. ஒவ்வொருவரையும் நம்பியோ, சுற்றியோ குடும்பமோ, நட்போ, உறவுகளோ இருந்துக்கொண்டுதான் இருக்கும். அதனை நினைவில் கொண்டாவது இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிந்து செல்லலாமே.

இந்த விபத்தை கேள்விப்பட்டவுடன் என் மனதில் சில காலம் முன்னர் நடந்த நிகழ்ச்சி சிறிது நடுக்கத்தை மீண்டும் அளித்துச்சென்றது. சென்ற திசம்பர் மாதம் சென்னையில் இருந்தபோது எனது அப்பாவை அழைத்துக்கொண்டு தாம்பரத்திலிருந்து மைலாப்பூர் சென்றேன். இரு சக்கர வாகனத்தில் பயணம். தலைக்கவசம் அணியாமல் செல்லமாட்டேன்; சாலை இலகுவாக இருந்தால் நல்ல வேகத்தில் செல்வது பழக்கம். (60-70 கி.மீ). அன்றும் அவ்வாறே சென்றுகொண்டிருந்தேன். அப்பாவை பொறுத்தவரை என்னுடன் வரும்போது பார்த்துப்போ என்றுமட்டும் சொல்வார். என் மீது நம்பிக்கை அதிகம் (வேற வழி...) அடையாறு சிக்கனலில் நின்று, பின்னர் கிளம்பி சிறிது வேகம் எடுப்பதற்குள் ஏதோ வெடித்தது போன்ற சத்தம் கேட்டது. அதனோடு வாகனத்தின் பின்பக்கம் நிலைதடுமாறி செல்ல ஆரம்பித்தது. சாலையின் நடுவே சென்று கொண்டிருந்தேன். பின்சக்கரம் வெடித்துவிட்டது என்று புரிந்துவிட்டது. நல்லவேலையாக வேகம் அதிகமில்லாததால் பிரேக் பிடித்து வண்டியை நிப்பாட்டவும் எனது அப்பா சரியான பக்கத்தில் கீழே குதிப்பதற்கும் சரியாக இருந்தது. வேறு வண்டியில் சென்றுகொண்டிருந்த இரண்டு பேர் வாகனத்தை தூக்கி ஓரமாக செல்ல உதவினர். எனக்கு மயக்கம் வந்துவிட்டதோ என்று அவர்கள் நினைத்தார்களாம். சக்கரத்தில் ஆணி ஏறியிருந்தது அந்த டையரை மாற்றும்போது பார்த்தோம். அந்த சிக்னல் தாண்டியதுமுள்ள வேக தடுப்பான்களில் ஏறியிருக்கக்கூடும். எங்களின் நல்லநேரம் எங்கள் பின்னால் எந்த பேருந்தோ, பெரிய வாகனங்களோ வரவில்லை; நெருக்கடியான போக்குவரத்தும் இல்லை. நல்ல வேகத்தில் செல்லவில்லை. இல்லாவிட்டால் இன்று எங்கள் நிலைமை எப்படியிருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அந்த நிகழ்விற்கு பின்னர் மிகவும் அதிக எச்சரிக்கையோடு, சாலையை உற்றுநோக்கி வாகனத்தை செலுத்த ஆரம்பித்துவிட்டேன். என்னதான் வாகனம் என்கட்டுப்பாட்டிற்க்குள் இருக்கின்றது என்று கூறிக்கொண்டாலும், இவ்வாறான சில நிகழ்வுகள் சிறிது அச்சத்தை ஏற்படுத்தியே செல்கின்றன. அதிலும், நம்மை நம்பி மற்றவர் அமரும்போது நம்பிக்கையையும் மீறி மனதில் எச்சரிக்கை மணி ஒலிக்க ஆரம்பித்துவிடுகின்றது. இந்த விபத்திற்கு பின்னர் பின்னால் அமர்பவருக்கும் தலைக்கவசம் ஏற்பாடுசெய்ய வேண்டும் என்றும் முடிவெடுத்துவிட்டேன்.

இருசக்கர வாகனவோட்டிகள் தயவு செய்து தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள்.

6 comments:

Thekkikattan|தெகா said...

வணக்கம், மணிநரேன்!

என்னுடை முதல் பின்னூட்டம்.

//இவர்கள் இருவரின் தலைக்கவசமும் வாகனத்தின் பக்கவாட்டில் மாட்டிவிடப்பட்டிருந்தது. இவரது மரணத்தை பொறுத்தவரை அதிர்ச்சியையும் மீறி அவர்மீது கோபம் அதிகமானது.//

:(( வருத்தமான செய்தி.

இங்கும் அப்படித்தான் நம்மூரிலிருந்து வருபவர்கள் கை குழந்தைகளைக் கூட அதற்கான கார் சீட்டில் தனியாக வைத்து சீட் பெல்ட் பேட வேண்டியதாக இருக்கிறதே என்று கடிந்து கொள்வார்கள். ஆனால், அது குழந்தையின் உயிர் காப்பதற்காகவே என்பதனை உணர்வதில்லை. பாசத்தை பிரித்து விடுகிறார்களாம். ம்ம்ம்

மணிநரேன் said...

வாங்க தெகா...

இங்காவது சட்டத்திற்கு பயந்து வேறு வழியின்றி அதன்படி நடக்கிறார்கள். நம் ஊரில் அதுவும் சாத்தியமில்லையே!
பலரும் சீட்பெல்ட் போடுவதாக தெரியவில்லை.அதுதான் வருத்தமான விடயம்.

கையேடு said...

நல்ல விசயம் சொல்லிருக்க மணி, ஆனா என்ன ஒரு வருத்தமான செய்தியோட சேந்து வந்துருக்கு.


ஆனாலும்,சாரி மணி இன்னொன்னும் ஞாபகம் வந்துடுச்சு..

ஆளில்லாத சாலையில் தனியா போனாலும், கூட அழைத்துக் கொண்டு போய் விழுந்தது எல்லாம் எதனால.. :)) ஒரு வேளை ஆட்டோகியர் வண்டில லைசன்ஸ் எடுத்ததினால இருக்குமோ.. :))

மணிநரேன் said...

லைசன்ஸ் இல்லாம நல்லா ஓட்டுவேனு சொல்லிக்கிட்டு நம்ம கேம்பஸ்குள்ள ஒருத்தன் என்னை தள்ளிவிட்டதுதான் எனக்கு நியாபகம் இருக்கு. நீ ஏதோ மாற்றி சொல்வது போல இருக்கு.

கையேடு said...

அப்போ அன்னிக்கு ஓட்டினது நீயில்லயா..சாரி மணி மறதி அதிகமாயிடிச்சு.. :)

Pranavam Ravikumar said...

Good Post!