Thursday, June 4, 2009

குடகு மலைப்பயணம் - 2ஈ

மூன்றாம் நாள் காலை வீராச்பெட்டில் நல்லவிதமாக விடிந்தது. சாலையின் இருபக்கங்களிலும் காப்பித்தோட்டங்கள் வேலியாய் அமைந்துவர, நாங்கள் முதலில் சென்ற இடம் துபாரே யானைகள் முகாம். அந்த இடத்தில் வனத்துறை மூலம் யானைகள் பராமரிக்கப்படுகின்றன. பிரசித்தி பெற்ற மைசூர் தசராவிற்கும் அங்குதான் யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றன; விழாவில் இராசநடை போட்டு அவைகளும் வலம்வருகின்றன. காலை நேரத்தில் யானைகள் நதிக்கரைக்கு அழைத்து வரப்பட்டு யானைபாகர்களால் குளிப்பாட்டப்படும். ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தினால் பொது மக்களாகிய நாமும் அவற்றை குளிப்பாட்டலாம். இந்த வாய்ப்பெல்லாம் எப்போதாவதுதான் கிடைக்கும்; ஆதலால் நாங்கள் அவற்றை குளிப்பாட்ட பணம் செலுத்தி யானைகளின் வரவிற்காக காத்துக்கொண்டிருந்தோம்.


மாமிச மலைகளும் வந்தன. அவ்வளவு அருகில் பார்க்கவே பிரமிப்பாக இருந்தது. யானை பாகர்கள் மற்றும் வனத்துறை அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் சரியான இடத்தில் நின்றுகொண்டு அவற்றை குளிப்பாட்டி மகிழ்ந்தோம். குட்டி யானைகளை கண்டபோது அதிக மகிழ்ச்சியாக இருந்தது. குட்டிகள் தங்கள் தாய்களோடு முட்டிமுட்டி விளையாடுவது பார்க்க விருந்தாக இருந்தது. அவை நம்மை நோக்கி ஒடிவராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், அவை மெதுவாக முட்டினாலும் நம்மால் வலி தாங்கமுடியாது. குளியலிற்கு பின்னர் உணவு அளிக்கும் நேரம். அவற்றை யானைபாகர்கள் மட்டும்தான் அளிக்க முடியும்.களி உருண்டைகளை அவைகள் ஆனந்தமாக முழுங்கிக்கொண்டிருந்தன. சுதந்திரத்தை பறிகொடுத்ததால் மனிதன் அளிக்கும் உணவைதான் அவை உண்ணவேண்டும். தங்கள் விருப்பம்போல எங்கும் சென்று வேண்டியதை செய்ய முடியாது.

துபாரே முடித்து நாங்கள் சென்றது காவேரி நிசர்கதாமா என்னும் இடம். இந்த இடத்தில் மான்களும், முயல்களும் இன்னும் பிற உயிரினங்களும் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. ஏனோ இந்த இடம் மனதில் நிறைவாக நிற்கவில்லை. மதிய உணவை மட்டும் அங்கே முடித்துக்கொண்டு இறுதி இடமாகிய திபெத்திய மடமுள்ள பயிலக்குப்பே நோக்கி சென்றோம்.


இந்த இடத்தை பற்றி முதல்முறை சென்றபோதே குறிப்பிட்டுள்ளேன். இம்முறை மக்கள் நெரிசல் மிகவும் குறைவாக இருந்தது. சில மணிநேரங்கள் அங்கே கழித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

மூன்று நாட்கள் நிறைவுபெறும் நிலையில் இருந்தது. பல முக்கிய இடங்களை மூன்று நாட்களில் காணமுடிந்தது. ஒரு சில இடங்கள் விடுபட்டுவிட்டன. அவைகளை மற்றொரு சந்தர்ப்பத்தில் பார்க்க முடியும் என்கின்ற நம்பிக்கை இருந்தது. எத்துனை முறை வேண்டுமானாலும் சலிக்காமல் குடகிற்கு நான் செல்வேன் என்பதையும் உறுதியாக நம்புகின்றேன். சுகமான பல நல்ல அனுபவங்களை அளித்த குடகிற்கு மானசீகமாக நன்றிகூறிக்கொண்டு பெங்களூரு நோக்கி பயணத்தை துவங்கினோம். இரண்டாம் குடகு பயணமும் நிறைவாக அமைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.


3 comments:

பதி said...

மணி,

படங்கள் அருமை !!!!!!

விக்னேஷ்வரி said...

படங்கள் அசத்தலா இருக்கு.

மணிநரேன் said...

நன்றி பதி மற்றும் விக்னேஷ்வரி.

புகைப்படங்கள் எடுத்தது என் நண்பன் (சுருக்கமாக பிபி என்று அழைக்கப்படுபவன்).நல்ல புகைப்பட கலைஞன்.
நான் எடுத்தது எல்லாம் காணொலிகள் மட்டுமே.