Friday, June 5, 2009

இறைநம்பிக்கை - என் மனதின் ஓட்டம்

மனதினுள் சில காலங்களாக எழும் கேள்வி. எழுதி வைக்க வேண்டும் என நினைத்திருந்தேன். இறை நம்பிக்கை பற்றியது. நான் கடவுளை நம்புபவனே. ஆனால் அதற்காக எனக்கு நீ இதை செய்தால் நான் உனக்கு இதையெல்லம் தருவேன் என்று இறையிடம் பேசுவதில் எனக்கு நம்பிக்கையில்லை; பழக்கமுமில்லை. இது எனது கொள்கை. இறை நம்பிக்கை தனிமனித விருப்பம்/சிந்தனை என்றே எண்ணுகிறேன். சென்ற வாரம் விஜய் தொலைக்காட்சியில் கண்ட நீயா நானா நிகழ்ச்சி இந்த இடுகையை எழுத மேலும் ஊக்கப்படுத்திவிட்டது. கடவுளின் பெயரால் அனைத்தையும் செய்யும் பெற்றோருக்கும், அதற்கு எதிர்மாறான சிந்தனையுள்ள பிள்ளைகளுக்கும் இடையேயிலான வாக்குவாதம். பெற்றோரின் வாக்குவாதம் இறைநம்பிக்கை இல்லாமல் போனால் பிள்ளைகள் செய்யும் எதுவும் உருபடாது; அதோடு அவ்வாறான பிள்ளைகள் அவர்களை பொறுத்தவரை சமூகத்தில் கெட்ட பிள்ளைகளாக பார்க்கப்படுவர் என்கின்ற விதத்திலேயே சென்றுகொண்டிருந்தது. கொடுமையோ கொடுமை!!!! சிறிது ஆழ்ந்து யோசித்து பார்த்தால் அவர்களின் எண்ணத்தில் உள்ள அடிப்படை தவறு புலப்படும். ஆனால் அவர்கள் கண்களுக்கு அது தவறாக தெரிவதில்லை. எவருக்குமே தாம் செய்வது சரியே என்ற எண்ணம் மேலோங்கியிருக்கும்; விளைவு, மற்றவர் கூறும் கருத்திலுள்ள நல்லது தெரியாமலேயே போய்விடும்.

கடவுளை நம்பாதவர்கள் எல்லாம் கெட்டவர்களுமல்ல, வாழ்க்கையில் கெட்டு போனவர்களும் அல்ல. வளர்ந்த பல மேலைநாடுகளில் பலர் எந்தவொரு கடவுளையோ, மதத்தையோ நம்புவதில்லை. அதற்காக அவர்களை இறை நம்பிக்கையுள்ளவர்கள் கட்டாயப்படுத்துவதில்லை. அது தனிமனித விருப்பம். நம்பினால் வழிபட்டுக்கொள்; இல்லையேல் அவரவர் வழியில் போய்கொண்டேயிருங்கள். இதுதான் அவர்கள் கோட்பாடு. விடயம் அதோடு முடிந்தது. இதன் காரணமாக தனிமனித சுதந்திரம் பாதுகாக்கப்படுகின்றது. மனிதர்களுக்கிடையே உள்ள அன்பு குறையாமல் பாதுகாக்கப்படுகிறது. அன்பினை இழந்து இறைநம்பிக்கை வளர்த்து ஒரு பயனுமில்லை. அதனை அவர்கள் உணர்ந்துள்ளார்கள். அவர்களிடமிருந்து பலவற்றை பின்பற்ற நினைக்கும் நம் பெரும்பான்மை மக்களுக்கு இவ்வாறான நல்ல குணங்கள் கண்ணிற்கு தெரியவே தெரியாது.

நம்பிக்கை மனதிலிருந்து வரவேண்டும்; வெளியிலிருந்து கட்டாயமாக திணித்தால் அதற்குரிய பலன் இருக்காது. ஆழ்ந்த இறைஞானம் உள்ளவர்கள் இறைவன் தாயைபோன்ற கருணை கொண்டவன் என்றே கூறுவார்கள். ஒரு தாய் என்பவள் தனது பிள்ளை அவளை மறந்தாலும், அவளை விட்டகன்றாலும் இல்லை அவளை தூற்றினாலும் அவள் பிள்ளைக்கு தண்டனையெல்லாம் தரமாட்டாள். அதனைபோலவே கருணையுள்ளம் கொண்டவன் இறைவன் என்று நம்புவோர், அவனை நம்பாதவர்களை இறைவன் தண்டிப்பான் என்று கூறுவது எவ்வாறு சாத்தியமாகும். இறைவன் என்னும் ஒரு சித்தாந்தத்தின் ஆனிவேரையே பிடுங்கி எறிவது போலல்லவா உள்ளது. மனதிலிருந்து எழும் நம்பிக்கைக்கே ஊறு விளைவிக்கும் ஒரு செயலாகும். இதற்கு ஒரு காரணாமாக நான் எண்ணுவது தெளிவில்லாத மனபயம்.

தனி மனித நம்பிக்கை சார்ந்த ஒன்றை பயம் என்னும் திரையின் மூலமாகவே பார்க்க பழகிக்கொண்டனர். ஒரு காரியத்தை செய்யவில்லை என்றால் சாமி கண்ணை குத்திவிடும் இல்லையெனில் தண்டித்துவிடும் என்றுதான் குழந்தை பருவத்திலிருந்து பெற்றோர்களால் சொல்லி வளர்க்கப்படுகிறார்கள். பக்தியை வளர்க்கிறேன் என்று நினைத்துக்கொண்டு பயத்தை வளர்த்துவிடுகின்றனர். உண்மையில் பக்தியையும் நம்பிக்கையும் வளர்க்க விரும்பினால் இறைவன் அன்பானவன், அருளுள்ளம் கொண்டவன் என்று சொல்லி வளார்க்கலாமே? அன்பினை போன்றதோர் பினைப்பு சக்தி வேறெதுவும் உலகில் இல்லை. மனிதனால் உருவாக்கப்பட்ட பல மதங்களும் அதைதானே போதிக்கின்றது. அன்பின் மூலமாக இறைநம்பிக்கை ஊட்டப்பட்டால், நம்பிக்கை இல்லாதவன்கூட போகிறபோக்கில் கடவுளை பார்த்து ஒரு ஹாய் சொல்லிவிட்டு செல்வான். இறைவனுக்கு தினமும் பூசை செய்பவரைதான் பிடிக்கும் என்றில்லை. இறை பெயரை சொல்லி தீமைகள் செய்பவர்களைவிடவும் அவனை திட்டிக்கொண்டோ இல்லையெனில் அவனை பற்றி யோசிக்காமலேயே இருந்து மற்ற உயிர்களுக்கு மனதாலும், உடலாலும் நல்லது செய்பவனைதான் அந்த இறைவனுக்கு பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தவகையான கருத்தையெல்லாம் பலரும் எடுத்துக்கூறமாட்டார்கள்; தங்கள் செயலுக்கு எது ஒத்துவருமோ அதனை மட்டும்தான் மற்றவர்களிடம் கூறுவார்கள். அப்படியிருந்தால் நம்பிக்கை வராது; வெறுப்புதான் வளரும். புரிந்துகொள்வார்களா? தெரியவில்லை...

அதோடு, இன்று அறிவியல் மனிதன் கொண்டிருந்த பல நம்பிக்கைகளை தவிடுபொடியாக்குகின்றது. அண்டத்தின் துவக்கத்திலிருந்து அதன் தாக்கம் ஆரம்பிக்கின்றது. பலவிடயங்களுக்கு அதன் மூல காரணங்களை ஆய்ந்தறிந்து தெளிவாக பட்டியலிட்டுவிட்டது. பெற்றோர்களுக்கு தம் பிள்ளைகள் நன்றாக அறிவியல் படிக்க வேண்டும்; ஆனால் அதில் கூறப்பட்டுள்ள தங்கள் நம்பிக்கைக்கெதிரான விடயங்களை மட்டும் எடுத்துக்கொள்ள கூடாது. உதாரணமாக அண்டத்தின் பூர்வீகத்தையே எடுத்துக்கொள்ளலாம். அறிவியலின்படி பிக் பேங் என்பதின் மூலம் இந்த பிரபஞ்சம் உருவானது. ஆனால் இன்னமும் இறைவன் படைத்தான் என்றுதான் வீடுகளில் சொல்லிகொடுக்கப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் இந்திய அறிவியல் வல்லுனர்களில் பலரும் இறைவனால்தான் ஒவ்வொன்றும் நடப்பதாக கூறியுள்ளனர். அவர்கள் கற்றுத்தெரிந்துகொண்ட அறிவியல் சான்றுகள் கூடவும் இறைவனால்தான் அளிக்கப்படுவதாக கூறியுள்ளனர். இதற்கு என்ன காரணமாக இருக்கமுடியும்?? ஒன்று அவர்களுக்கே அவர்கள் படித்த, அறிந்துகொண்ட அறிவியல் மீது நம்பிக்கையில்லை என்று பொருள்கொள்ளலாம். அவ்வாறெனில், அவர்கள் மற்றவர்களுக்கு அறிவியல் போதிக்க முற்படகூடாது. மற்றொரு காரணம் பயமாக இருக்கும். இறைவன் இல்லை என்று சொல்ல பயம். ஒரு இடுகையில் படித்ததுபோல ஒருவர் மிகுந்த சங்கடங்களுக்கு ஆளாகும்போது தஞ்சமடைய இருக்கும் ஒரே இடம் இறைவன் என்ற ஒன்றுதான். இறைவன் இல்லை என்று சொல்லி அதனையும் இழக்க மக்கள் தயாராக இல்லை என்பதே நிதர்சனம்.

இறைவன் என்பதே ஒரு நம்பிக்கை சார்ந்த விடயம். ஆனால், அந்த சக்தியிடமும் பயத்தினால், ஒருவித எதிர்பார்பினால்தான் சரணாகதி; அன்பினாலோ, ஆத்மாத்தமான நம்பிக்கையினாலோ இல்லை என்பதுதான் பெருவாரியான இடங்களில் நடக்கின்றது. பக்தி பயத்தினால் உயிர்பெற்று வாழ்கின்றது.


4 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்கே இறைநம்பிக்கை தேவைப்படுகிறது.

பதி said...

மணி,

என்ன நம்ம "கடவுள் மாத்திரை" தொடர் மின்னஞ்சலின் 32 மடல்களையும் சேர்த்து ஒரு புத்தகம் போடலாமா? அங்கு போலாவே, இங்கும் நான் இதனை வேடிக்கை பார்க்க ம்ட்டுமே விரும்புகின்றேன் !!!!!

ஆகவே, நம்பிக்கை தொடர்பான விவாதங்களுக்கு வர விருப்பமில்லை.

//இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் இந்திய அறிவியல் வல்லுனர்களில் பலரும் இறைவனால்தான் ஒவ்வொன்றும் நடப்பதாக கூறியுள்ளனர்.//

இவனுங்க பெரும்பான்மையானோர் யாருன்னு விளக்கம் கொடுக்கனுமா என்ன?

;)

இவனுங்க படிச்சதும் பேருக்கு பின்னாடி நாய் வாலு மாதிரி ஒட்ட வைச்சுட்டு சுத்துற டிகிரியும் வயிறு வளர்க்க மட்டுமே என்பது என்னுடைய கருத்து. வேற நல்ல வாய்ப்பு கிடைச்ச பண்ணிகிட்டு இருக்குறத அப்படியே விட்டுட்டு போய்கிட்டே இருபாங்க.. படிப்பாவது புண்ணாக்காவது...

IISc ல என்ன விட அதிக நாள் இருந்திருக்கீங்க.. ஆகவே இந்த அறிவியல் ஆராய்சியாளர்களின் இறை நம்பிக்கையை பற்றி என்னை விட உங்களுக்கு அதிக அனுபவம் இருக்கும்....

//ஒன்று அவர்களுக்கே அவர்கள் படித்த, அறிந்துகொண்ட அறிவியல் மீது நம்பிக்கையில்லை என்று பொருள்கொள்ளலாம்.//

அது தெரிஞ்ச விசயம் தானே... :) அதனால் தான், இவனுங்க படிச்சதும் பேருக்கு பின்னாடி நாய் வாலு மாதிரி ஒட்ட வைச்சுட்டு சுத்துற டிகிரியும் வயிறு வளர்க்க மட்டுமே என குறிப்பிட்டேன்...

//அவ்வாறெனில், அவர்கள் மற்றவர்களுக்கு அறிவியல் போதிக்க முற்படகூடாது.//

அது எப்படி??? அது தானே நோகாம நல்லா காசு சம்பாரிக்க முடியும். அப்புறம் சமூகத்திலயும் பெரிய ஆள்னு காட்டிக்கலாம் இல்லையா...

//மற்றொரு காரணம் பயமாக இருக்கும். இறைவன் இல்லை என்று சொல்ல பயம்.//

இது நீங்க சொல்லுற ஆராய்சியாளர்களுக்கு கடவுள் மேல இருக்குற பயம் இல்லை. அடுத்தவங்களுக்கு அந்த இறைநம்பிக்கை மேல் உள்ள பயம். அதை வச்சு தானே இன்னமும் பல பேருக்கு காலம் ஓடுது.
அப்புறம் அதை எப்படி விட்டுட முடியும்???

கையேடு said...

:)

// இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில்...//

ஒரு புள்ளிவிபரப்படி என்றிருக்கவேண்டும் மணி..

மணிநரேன் said...

வருகைக்கு நன்றி முனைவர்.இரா.குணசீலன், பதி, இரஞ்சித்..

பதி....கடவுள் மாத்திரை மின்னஞ்சல்கள் பற்றி ஒன்னும் சொல்வதற்கு இல்லை. எங்கோ ஆரம்பித்து எங்கோ சென்று திடீரென ஒரு முடிவில்லாமல் முடிவுற்றது.

IISc என்று இல்லை. பல இடங்களிலும் சில நம்பிக்கைகளை பற்றி கேள்வியே கேட்ககூடாது என்று சொல்லி பொது இடங்களிலும் வற்புறுத்தும் போதுதான் இவர்கள் மீது அதிககோபம் வருகிறது.

இரஞ்சித்....ஆய்விலிருந்து புள்ளிவிவரம் கிடைத்ததால் ஆய்வென்றே குறிப்பிட்டுவிட்டேன் :)