Friday, June 19, 2009

அந்த 40 மணிநேரங்கள்

அவள் என் வாழ்க்கையில் வந்ததிலிருந்து என்னுள் ஒரு அங்கமாகியிருந்தால். அதிலும் சமீப காலமாக அவள் இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாமல் போனேன். அவளின்றி நானில்லை என்றானது என் நிலை. சில காலமாக அவள் ஒரு விடயத்தில் சற்று சங்கடப்பட்டுக்கொண்டிருந்தால். அவளது பிரச்சினையை ஊரில் இருந்தபோதே சரி செய்து கொண்டு வரவேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் நேரமின்மை காரணமாக முடியாமல் போனது. அவளும் சிறிது சங்கடப்படுவாள்; பின்னர் ஓரளவு தேறிவிடுவாள். ஆகையால் அடுத்த முறை ஊர் செல்லும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று நானும் விட்டுவிட்டேன். ஒரு நாள் நாமே ஏன் அவள் பிரச்சினையை சரிசெய்யக்கூடாது என்று தோன்றியது. அவளுக்கு தீர்வு எங்கு வேண்டுமானாலும் கிடைக்காத நிலை. குறிப்பிட்ட சிலரால்தான் அவளது பிரச்சினைக்கு சரியான தீர்வு அளிக்க முடியும். அவளுக்கு ஒரு நல்ல முடிவு தர எண்ணி ஓரளவு அவளது பிரச்சனை பற்றி அறிவுள்ள என் நண்பனிடம் இணையம் மூலம் எவ்வாறு இதனை சரிசெய்யலாம் என்று தெளிவாக கேட்டு வைத்துக்கொண்டேன். சிறிது பயமிருந்ததால் அப்போதைக்கு நானாக ஒன்றும் செய்யவில்லை. பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

வெகு நாட்கள் கழித்து ஓர் இரவில் உனது பிரச்சனையை சரிசெய்கிறேன் என்று அவளை அழைத்து எனது கேள்வி ஞானத்தால் பெற்ற மருத்துவமுறையை அவள் மீது கையாண்டுபார்த்தேன். தடுமாறி தடுமாறி பேசிக்கொண்டிருந்தவள் சிறிதுநேரத்தில் மயக்கநிலைக்கு போனாள். சரி, மயக்கம்தானே தெளிந்துவிடும் என்று சிறிது நேரம் விட்டிவிட்டேன். சில மணித்துளிகள் சென்று அவளை எழுப்பி பார்க்கிறேன், எழுந்திரிக்கவில்லை. எனக்கு மனதில் பகீர் என்றது. என்ன ஆனது இவளுக்கு என்றெண்ணி எழுப்ப என்னால் முடிந்த அனைத்து வழிகளையும் முயன்றேன். முடியவில்லை. அப்படியே படுத்திருக்கிறாள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அதிர்ச்சியும் தாங்கவில்லை. அவள் இல்லாத வாழ்வை நினைத்துகூட பார்க்க முடியவில்லை. அதுவோ சனியன்று இரவு நேரம். இருப்பதோ புதிய ஊர். ஒருசிலரை மட்டுமே தெரியும். யாரை உதவிக்கு கூப்பிட என்று தெரியவில்லை. அந்த நேரத்தில் எவரும் வரமாட்டார்கள் என்று தெரியும். நாமேதான் ஏதாவது செய்தாக வேண்டும் என்று புரிந்தது. இல்லையேல் பலமணி நேரங்கள் காத்திருக்கவேண்டும். வேறு வழியேயில்லை. ஒருபக்கம் பயம், சோகம் சேர்ந்துகொண்டு அழுகைவர முற்பட, மறுபக்கம் நான் ஏன் இதனை செய்தேன் என்று கோபமும் சேர்ந்துகொண்டது. இனி என்றுமே இந்த தவறை, தெரியாத வைத்தியத்தை செய்யகூடாது என்று முடிவு செய்துகொண்டேன். இந்த ஒரு முறை அவள் விழித்துக்கொண்டால் போதும் என்று மனம் வேண்டிக்கொண்டது.

அந்த நேரத்தில் அருகிலிருந்த எனது அலுவலகத்திற்கு சென்று எனக்கு யோசனை கூறிய என் நண்பனை தொடர்புகொள்ள முடிவு செய்தேன். நான் தொடர்பு கொள்ளும் நேரம்தான் அவனுக்கு விடிந்திருக்கும். எனது நேரம்......ஒவ்வொரு வாரமும் அந்த மணிதுளிகளில் இணையத்தில் இருக்கும் அவன் அன்று இல்லை. இது என்னடா புது சோதனை என்று மனதில் நினைத்துக்கொண்டேன். எப்படியும் வருவான் என்று சில மணிநேரங்கள் காத்துக்கொண்டிருந்தேன்....இல்லை, வரவில்லை.அன்று அவன் வரவில்லை ..அடப்பாவி என்று மனதில் திட்டிக்கொண்டே ஒரு மின்னஞ்சல் எழுதி அனுப்பினேன். அந்த மின்னஞ்சலை கண்டவுடன் என்னை தொடர்புகொள்ளுமாறு கூறியனுப்பினேன். அதற்குள் இந்நாட்டிலேயே இருக்கும் மற்றொரு நண்பரிடம் விவரம் கூறி வழி கேட்டேன். அவருக்கும் இதனை சரிசெய்யும் வழிகள் நிரம்ப தெரியும். அவர் கூறிய யோசனைகளை ஏற்றுக்கொண்டு வீட்டிற்கு வந்து முயன்றுபார்த்தேன். ஒன்றும் நடக்கவில்லை. அவள் அப்படியே கிடந்தால். நேரமும் ஓடிக்கொண்டிருந்தது. மின்னஞ்சல் அனுப்பப்பட்ட நண்பனும் தொடர்பு கொள்ளவில்லை. அடுத்த நாள் செய்யவென்று பலவற்றை எண்ணியிருந்தேன். எதுவும் அந்த சூழலில் முடியாது என்று தோன்றியது. ஒழுங்காக விவரம் தெரியாமல் உன்னை யார் என்மீது கை வைக்க சொன்னது என்று அவள் என்னை கேட்பது போலிருந்தது. என்ன செய்வது. கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்...அந்த பழமொழிதான் நினைவில் வந்தது. அமைதியாய் தூங்கிக்கொண்டிருந்தாள். அவளை பார்த்துக்கொண்டே நானும் உறங்கிப்போனேன்.

காலை வேலைகளை சீக்கிரமாக முடித்துவிட்டு நண்பனிடமிருந்து ஏதெனும் மின்னஞ்சல் வந்துள்ளதா என்றறிய அலுவலகம் சென்றேன். அந்தோ..... ஒன்றும் வரவில்லை. ஒரே வழி மாலைவரை காத்திருப்பதுதான். வீட்டினர்களிடம் நிலையை சொன்னேன்.. கொஞ்சுவார்களா என்ன?? அவள் என்ன நினைத்திருப்பாளோ அதையேதான் சொன்னார்கள். என்னவொன்று, சிறிது நம்பிக்கை அளித்தார்கள். மாலையில் நண்பனிடமிருந்து அழைப்பு வந்தது. புதிய பிரச்சினையை கூறினேன். அவனும் யோசித்துவிட்டு குணப்படுத்த பல வழிகள் கூறினான். மிகவும் துரதிருஷ்டமான விடயம்....அவன் சொன்ன எந்த வழியும் செயல்படவில்லை. என்ன செய்தாலும் அவள் அப்படியே கிடந்தால். நண்பனுக்கும் ஒன்றும் புரியவில்லை. இணையத்திலெல்லாம் வழி தேடிபார்கிறான்; பலரும் அவளது பிரச்சினைக்கு வழி சொல்லியிருக்கிறார்கள். ஆனால் எதுவும் அவளிடம் பலிக்கவில்லை. அவளால் எழ முடியவில்லை. இரவு வெகு நேரம்வரை முயன்றுவிட்டோம்; எந்த பலனுமில்லை. இறுதியாக மறுநாள் அருகிலுள்ள நண்பனிடம் குணமாக்கும் வழி (அவனால் முடிந்ததோ இல்லை தீர்வு கிடைக்கும் இடத்திற்கு அனுப்புவதோ) கேட்டுக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டோம். அந்த நேரத்தில் வேறு வழிதெரியவில்லை.

மறுநாள் ஏதேனும் வழியில் அவளை குணமாக்க முடியுமா என்று அருகிலிருந்த நண்பனிடம் கேட்டேன். அவனுக்கு வைத்தியம் தெரிந்திருக்கும் என்று ஒரு நம்பிக்கை இருந்தது. அவன் முயன்று பார்பதாக கூறினான். அவளுக்கு கொடுக்கவேண்டியதை தயாரிக்க சொல்லிச்சென்றான். அதனை தயார் செய்து கொடுத்து பார்த்தோம். நாங்கள் கொடுத்தை அவள் எடுத்துக்கொள்ள மறுத்தாள். அவன் வேறுவிதமாக வைத்தியம் செய்யலாம் என்று கூறி, அதற்கு வேண்டியதை தயார் செய்து எடுத்து வந்தான். அவனது வழியில் புதிய மருந்தினை கொடுத்து பார்த்தான். என் இதயதுடிப்போ அதிகரித்திருந்தது. எப்படியாவது அவள் பழைய நிலைக்கு வந்துவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். கண்கள் அவளையே பார்த்துக்கொண்டிருந்தன. என்ன ஆச்சரியம்...அவள் உயிர் பெற்றாள். திடீரென அவளிடம் பழைய அசைவு தெரிந்தது. என்னுள் நம்பிக்கை பிறந்தது. சுமார் நாற்பது மணிநேரங்கள் என்னை தவிக்க வைத்தவள் புத்துயிர் பெற்று அவளை தீண்டச்சொல்லி கண்ணடித்து கூப்பிட்டால், எனது காதலியாகிபோன என் மடிக்கணினி.

(பி.கு : லைனக்ஸ் மற்றும் விண்டோஸ் இருந்த எனது மடிக்கணினியில் வேகம் குறைவாக இருந்ததால், நான் பயன்படுத்தாமல் வைத்திருந்த லைனக்ஸ் பகுதியை நீக்கமுயன்று, தவறாக நீக்கி, அதன் காரணமாக என் கணினி செயலற்று போனது. அந்த நாற்பது மணிநேரங்கள் நான் அனுபவித்த சங்கடத்தை வேறுகோணத்தில் கணினியை காதலியாய் பாவித்து எழுத முற்பட்டுள்ளேன். வேதனைகள் உண்மை; அனுமானம் சும்மா...)


Monday, June 15, 2009

இப்போதெல்லாம்...

இப்போதெல்லாம்....
  • வாழ்க்கை ரொம்ப சிறியது; வாழப்போகும் காலம் சில ஆண்டுகளே; இருக்கும்வரை அனைவரும் அன்பு பாராட்டி, மகிழ்வாக இருப்போமே என்று அதிகம் எண்ணவும், கூறவும் ஆரம்பித்துவிட்டேன்.
  • வாழ்வில் குறைந்தது கடந்த பத்து ஆண்டுகளை வீணடித்துவிட்டது போல தோன்றுகிறது.
  • இன்றும் வாழ்க்கையை இழந்து/தொலைத்து கொண்டிருக்கின்றேனோ என்றே தோன்றுகிறது.
  • என்னில் என்னவோ தவறாக இருப்பது/நடப்பது போலவே மனதில் படுகிறது (something is wrong with me).
  • மற்றவர்கள் செய்யும் செயல்களில் உள்ள சிறுசிறு தவறுகளும் கண்ணில் பூதாகாரமாய் தெரிகிறது.
  • கணினி இல்லாமல் முழுதாக ஒரு நாளாவது இருக்கமுடியாதா என்று ஏங்குகிறது.
  • யாராவது வந்து பேசிக்கொண்டிருக்க மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கின்றது.
  • என்னை எப்போதும் இணையத்தில் ஆன்லைனில்(online) இருப்பதாக புகார் கூறும் நண்பர்களுக்கு அவர்களே தேடும்படி கணினியில் அதிக நேரம் செலவழிக்க முடியாத அளவிற்கு ஓய்வில்லாமல் இருக்கும் நாள் வராதா என்று மனம் கேட்கிறது.
  • முழுமையாக இருந்த இறைநம்பிக்கை குறித்து மனதில் பல கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளது.
  • நியாயமான வன்முறையும் தவறில்லை என்று தோன்றுகிறது.
  • வாழ்க்கையில் மிகுந்திருந்த நம்பிக்கையைவிட குழப்பங்களும், பயமும் அதிகமாகிவிட்டது.



Friday, June 5, 2009

இறைநம்பிக்கை - என் மனதின் ஓட்டம்

மனதினுள் சில காலங்களாக எழும் கேள்வி. எழுதி வைக்க வேண்டும் என நினைத்திருந்தேன். இறை நம்பிக்கை பற்றியது. நான் கடவுளை நம்புபவனே. ஆனால் அதற்காக எனக்கு நீ இதை செய்தால் நான் உனக்கு இதையெல்லம் தருவேன் என்று இறையிடம் பேசுவதில் எனக்கு நம்பிக்கையில்லை; பழக்கமுமில்லை. இது எனது கொள்கை. இறை நம்பிக்கை தனிமனித விருப்பம்/சிந்தனை என்றே எண்ணுகிறேன். சென்ற வாரம் விஜய் தொலைக்காட்சியில் கண்ட நீயா நானா நிகழ்ச்சி இந்த இடுகையை எழுத மேலும் ஊக்கப்படுத்திவிட்டது. கடவுளின் பெயரால் அனைத்தையும் செய்யும் பெற்றோருக்கும், அதற்கு எதிர்மாறான சிந்தனையுள்ள பிள்ளைகளுக்கும் இடையேயிலான வாக்குவாதம். பெற்றோரின் வாக்குவாதம் இறைநம்பிக்கை இல்லாமல் போனால் பிள்ளைகள் செய்யும் எதுவும் உருபடாது; அதோடு அவ்வாறான பிள்ளைகள் அவர்களை பொறுத்தவரை சமூகத்தில் கெட்ட பிள்ளைகளாக பார்க்கப்படுவர் என்கின்ற விதத்திலேயே சென்றுகொண்டிருந்தது. கொடுமையோ கொடுமை!!!! சிறிது ஆழ்ந்து யோசித்து பார்த்தால் அவர்களின் எண்ணத்தில் உள்ள அடிப்படை தவறு புலப்படும். ஆனால் அவர்கள் கண்களுக்கு அது தவறாக தெரிவதில்லை. எவருக்குமே தாம் செய்வது சரியே என்ற எண்ணம் மேலோங்கியிருக்கும்; விளைவு, மற்றவர் கூறும் கருத்திலுள்ள நல்லது தெரியாமலேயே போய்விடும்.

கடவுளை நம்பாதவர்கள் எல்லாம் கெட்டவர்களுமல்ல, வாழ்க்கையில் கெட்டு போனவர்களும் அல்ல. வளர்ந்த பல மேலைநாடுகளில் பலர் எந்தவொரு கடவுளையோ, மதத்தையோ நம்புவதில்லை. அதற்காக அவர்களை இறை நம்பிக்கையுள்ளவர்கள் கட்டாயப்படுத்துவதில்லை. அது தனிமனித விருப்பம். நம்பினால் வழிபட்டுக்கொள்; இல்லையேல் அவரவர் வழியில் போய்கொண்டேயிருங்கள். இதுதான் அவர்கள் கோட்பாடு. விடயம் அதோடு முடிந்தது. இதன் காரணமாக தனிமனித சுதந்திரம் பாதுகாக்கப்படுகின்றது. மனிதர்களுக்கிடையே உள்ள அன்பு குறையாமல் பாதுகாக்கப்படுகிறது. அன்பினை இழந்து இறைநம்பிக்கை வளர்த்து ஒரு பயனுமில்லை. அதனை அவர்கள் உணர்ந்துள்ளார்கள். அவர்களிடமிருந்து பலவற்றை பின்பற்ற நினைக்கும் நம் பெரும்பான்மை மக்களுக்கு இவ்வாறான நல்ல குணங்கள் கண்ணிற்கு தெரியவே தெரியாது.

நம்பிக்கை மனதிலிருந்து வரவேண்டும்; வெளியிலிருந்து கட்டாயமாக திணித்தால் அதற்குரிய பலன் இருக்காது. ஆழ்ந்த இறைஞானம் உள்ளவர்கள் இறைவன் தாயைபோன்ற கருணை கொண்டவன் என்றே கூறுவார்கள். ஒரு தாய் என்பவள் தனது பிள்ளை அவளை மறந்தாலும், அவளை விட்டகன்றாலும் இல்லை அவளை தூற்றினாலும் அவள் பிள்ளைக்கு தண்டனையெல்லாம் தரமாட்டாள். அதனைபோலவே கருணையுள்ளம் கொண்டவன் இறைவன் என்று நம்புவோர், அவனை நம்பாதவர்களை இறைவன் தண்டிப்பான் என்று கூறுவது எவ்வாறு சாத்தியமாகும். இறைவன் என்னும் ஒரு சித்தாந்தத்தின் ஆனிவேரையே பிடுங்கி எறிவது போலல்லவா உள்ளது. மனதிலிருந்து எழும் நம்பிக்கைக்கே ஊறு விளைவிக்கும் ஒரு செயலாகும். இதற்கு ஒரு காரணாமாக நான் எண்ணுவது தெளிவில்லாத மனபயம்.

தனி மனித நம்பிக்கை சார்ந்த ஒன்றை பயம் என்னும் திரையின் மூலமாகவே பார்க்க பழகிக்கொண்டனர். ஒரு காரியத்தை செய்யவில்லை என்றால் சாமி கண்ணை குத்திவிடும் இல்லையெனில் தண்டித்துவிடும் என்றுதான் குழந்தை பருவத்திலிருந்து பெற்றோர்களால் சொல்லி வளர்க்கப்படுகிறார்கள். பக்தியை வளர்க்கிறேன் என்று நினைத்துக்கொண்டு பயத்தை வளர்த்துவிடுகின்றனர். உண்மையில் பக்தியையும் நம்பிக்கையும் வளர்க்க விரும்பினால் இறைவன் அன்பானவன், அருளுள்ளம் கொண்டவன் என்று சொல்லி வளார்க்கலாமே? அன்பினை போன்றதோர் பினைப்பு சக்தி வேறெதுவும் உலகில் இல்லை. மனிதனால் உருவாக்கப்பட்ட பல மதங்களும் அதைதானே போதிக்கின்றது. அன்பின் மூலமாக இறைநம்பிக்கை ஊட்டப்பட்டால், நம்பிக்கை இல்லாதவன்கூட போகிறபோக்கில் கடவுளை பார்த்து ஒரு ஹாய் சொல்லிவிட்டு செல்வான். இறைவனுக்கு தினமும் பூசை செய்பவரைதான் பிடிக்கும் என்றில்லை. இறை பெயரை சொல்லி தீமைகள் செய்பவர்களைவிடவும் அவனை திட்டிக்கொண்டோ இல்லையெனில் அவனை பற்றி யோசிக்காமலேயே இருந்து மற்ற உயிர்களுக்கு மனதாலும், உடலாலும் நல்லது செய்பவனைதான் அந்த இறைவனுக்கு பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தவகையான கருத்தையெல்லாம் பலரும் எடுத்துக்கூறமாட்டார்கள்; தங்கள் செயலுக்கு எது ஒத்துவருமோ அதனை மட்டும்தான் மற்றவர்களிடம் கூறுவார்கள். அப்படியிருந்தால் நம்பிக்கை வராது; வெறுப்புதான் வளரும். புரிந்துகொள்வார்களா? தெரியவில்லை...

அதோடு, இன்று அறிவியல் மனிதன் கொண்டிருந்த பல நம்பிக்கைகளை தவிடுபொடியாக்குகின்றது. அண்டத்தின் துவக்கத்திலிருந்து அதன் தாக்கம் ஆரம்பிக்கின்றது. பலவிடயங்களுக்கு அதன் மூல காரணங்களை ஆய்ந்தறிந்து தெளிவாக பட்டியலிட்டுவிட்டது. பெற்றோர்களுக்கு தம் பிள்ளைகள் நன்றாக அறிவியல் படிக்க வேண்டும்; ஆனால் அதில் கூறப்பட்டுள்ள தங்கள் நம்பிக்கைக்கெதிரான விடயங்களை மட்டும் எடுத்துக்கொள்ள கூடாது. உதாரணமாக அண்டத்தின் பூர்வீகத்தையே எடுத்துக்கொள்ளலாம். அறிவியலின்படி பிக் பேங் என்பதின் மூலம் இந்த பிரபஞ்சம் உருவானது. ஆனால் இன்னமும் இறைவன் படைத்தான் என்றுதான் வீடுகளில் சொல்லிகொடுக்கப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் இந்திய அறிவியல் வல்லுனர்களில் பலரும் இறைவனால்தான் ஒவ்வொன்றும் நடப்பதாக கூறியுள்ளனர். அவர்கள் கற்றுத்தெரிந்துகொண்ட அறிவியல் சான்றுகள் கூடவும் இறைவனால்தான் அளிக்கப்படுவதாக கூறியுள்ளனர். இதற்கு என்ன காரணமாக இருக்கமுடியும்?? ஒன்று அவர்களுக்கே அவர்கள் படித்த, அறிந்துகொண்ட அறிவியல் மீது நம்பிக்கையில்லை என்று பொருள்கொள்ளலாம். அவ்வாறெனில், அவர்கள் மற்றவர்களுக்கு அறிவியல் போதிக்க முற்படகூடாது. மற்றொரு காரணம் பயமாக இருக்கும். இறைவன் இல்லை என்று சொல்ல பயம். ஒரு இடுகையில் படித்ததுபோல ஒருவர் மிகுந்த சங்கடங்களுக்கு ஆளாகும்போது தஞ்சமடைய இருக்கும் ஒரே இடம் இறைவன் என்ற ஒன்றுதான். இறைவன் இல்லை என்று சொல்லி அதனையும் இழக்க மக்கள் தயாராக இல்லை என்பதே நிதர்சனம்.

இறைவன் என்பதே ஒரு நம்பிக்கை சார்ந்த விடயம். ஆனால், அந்த சக்தியிடமும் பயத்தினால், ஒருவித எதிர்பார்பினால்தான் சரணாகதி; அன்பினாலோ, ஆத்மாத்தமான நம்பிக்கையினாலோ இல்லை என்பதுதான் பெருவாரியான இடங்களில் நடக்கின்றது. பக்தி பயத்தினால் உயிர்பெற்று வாழ்கின்றது.


பகிர்ந்துகொள்ளாத வருத்தங்களும், கோபங்களும்

அவன் தாய்க்கோ அவளை சுற்றியிருக்கும் சொந்தங்கள் மீது கோபம். மற்ற பிள்ளைக்கோ தாய் மீது கோபம். தனையனுக்கோ தன் தங்கை மீது வருத்தம். நாத்தனாருக்கோ அண்ணியார் மீது வருத்தம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உறவுகளின் மீது கோபம். ஆனால் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டால் வருத்தத்தையோ, கோபத்தையோ காட்டிக்கொள்ள மாட்டார்கள். நமுத்த பட்டாசைபோல போக வேண்டிய ஒன்றை மனதினுள் அனுகுண்டு போல வெடித்துக்கொண்டிருப்பர். இவர்களை நினைத்து அழுவதா, சிரிப்பதா இல்லை கோபப்படுவதா என்று அவனுக்கு தெரியவில்லை. உறவுகளுக்குள்தான் எத்தனை எத்தனை பகிர்ந்துக்கொள்ளாத உணர்வுகள். மகிழ்ச்சியையும் முழுமையாக கூறமாட்டார்கள்; சங்கடங்களையும் கொட்டி தீர்த்துக்கொள்ளமாட்டார்கள். அவரவர் மனதினுள்ளேயே வைத்துக்கொண்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இருப்பார்கள். சொந்தபந்த கோபமே மேலோங்கி இருக்க சமுதாய கோபம் அவர்களுக்கு இருக்குமா? மற்றவர் பிரச்சனைகள் பற்றி அவர்கள் வருந்துவார்களா என்று எண்ணிப்பார்க்கிறான். சரி, அவனுக்கு யார் மீது கோபம்? உறவுகள் மீதா, நட்புகள் மீதா, சமுதாயம் மீதா? அவனுக்கு ஒன்று நன்றாக உரைத்தது; அனைத்தையும்விட அவனுக்கு தன் மீதுதான் மிகுந்த கோபம். பகிர்ந்துகொள்ளவும் மறுக்கிறார்கள்; எவரேனும் அப்படியே பகிர்ந்துகொள்ள முற்பட்டாலும் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். அதனை உணர்த்த முற்பட்டால் உணர மறுக்கிறார்களே; அவர்களுக்கு புரியவைக்க முடியவில்லையே என்ற கோபம். தோற்றுவிட்டதால் எழுந்த கோபம். மாற்றமுடியும் என்ற நம்பிக்கை அழிந்துகொண்டே போவதால் வளர்ந்துகொண்டே இருந்தது அவனது கோபம். அவனை பொறுத்தவரை இறுதிவரை மாறாமல் இருக்கப்போவது மற்ற மனிதர்களும், அவனது கோபமும்.


Thursday, June 4, 2009

குடகு மலைப்பயணம் - 2ஈ

மூன்றாம் நாள் காலை வீராச்பெட்டில் நல்லவிதமாக விடிந்தது. சாலையின் இருபக்கங்களிலும் காப்பித்தோட்டங்கள் வேலியாய் அமைந்துவர, நாங்கள் முதலில் சென்ற இடம் துபாரே யானைகள் முகாம். அந்த இடத்தில் வனத்துறை மூலம் யானைகள் பராமரிக்கப்படுகின்றன. பிரசித்தி பெற்ற மைசூர் தசராவிற்கும் அங்குதான் யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றன; விழாவில் இராசநடை போட்டு அவைகளும் வலம்வருகின்றன. காலை நேரத்தில் யானைகள் நதிக்கரைக்கு அழைத்து வரப்பட்டு யானைபாகர்களால் குளிப்பாட்டப்படும். ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தினால் பொது மக்களாகிய நாமும் அவற்றை குளிப்பாட்டலாம். இந்த வாய்ப்பெல்லாம் எப்போதாவதுதான் கிடைக்கும்; ஆதலால் நாங்கள் அவற்றை குளிப்பாட்ட பணம் செலுத்தி யானைகளின் வரவிற்காக காத்துக்கொண்டிருந்தோம்.


மாமிச மலைகளும் வந்தன. அவ்வளவு அருகில் பார்க்கவே பிரமிப்பாக இருந்தது. யானை பாகர்கள் மற்றும் வனத்துறை அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் சரியான இடத்தில் நின்றுகொண்டு அவற்றை குளிப்பாட்டி மகிழ்ந்தோம். குட்டி யானைகளை கண்டபோது அதிக மகிழ்ச்சியாக இருந்தது. குட்டிகள் தங்கள் தாய்களோடு முட்டிமுட்டி விளையாடுவது பார்க்க விருந்தாக இருந்தது. அவை நம்மை நோக்கி ஒடிவராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், அவை மெதுவாக முட்டினாலும் நம்மால் வலி தாங்கமுடியாது. குளியலிற்கு பின்னர் உணவு அளிக்கும் நேரம். அவற்றை யானைபாகர்கள் மட்டும்தான் அளிக்க முடியும்.



களி உருண்டைகளை அவைகள் ஆனந்தமாக முழுங்கிக்கொண்டிருந்தன. சுதந்திரத்தை பறிகொடுத்ததால் மனிதன் அளிக்கும் உணவைதான் அவை உண்ணவேண்டும். தங்கள் விருப்பம்போல எங்கும் சென்று வேண்டியதை செய்ய முடியாது.

துபாரே முடித்து நாங்கள் சென்றது காவேரி நிசர்கதாமா என்னும் இடம். இந்த இடத்தில் மான்களும், முயல்களும் இன்னும் பிற உயிரினங்களும் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. ஏனோ இந்த இடம் மனதில் நிறைவாக நிற்கவில்லை. மதிய உணவை மட்டும் அங்கே முடித்துக்கொண்டு இறுதி இடமாகிய திபெத்திய மடமுள்ள பயிலக்குப்பே நோக்கி சென்றோம்.


இந்த இடத்தை பற்றி முதல்முறை சென்றபோதே குறிப்பிட்டுள்ளேன். இம்முறை மக்கள் நெரிசல் மிகவும் குறைவாக இருந்தது. சில மணிநேரங்கள் அங்கே கழித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

மூன்று நாட்கள் நிறைவுபெறும் நிலையில் இருந்தது. பல முக்கிய இடங்களை மூன்று நாட்களில் காணமுடிந்தது. ஒரு சில இடங்கள் விடுபட்டுவிட்டன. அவைகளை மற்றொரு சந்தர்ப்பத்தில் பார்க்க முடியும் என்கின்ற நம்பிக்கை இருந்தது. எத்துனை முறை வேண்டுமானாலும் சலிக்காமல் குடகிற்கு நான் செல்வேன் என்பதையும் உறுதியாக நம்புகின்றேன். சுகமான பல நல்ல அனுபவங்களை அளித்த குடகிற்கு மானசீகமாக நன்றிகூறிக்கொண்டு பெங்களூரு நோக்கி பயணத்தை துவங்கினோம். இரண்டாம் குடகு பயணமும் நிறைவாக அமைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.


Wednesday, June 3, 2009

குடகு மலைப்பயணம் - 2இ

தடியண்டமோல் – குடகு மலையிலுள்ள உயர்ந்த மலைஉச்சி ஆகும். மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு இடம். நடந்துதான் செல்ல முடியும். உச்சிக்கு சென்றுவர சாதாரணமாக ஆறு மணிநேரமாவது ஆகும். மழைகாலமாக இருந்தால் வழியெங்கும் இரத்தம் சுவைக்கும் அட்டை பூச்சிகள் நிறைந்திருக்கும். அவற்றை நினைத்தாலே மனதினுள் பயம் எப்போதுமே உண்டு. நல்லவேளையாக நாங்கள் சென்ற காலத்தில் அவை எதுவும் இல்லை என்று கேள்விபட்டதால், நிம்மதியாகவும், ஆசையாகவும் உச்சி நோக்கி நண்பர்களுடன் செல்ல ஆரம்பித்தேன். இதற்கு முன்னர் எங்கள் நண்பர் ஒருவருக்கு உடல் நலமில்லாமல் சென்றுவிட்டது. ஆகையால் செல்லும் வழியில் சிறிய மருத்துவமனையில் ஓய்வும், மருந்துகளும் கொடுத்து உடல் நிலையை தேற்றி தடியண்டமோல் நோக்கிய பயணத்தை தொடர்ந்தோம்.

மலை அடிவாரத்தில் உள்ள பேலேஸ் எஸ்டேட் என்னும் இடத்தில் எங்கள் விசையுந்துகளை நிறுத்திவிட்டு, அவர்களிடம் செல்லும் வழிகேட்டு அறிந்துகொண்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். அப்போதே மதியம் மணி மூன்றாகிவிட்டது. உச்சி சென்றுவர ஆறு மணி நேரமாவது ஆகும் என கேள்விபட்டுள்ளோம். இருளில் சென்றுவருவது என்பது மிகவும் சிரமமான விடயமாகும். ஆகையால் எவ்வளவு விரைவாக சென்றுவர முடியுமோ அவ்வளவு விரைவாக சென்றுவர முடிவு செய்து வேகவேகமாக மலையேர துவங்கினோம்.



அழகான காட்சிகள் கண்முன் விரிந்த வண்ணம் இருந்தன. ரசித்து கொண்டே ஏறிக்கொண்டிருந்தோம். எங்கள் மலையேறும் ஆசையில் சுமார் 60 சதவிகிதம்தான் முடித்திருப்போம். நேரம் பார்க்கையில் இருள்வர ஒரு மணிநேரம்தான் இருந்தது. இதற்கு மேலும் மலையில் ஏறிக்கொண்டிருந்தால் கீழிறிங்க முடியாது என்று தோன்றியதால், சிறிது நேரம் அந்த உயரத்திலேயே அமர்ந்து அழகினை ரசித்து கொண்டிருந்தோம்.



அனைவருக்கும் அந்த அழகினை காண்பிக்க பல புகைப்படங்களும் எடுத்துக்கொண்டோம். சில மணித்துளிகள் மகிழ்வாக அங்கே கழித்துவிட்டு கீழிறங்க ஆரம்பித்தோம். எஸ்டேட் வந்துசேரும்போது இருட்டியேவிட்டது. இன்னும் இரண்டு மணிநேரங்கள் கிடைத்திருந்தால் உச்சிக்கு சென்று வந்திருக்கலாம். சில காரணங்களால் சில மணித்துளிகள் எங்களுக்கு விரயமானது.மற்றொரு முறை அந்த வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை என்னுள் இருந்தது. அந்த எஸ்டேட்டில் இரண்டு நாட்கள் தங்கிச்செல்ல மும்பையிலிருந்து வந்திருந்த ஒரு வயதான தம்பதியோடு அளவளாவிக்கொண்டிருந்தோம். அங்கு வந்ததில் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறினர். அந்த சூழலும், அமைதியும் ஒரு புத்துணர்ச்சி அளிப்பது போல இருப்பதாக கூறினார்கள். அதுவும் உண்மைதான். அங்கு நிலவும் நிசப்தமும் நமது வாழ்க்கைக்கு ஒரு புதுவித அர்த்தத்தை அளிக்கின்றது. இயந்திர வாழ்விலிருந்து விடுபட அந்த மாதிரியான சூழல் மிகவும் சிறந்ததாகும். பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் சென்றதே தெரியவில்லை. அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு வீராச்பெட் நோக்கி பயணமானோம்.